ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ப.சிதம்பரம் :பாஜகவை தோல்வி அடைய செய்யும் 3 முக்கிய விடயங்கள்

mahalaxmi : லோக் சபா தேர்தலில் மூன்று முக்கிய விஷயங்கள் பாஜகவை
தோல்வி அடைய செய்யும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் ஐந்து மாநில தேர்தல் குறித்து விவாதம் செய்ய கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குழுவிற்கு தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டது.
இதன் முடிவில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அதன்படி மொத்தம் 67 விஷயங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதம் செய்வோம். லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. பாஜக அதில் பெரும் தோல்வி அடையும். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது என்றார். ப.சிதம்பரம் சொல்லும் முதல் காரணம், பெண்கள் பாதுகாப்பு பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். பாஜக ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிரான நிறைய குற்றங்கள் நடந்து இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது முக்கிய காரணம் ஆகும். இரண்டாவது விஷயம் தொடர்ந்து உயரும் விலைவாசி பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாகி இருக்கிறது, எல்லோருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று கூறிவிட்டு பிரதமர் மோடி, இப்போது தினமும் பெட்ரோல் விலையை ஏற்றுகிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுகிறார் என்று சிதம்பரம் கூறியுள்ளார். மூன்றாவது விஷயம் கடும் வேலைவாய்ப்பு திண்டாட்டம் பெரும் பிரச்சனையாக முடியும் என்கிறார். வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். எல்லோருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறிவிட்டு பாஜக ஏமாற்றிவிட்டது என்று ப.சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக