புதன், 24 அக்டோபர், 2018

19 ஆயிரம் வங்கி மோசடி; மக்களின் பணம் ரூ.90 ஆயிரம் கோடி மாயம்:.. மோடியின் ஆட்சியில்..

ஐஏஎன்எஸ் tamil.thehindu :  புதுடெல்லி, பிரதமர் மோடியின் ஆட்சியில் 19 ஆயிரம் வங்கி மோசடிகள் நடந்துள்ளன. அதனால் மக்களின் பணம் ரூ.90 ஆயிரம் கோடி மாயமாகியுள்ளது. 23 வங்கி மோசடியாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
''பிரதமர் மோடியின் ஆட்சியில் 19 ஆயிரம் வங்கி மோசடிகள் நடந்துள்ளன, இதன் மூலம் மக்களின் பணம் ரூ.90 ஆயிரம் கோடி மாயமாகியுள்ளது. ரூ.53 ஆயிரம் கோடி பணம் 23 மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டு அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியுள்ளனர்.

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெற்றிகரமாக நாட்டை விட்டுத் தப்பியுள்ளனர். மக்களின் பணத்துக்கு மோடி பாதுகாவலர் இல்லை. மக்களின் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை பாதுகாப்பாகச் செல்ல மோடி அரசு அனுமதித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி, அவரின் கணவர் ஜெயேஷ் பக்ஸி நடத்தும் நிறுவனம் மெகுல் சோக்சியிடம் இருந்து ரூ.24 லட்சம் பணம் பெற்றுள்ளனர். இந்தப் பணம் பிப்ரவரி 20-ம் தேதி பெறப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி வங்கியை மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியவர், மத்திய அரசால் தேடப்பட்டு வருபவர் என்று தெரிந்தும், அவரிடமிருந்து ஜேட்லியின் மகள் நிறுவனம் பணம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் ஜேட்லியும், வங்கி மோசடியாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அதிகாரபூர்வமாக உதவியுள்ளனர். சட்டப்படி அவர்களைப் பாதுகாத்து, அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளனர். நாட்டில் இத்தனை வங்கி மோசடிக்கும் காரணமான அருண் ஜேட்லியை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்காமல் பேச வேண்டும்.
அருண் ஜேட்லியின் மகள், மருமகன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இதுவரை விசாரணை நடத்தவில்லை''.
இவ்வாறு சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக