வியாழன், 11 அக்டோபர், 2018

ரஃபேல் – நிர்மலாவுக்கு 10 கேள்விகள்

savukkuonline.com :  பாதுகாப்பு அமைச்சர் ஒரு அப்பாவி. அவர் 2017, செப்டம்பர் 3இல் பொறுப்பேற்பதற்கு முன் ரஃபேல் விவகாரத்தில் நடந்த பல விஷயங்கள் அவருக்குத் தெரியாது. அவர் தன் சொந்த நிகழ்ச்சி நிரலைக்கூடச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டார் என்று தெரிகிறது.
இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் விமான ஒப்பந்தம் 2015, ஏப்ரல் 10 அன்று பாரீசில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டு, 2016 செபடம்பர் 23இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சர்ச்சையை உண்டாக்கி, விசாரணைக்கான கோரிக்கையை எழுப்பியது. அண்மையில், பாதுகாப்பு அமைச்சர், “நான் ஏன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டார். அப்பாவிகளுக்கு நாம் காட்டும் சலுகையின்படி அவருக்குக் காரணங்களை எடுத்துச் சொல்வதே முறை. இதோ பத்துக் காரணங்கள்:
1) இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகள், 126 ரஃபேல் இரட்டை இஞ்சின் பல் நோக்கு போர் விமானத்தை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 2012 டிசம்பர், 12இல் திறக்கப்பட்ட சர்வதேச அளவிலான ஏலத்தில் ஒரு விமானத்திற்கான விலை ரூ.526.10 கோடி எனக் கண்டறியப்பட்டது.
தயாரிப்பு நிறுவனமான டசால்ட் பறக்கும் நிலையில் 18 விமானங்களை வழங்கும். எஞ்சிய 108 விமானங்கள், தொழில்நுட்ப மாற்று ஒப்பந்தத்தின் கீழ், கிடைக்கப்பெறும் டசால்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்துஸ்தான் ஏரானாடிக்ஸ் லிமிடட் தயாரிக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, பிரதமர் 2015 ஏப்ரல் 10 அன்று புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கிறார். ஏற்கனவே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுப் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது ஏன் எனப் பாதுகாப்பு அமைச்சர் விளக்குவாரா?
2) புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா இன்னமும் வெளியிடப்படாத விலையில் 36 விமானங்களை வாங்கும். இந்திய விமானப் படை 126 போர் விமானங்கள் (7 பிரிவுகள்) தேவை எனக் கூறியிருந்தது, அதனிடம் தற்போது 31 விமானங்கள் (2 பிரிவுகள்) உள்ளன. 126 விமானங்கள் மற்றும் அதற்கு மேல் (7 பிரிவுகள்) தேவைப்படும்போது, அரசு 36 விமானங்கள் (2 பிரிவு) மட்டும் வாங்க முடிவு செய்தது ஏன்?
3) எல்லா விதங்களிலும், அதே விமானத்தை, அதே அம்சங்களுடன், அதே தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அரசு வாங்குகிறது. கடைசி வாசகம், 2015 ஏப்ரல் 10 அன்று வெளியான கூட்டு அறிக்கையில் உள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், விமானத்தின் விலை ரூ.1,670 கோடி (டசால்ட் தகவல்) என்பது உண்மையா? எனில், மும்மடங்கு விலை உயர்வுக்கான காரணம் என்ன?
4) புதிய ஒப்பந்தத்தில் விமானத்தின் விலை அரசு சொல்வது போல 9 சதவீதம் விலை குறைவானது எனில், அரசு ஏன் டசால்ட் வழங்கும் 126 விமானங்களை வாங்காமல் 36 விமானங்களை மட்டும் வாங்குகிறது?
5) புதிய ஒப்பந்தம் அவசரத் தேவை என முன்வைக்கப்படுகிறது. முதல் விமானம், ஒப்பந்தத்திற்கு 4 ஆண்டுகள் கழித்து 2019இல் மற்றும் கடைசி விமானம் 2022இல் வழங்கப்படும் எனும் நிலையில் இது எப்படி அவசரத் தேவைக்கானதாக அமையும்?
6) எச்.ஏ.எல். 77 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. பல தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தின் கீழ் பல விமானங்களைத் தயாரித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தில், எச்.ஏ.எல்.லுடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எச்.ஏ.எல்.லுடன் தொழில்நுட்பம் பகிர்ந்துகொள்ளப்படும் என்னும் அம்சம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
7) இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு பாதுகாப்பு பரிவர்த்தனையும், வெண்டருக்கு, ஆப்செட் நிர்ப்ந்தம் இருக்கிறது. 36 விமானங்கள் தொடர்பான விற்பனையில் ரூ.30,000 கோடிக்கான ஆப்செட் பொறுப்பு இருப்பதாக டசால்ட் தெரிவித்துள்ளது. எச்.ஏ.எல். பொதுத்துறை நிறுவனமாகும். 2014 , மார்ச் 3 அன்று அது டசால்டுடன் பணி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஆப்செட் பங்குதாரராகத் தகுதி பெற்றுள்ளது. முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலெண்டே, தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரை இந்திய அரசு ஆப்செட் பங்குதாரராகப் பரிந்துரைத்துள்ளதாகவும், இதில் தங்களுக்குப் பங்கு இல்லை என்றும் கூறியுள்ளார். இந்திய அரசு இதை மறுத்துள்ளது. அரசு எந்தப் பெயரையும் தெரிவிக்கவில்லையா? எனில் எச்.ஏ.எல். பெயரைப் பரிந்துரைக்காதது ஏன்?
8) பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை தில்லியில் 2017 அக்டோபர் 27 அன்று சந்தித்துப் பேசினார். அதே நாள் அவர் நாக்பூர் சென்றார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், நாக்பூர் அருகே, மிஹனில், ஆப்செட் தயாரிப்பு மேற்கொள்ளப்பட உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஆலைக்கான அடிக்கல் நாட்டினார். சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சருக்கும், பிளாரன்ஸ் பார்லியின் இந்த நிகழ்ச்சி பற்றித் தெரியுமா? தெரியாது எனில் மறுநாள் நாளிதழ்களில் படிக்கவில்லையா?
9) டசால்ட் மற்றும் தனியார் ஆப்செட் பங்குதாரர், 2016 அக்டோபர் செய்திக் குறிப்பில், அவர்களின் கூட்டு நிறுவனம் ஆப்செட் தேவையில் முக்கிய அங்கம் வகிக்கும் எனத் தெரிவித்துள்ளது. டசால்ட் தனியார் நிறுவனத்தை ஆப்செட் பங்குதாரராகத் தேர்வு செய்திருப்பது தனக்குத் தெரியாது எனப் பாதுகாப்பு அமைச்சர் கூறும்போது அவர் உண்மையைக் கூறுகிறாரா?
10) எச்.ஏ.எல். தொழிநுட்ப உரிமத்தின் கீழ், எம்.ஐ.ஜி., மிராஜ் மற்றும் சுகாய் விமானங்கள் மற்றும் தனது சொந்த தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் அனுபவம் பெற்றது. 2017-18இல் அதன் விற்றுமுதல் ரூ. 18,283 கோடியாகவும், லாபம் ரூ.3,322 கோடியாகவும் இருந்தன. அதன் சொத்துக்கள் ரூ.64,000 கோடி. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சர், எச்.ஏ.எல்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரின் அறிக்கையை மறுத்ததோடு, எச்.ஏ.எல்.லுக்கு எதிராகக் கருத்து கூறியுள்ளார். எச்.ஏ.எல்.லைத் தனியார் வசம் ஒப்படைப்பது அல்லது மூடுவது அரசின் நோக்கமா?
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப் பத்துக் காரணங்களை கூறியுள்ளேன். இன்னும் காரணங்கள் இருக்கின்றன. இனி அப்பாவிப் பாதுகாப்பு அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்.
ப.சிதம்பரம்
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக