ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருவாரூரில் அழகிரிக்கு வெற்றி வாய்ப்பு? திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது இடம் ?

அழகிரியே அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுவாராக இருந்தால் 45 சதவீத வாக்குகளை அவர்கள் பெற முடியும் என கூறுகிறது இந்த கருத்துக்கணிப்பு.
ஆ.விஜயானந்த் : இனியும் ஸ்டாலினை நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அழகிரி. இந்த நேரத்தில் திருவாரூர் தொகுதி நிலவரம் குறித்து, அவரிடம் விரிவான அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.>இ
டைத்தேர்தல் தேதி அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார் மு.க.அழகிரி. `திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து அழகிரிக்கு விரிவான அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் திருவாரூருக்குப் பயணப்பட இருக்கிறார் அழகிரி’ என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை, மெரினா கடற்கரையில் கடந்த செப்.5-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார் மு.க.அழகிரி. பேரணியை அடுத்து எடுக்கப்போகும் முடிவு குறித்து, ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தார். தனி அமைப்பு தொடங்குவது தொடர்பாக வெளியான தகவலுக்கும், அழகிரி தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடந்தால், வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பது குறித்து அழகிரியின் கவனத்துக்கு விரிவான அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர் அரசியல் ஆய்வாளர்கள் சிலர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படியே, அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் அழகிரி.

“திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் மிகுந்த தயக்கம் காட்டுகிறது தி.மு.க. இன்னொரு ஆர்.கே.நகர் போல இந்த இரண்டு தொகுதிகளும் மாறிவிட்டால், அழகிரி தரப்பினர் தி.மு.க தலைமையைக் கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள்’ என அச்சப்படுகின்றனர். எனவே, தேர்தலை தள்ளிப் போடுவது குறித்தும் தி.மு.க தரப்பில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், இடைத்தேர்தலை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அழகிரி. ‘கட்சியில் பதவி வேண்டாம். உறுப்பினராக சேர்த்துக்கொண்டால் போதும்’ என ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்தபோதும் அவர் மனம் இரங்கவில்லை. இனியும் ஸ்டாலினை நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நேரத்தில் திருவாரூர் தொகுதி நிலவரம் குறித்து, அவரிடம் விரிவான அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது” என விவரித்த அரசியல் ஆய்வாளர் ஒருவர்,
மு.க.ஸ்டாலின்
“திருவாரூர் நிலவரம் தொடர்பாக வழங்கப்பட்ட அறிக்கையின் குறிப்புகளை ஆவலோடு கவனித்திருக்கிறார் அழகிரி. அந்த அறிக்கையில், ‘தமிழக அரசியல் 1975-ம் ஆண்டு வரையில் காமராஜர் எதிர்ப்பு என்ற புள்ளியில்தான் நகரத் தொடங்கியது. 1962-ம் ஆண்டு தஞ்சாவூரில் கருணாநிதி வெற்றி பெற்றபோது, திருவாரூரில் தி.மு.கவுக்கு நான்காவது இடம்தான் கிடைத்தது. அந்தத் தொகுதியில் முதலிடம் காங்கிரஸ் கட்சிக்கும் இரண்டாவது இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மூன்றாவது இடம் ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சிக்கும் கிடைத்தது. சொல்லப் போனால், ராஜாஜியின் நட்சத்திர சின்னத்தைவிடவும் உதய சூரியன் சின்னத்துக்கு மதிப்பு குறைவாகத்தான் இருந்தது.

அன்றைய தேதியில் திருவாரூரில் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு தி.மு.க-வுக்கு இல்லை. இன்று அதே தொகுதியில் செல்வாக்குடன் வளர்ந்திருப்பதற்குக் காரணம், கட்சி அல்ல. கருணாநிதியின் தனிப்பட்ட முயற்சிகள்தான். 1967-ம் ஆண்டு அமைச்சராகப் பதவியில் அமர்ந்ததும், திருவாரூரில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டார் கருணாநிதி. 2011, 2016-ம் ஆண்டில் தி.மு.க தோற்கும்போதும், திருவாரூர் தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை எடுத்து வெற்றி பெற்றார் கருணாநிதி.
இந்த வாக்குகள் அனைத்தும் கருணாநிதியின் மகனான நீங்கள் (அழகிரி) போட்டியிட்டால், உங்களுக்கு வந்து சேரும். கருணாநிதியின் விசுவாசிகள் உங்களை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். திருவாரூரில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு இல்லை. நீங்கள் நேரடியாகப் போட்டியிட்டால், அது ஸ்டாலினுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். 1996, 2006-ம் ஆண்டு தேர்தல்களில் கருணாநிதி முதல்வராவதற்காக உழைத்தவர்தான் நீங்கள். எனவே, திருவாரூர் தொகுதியில் உள்ள கருணாநிதியின் ஆதரவாளர்கள், உங்களை வெற்றி பெறச் செய்வார்கள்’ எனக் குறிப்பிட்டுவிட்டு, ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் உங்களுக்கு இரண்டாவது இடம் கிடைக்கலாம். 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு இங்கு 80 ஆயிரம் வாக்குகளும் ம.தி.மு.கவுக்கு 50 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. தி.மு.கவுக்கு 36 ஆயிரம் வாக்குகளே கிடைத்தன. இங்கு நீங்கள் நிறுத்தக் கூடிய சமுதாயம் சார்ந்த வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கலாம். இங்கும் தி.மு.க, மூன்று அல்லது நான்காவது இடத்துக்குப் போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன’ என விவரித்துள்ளனர். இந்தக் கருத்துகளை அழகிரியும் ஏற்றுக்கொண்டார். திருவாரூரில் நிற்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ‘திருவாரூரில் வெற்றி உறுதி; திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது இடத்துக்கு வருவோம்’ என நினைக்கிறார்” என்றார் விரிவாக.
“அழகிரி போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா?” என அவரது அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். “அவரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். இதனால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் அழகிரி. `நாமும் எவ்வளவுதான் அமைதியாக இருக்க முடியும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

 `திருவாரூரில் அவர் போட்டியிட வேண்டும்’ எனப் பலரும் சொல்கின்றனர். அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. `திருவாரூரில் உள்ள பாட்டி அஞ்சுகத்தம்மாள் வசித்த வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என எங்களிடம் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார். குறிப்பாக, மதுரையில் தேர்தல் வேலை பார்ப்பதற்கும் திருவாரூரில் பார்ப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அங்கு தி.மு.க-வுக்கு அடிப்படைக் கட்டமைப்பு இருக்கிறது. எங்களுக்கு அப்படியெதுவும் இல்லை. அந்த நேரத்தின் சூழல்களைப் பொறுத்தே முடிவை அறிவிப்பார்” என்றார் உறுதியாக.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக