வியாழன், 25 அக்டோபர், 2018

18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் ....நீதிமன்றம் தீர்ப்பு .. இடைத்தேர்தலை சந்திக்க தயார் எடப்பாடி அறிவிப்பு

இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: முதல்வர்!மின்னம்பலம் : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தினகரன் இன்று மாலை குற்றாலம் செல்லவுள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (அக்டோபர் 25) தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன்,“தகுதி நீக்கம் சட்ட விரோதமானது இல்லை, சபாநாயகர் முடிவில் தவறில்லை. 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பளித்தார். மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு குறித்து சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “அரசியலில் பின்னடைவு என்று எதுவும் கிடையாது. இது ஒரு அனுபவம். தீர்ப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது முடிவின்படி செயல்படுவோம். 18 பேரும் முடிவெடுத்தால் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம், அவர்கள் வேண்டாம் என்று கூறினால் இடைத் தேர்தலைச் சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
இன்று மாலை குற்றாலம் செல்லவுள்ளதாகத் தெரிவித்த தினகரன், “திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தாலும் அதனை சாதகமாகவே பார்க்கிறோம். 20 தொகுதிகளிலும் வெல்வோம். தீர்ப்புக்காக நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாது. எடியூரப்பா வழக்கிலும் இதுபோன்றுதான் தீர்ப்பு வந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் சென்ற பின்னர்தான் எம்.எல்.ஏ.க்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றாலத்தில் பேட்டியளித்த தங்க.தமிழ்ச்செல்வன், “நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டை மாற்றிப் போட்ட பன்னீர்செல்வம் தற்போது எம்.எல்.ஏ. ஓட்டை மாற்றிப் போடாத எங்களுடைய நீக்கம் செல்லும் என்று சொன்னால் இந்த தீர்ப்பை எப்படி மதிப்பார்கள். ஆலோசனை செய்தபிறகு மேல்முறையீடா அல்லது இடைத் தேர்தலைச் சந்திப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்” என்று ஆவேசமாகக் கூறினார்.
சட்ட ரீதியாக மூன்று வாய்ப்புகள்
தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “நீதிபதி கொடுத்த தீர்ப்பின் சாரம்சம் வழக்கறிஞர்கள் யாருக்கும் தெரியாது. தீர்ப்பை வாசித்தவுடன், அதன் நகலை வழக்கை நடத்திய வழக்கறிஞர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் இன்று அதனை எடுத்துச் சென்றுவிட்டனர். எனவே தீர்ப்பின் மொத்த கரு என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளோம்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் முன்பு இவ்வழக்கு விசாரணையில் இருந்தபோது, திமுகவுடன் கூட்டு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சபாநாயகர் எடுத்த முடிவு சரியானதல்ல என்று கூறிவிட்டனர். ஆனால் இந்த விவாதம் நீதியரசர் சத்தியநாராயணன் முன்பாக எடுத்துக்கொள்ளப்படவேயில்லை. மேலும் இரண்டு தீர்ப்புகளும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் தீர்ப்பளிக்கப்போகிறேன் என்று நீதிபதி கூறினார். இதனை முன்பே கூறியிருந்தால், நாங்கள் இதனையொட்டி வாதத்தை முன்வைத்திருப்போமே, அதனை ஏன் செய்யவில்லை என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

பிற்சேர்க்கை :18 எம்.எல்.ஏ.க்களிடம் மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம், அல்லது இடைத் தேர்தலைச் சந்திக்கலாம். வழக்கை நடத்திக்கொண்டு, தேர்தலையும் சந்திக்கலாம் என்னும் மூன்றாவது வாய்ப்பும் உள்ளது” என்று தெரிவித்தார்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தகுதி நீக்க வழக்கில் இன்று (அக்டோபர் 25) தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன், 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து பல இடங்களில் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சிறப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இறைவனின் அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கு ஏற்கனவே தயாராகியிருந்தோம். தற்போது 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்தால் அதனை பற்றிச் சிந்திப்போம். மக்களுக்குத் தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
இது பின்னடைவல்ல, அனுபவம்தான் என்று தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “தினகரன் சொன்னது எந்த அனுபவம் என்று தெரியவில்லை. அவர் அதிமுகவிலிருந்து 10 வருடங்களுக்கு முன்பே நீக்கப்பட்டவர். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரனின் கருத்து எப்படி கட்சிக்குப் பொருந்தும்? ” என்று பதில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக