புதன், 19 செப்டம்பர், 2018

பா.ரஞ்சித் : பராசக்தி அந்த காலத்திலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது .. முக்கியமான அரசியலை அது பேசி இருக்கிறது

vikatan.com - ayyanar-rajan" இயக்குநர் பா.இரஞ்சித் கலைஞர் கருணாநிதி குறித்து தனக்கு விமர்சனங்கள் இருப்பதாக தி.மு.க மேடையிலேயே பேசினார். அதற்கு அரங்கமே ஒரு நிமிடம் ஜெர்க் ஆனது.கலைஞர் புகழை நினைவுகூரும் வகையில், `கலைஞருக்கு கலை வணக்கம்’ என்கிற தலைப்பில் கூட்டம் நேற்றைய தினம் (17/09/18) நடத்தியது, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இதில், நடிகர்கள் தியாகராஜன், ராதாரவி, பொன்வண்ணன், பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், வெற்றிமாறன், பா.இரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டு, கலைஞரின் புகழ், பணி, திறமையை வியந்து பேசிய இந்தக் கூட்டத்தில், சர்ப்ரைஸ் என்ட்ரி தந்து தி.மு.க தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள், மு.க.கனிமொழியும், மு.க.செல்வி குடும்பத்தினரும்!.
நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியபோது அரங்கமே ஒரு நிமிடம் ஜெர்க் ஆனது. ரஞ்சித்தின் பேச்சு இதுதான்..


“என்னுடைய அப்பா தீவிரமான தி.மு.க. உறுப்பினர். வீட்டு `கேட்’டை உதயசூரியன் மாதிரியே வடிவமைச்சிருந்தார். அப்பா மூலமாதான் நான் கலைஞரைத் தெரிஞ்சுக்கிட்டேன். எங்க ஊர் வழியா கலைஞர் பெரியபாளையத்துக்குச் சென்ற ஒரு நாள், வேகமா போன கார்களில் அவரைத் தேடிய ஞாபகம் இப்போவும் வந்து போகுது. அதேநேரம், என்னோட தாத்தா `வெங்கல்’ பஞ்சாட்சரம் அந்த ஏரியாவுல முக்கியமான அ.தி.மு.க பிரமுகர். அவர் பெரியாரிஸ்ட். அவர் அ.தி.மு.க-வில் இருந்தப்போவும், கலைஞரையும், `பராசக்தி’யையும் அவருக்குப் பிடிக்கும். அவரும் நானுமே சேர்ந்து `பராசக்தி’யைப் பார்த்திருக்கோம். அந்தப் படம் எனக்கு முக்கியமான ஒரு வழிகாட்டி. அது உண்டாக்கிய தாக்கத்தை சும்மா சொல்லிட்டுப் போயிட முடியாது. அதேபோல, கலைஞர் கதை வசனத்தில் வெளியான `ஒரே ரத்தம்’ படத்தையும் முக்கியமான படமா நான் பார்க்கிறேன். மு.க.ஸ்டாலின், ராதாரவி ஐயா எல்லாம்கூட நடிச்சிருக்கிற அந்தப் படத்தில், `ஒன்றே குலம்; உண்மையே தெய்வம்’னு சொன்னார், ஐயா கலைஞர். உண்மையிலேயே சாதி என்ற கட்டமைப்பை உடைக்க அந்தக் காலத்திலேயே வலுவான வசனங்கள் எழுதப்பட்ட படம் அது.


கலைஞர் மீது எனக்கு விமர்சனங்களும் இருக்கு. ஆனா, அதைப் பற்றிப் பேசுறதுக்கான மேடை அல்ல இது. அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி, அவரைப் பற்றி நான் வியந்து பேசுறதுக்கான காரணம், அவர் கொண்டு வந்த திட்டங்கள்தான். கலைஞர் நிறுவிய `சமத்துவபுரம்’ திட்டத்தை எடுத்துக்கோங்க.. அது, எத்தனை மகத்தானது? சேரியும் ஊரும் ஒன்றாகணும்னு நினைச்சு அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரில்லையா… அது ரெண்டும் சேராம, தமிழன் எப்படி ஒன்றாவான்? சமத்துவ புரங்கள் உருவாக்கப்பட்டப்போ நான் காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அந்தச் சமத்துவ புரங்கள் மீண்டும் உருவாக்கப்படணும்னு ஆசைப்படுறேன்.
சமத்துவபுரம்
இன்னொரு முக்கியமான திட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது. கோவில் கருவறை தங்களுக்கானது மட்டுமேனு நினைச்சுக்கிட்டு இருந்தவங்க காதுல, எல்லோருக்கும் அங்கே உரிமை இருக்குனு உரக்கச் சொன்ன சட்டம் அது. இப்படி நிறைய விஷயங்களைப் பண்ணியிருக்கார் கலைஞர். அந்தத் திட்டங்கள் எல்லாத்தையும்… அதாவது, கலைஞரின் மனசுக்குப் பிடித்த பல திட்டங்களை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து முன்னெடுக்கணும்னு கேட்டுக்கொள்கிறேன், மகிழ்ச்சி!” என்று முடித்தார்.

பேச்சின் ஊடாக பா.ரஞ்சித், `கலைஞர் மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கு’ என்றபோதும், மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியபோதும் அரங்கத்தில் சில வினாடிகள் சலசலப்பு நிலவியதைக் காண முடிந்தது.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக