செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அழகு நிலைய வேதிப்பொருளால் தலைமுடி உதிர்ந்தது .. மாணவி தற்கொலை Karnataka


மின்னம்பலம் :அழகு நிலையத்தில் பயன்படுத்திய வேதிப்பொருள் காரணமாக தலைமுடி உதிர்ந்ததால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் நிட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபா-சைலா தம்பதியினர். இவர்களுடைய மகள் நேகா கங்கம்மா. 19 வயதான இவர், மைசூரில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் பி.பி.ஏ. படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த மாதம் 28ஆம் தேதியன்று மாணவி தேவி கங்கம்மா திடீரென மாயமானார். இதுகுறித்து மைசூர் காவல் துறையிடம் புகார் அளித்தனர் அவரது பெற்றோர். நேற்று (செப் டம்பர் 2) காலை நிட்டூர் பகுதியருகே உள்ள லட்சுமண தீர்த்த நதியில் ஒரு பெண் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அது நேகாவின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு, நேகா மைசூரில் இருக்கும் அழகு நிலையத்தில் தலைமுடியை வெட்டச் சென்றார். அங்கு பயன்படுத்திய வேதிப்பொருள் காரணமாக நேகாவின் தலைமுடி அதிகமாக உதிர ஆரம்பித்துள்ளது. இதனால் மனமுடைந்த நேகா கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதன் மூலமாக, அந்த குறைபாட்டைச் சரிசெய்துவிடலாம் என அவரது குடும்பத்தினர் சமாதானம் செய்தனர். அதன்பிறகு, நேகாவை கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் தொடர்ந்து முடி கொட்டி வந்ததால் அவர் விரக்தியில்இருந்துள்ளார். இந்த நிலையிலேயே, கடந்த 28ஆம் தேதியன்று யாரிடமும் கூறாமல் மாயமான நேகா தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமுடி உதிர்வு பிரச்சினையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக