புதன், 26 செப்டம்பர், 2018

பதவி உயர்வுகளில் SC, ST இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி: இடஒதுக்கீடு தீர்ப்பு!மின்னம்பலம்: அரசு பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு இடஒதுக்கீடு அவர்களுடைய மக்கள் தொகையின் அடிப்படையில் அளிக்க முடியாது என்றும் இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (செப்-26) தீர்ப்பளித்துள்ளது.
அரசு பதவிகளில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்குகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2006இல் உச்ச நீதிமன்றத்தில் அரசியல் அமர்வினால் நாகராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

2006இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு எஸ்சி/எஸ்டி மக்களில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அத்துடன் பல நிபந்தனைகளுக்குட்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை மறு பரீசீலினை செய்து சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அரசின் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும்,2006 இல் வழங்கப்பட்ட தீர்ப்பை பரிசீலித்து மறு தீர்ப்பு வழங்க இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியல் சட்ட அமர்வின் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இட ஒதுக்கீடானது எஸ்சி/எஸ்டி மக்கள் தொகையில் அடிப்படையில் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசின் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த அரசியல் சட்ட அமர்வு 2006இல் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பானது அமல்படுத்த முடியாத நிபந்தனைகளை முன்வைக்கிறது என்று கூறியது. பின்னர் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு அந்த மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது. இந்த வழக்கின் விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியல் சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்ற முடியாது என்று தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக