வெள்ளி, 7 செப்டம்பர், 2018

தூய்மை பணியாளர் நலனுக்காக ஒரு சதம் கூட மோடியின் நான்கு ஆண்டுகளில் கொடுக்கப்படவில்லை

சிறப்புக் கட்டுரை: ஒரு பைசா கூட வழங்காத மோடி அரசு!மின்னம்பலம் :தீரஜ் மிஸ்ரா
நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அதுமட்டுமல்ல, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்ட நிதியில் ஏறத்தாழப் பாதியை மோடி அரசு இன்னும் செலவிடவில்லை.
தி வயர் செய்தி தளம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனு வாயிலாகக் கிடைத்த தகவல்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. ஒன்றிய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் ரூ.55 கோடி வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக ஒரு பைசா கூட வெளியிடப்படவில்லை. சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சுய வேலைவாய்ப்பு’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தகவல் அறியும் உரிமை மனுவுக்குக் கிடைத்த பதிலின்படி, 2006-07ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் ரூ.226 கோடி நிதியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிதியில் அனைத்துமே 2013-14ஆம் நிதியாண்டுக்கு முன்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பைசா கூட நிதி வழங்கப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ் மூன்று வழிகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்படுகிறது. முதலாவதாக, ஒருமுறை நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு துப்புரவுத் தொழிலாளருக்கு ஒரே ஒருமுறை மட்டும் ரூ.40,000 வழங்கப்படும். இதன் பிறகு அவரது குடும்பம் மறுவாழ்வு பெற்றுவிட்டதாக அரசு கருதுகிறது.
இரண்டாவதாக, மறுவாழ்வு வழங்கும் வகையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.3,000 வழங்கப்பட்டு திறன் மேம்பாடுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட கடன் தொகை வரையில் மானியம் வழங்கப்படுகிறது.
தகவல் அறியும் மனு வாயிலாகக் கிடைத்த தகவல்களின்படி, 2015-16ஆம் ஆண்டில் 8,627 நபர்களுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டிலோ (2018-19) இதுவரையில் 365 நபர்களுக்கு இந்த நிதியுதவி கிடைத்துள்ளது. அதேபோல, 2016-17ஆம் ஆண்டில் 1,567 நபர்களுக்கும், 2017-18ஆம் ஆண்டில் 890 நபர்களுக்கும் ரூ.40,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களும், இதுபோன்ற நிதியுதவிகளும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குப் போதுமானதல்ல என்று சஃபாய் கரம்சாரி அந்தோலான் அமைப்பின் நிறுவனரான பெஸ்வதா வில்சன் கருதுகிறார்.

வில்சன் பேசுகையில், “மறுவாழ்வு குறித்து விரிவான எண்ணமே இல்லை. துப்புரவுத் தொழிலாளர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. இது போதுமான திட்டமல்ல. பெண் துப்புரவுத் தொழிலாளர்களை இத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இத்திட்டத்தின் கீழ் கடன்களை அரசு வழங்குகிறது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்ற அச்சத்தில் மக்கள் கடன் பெறுவதற்கு அஞ்சுகின்றனர்.
தொழில் செய்யுமாறு அவர்களிடம் அரசு கூறுகிறது. ஆனால், பல காலமாக சமுதாயம் அவர்களைக் கால்களுக்கு கீழ் வைத்திருந்த நிலையில் அவர்களால் எப்படித் தொழில் செய்ய முடியும்? தொழில் செய்வதற்கு அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். கடன் வழங்குவதால் மட்டும் தொழில் செய்துவிட முடியாது. அதற்குப் பயிற்சியும் வேண்டும்” என்று கூறுகிறார்.
2006-07ஆம் ஆண்டுக்கும் 2017-18ஆம் ஆண்டுக்கும் இடையே இத்திட்டத்தின் கீழ் ஐந்து முறை மட்டுமே சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் நிதி வெளியிட்டுள்ளது. இன்னும் வியப்பூட்டும் விதமாக, 2011-12ஆம் ஆண்டில் அமைச்சகத்தின் கருவூலத்திற்கு தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ரூ.60 கோடியைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. 2006-07ஆம் ஆண்டில் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக ரூ.56 கோடி வெளியிடப்பட்டுள்ளது. 2007-08ஆம் ஆண்டிலோ ரூ.25 கோடியை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2008-09ஆம் ஆண்டில் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.100 கோடியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதுவே இத்திட்டத்துக்காக வெளியிடப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
இதுபோக, அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறு தொகையிலும் கூட பெரும் பங்கு இன்னும் பயன்படுத்தப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பைசா கூட வெளியிடப்படவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்ட தொகையில் ரூ.24 கோடி இன்னும் செலவிடப்படவில்லை.
2006-07ஆம் ஆண்டில் ரூ.56 கோடி வெளியிடப்பட்டுள்ளது; ஆனால் அதில் ரூ.10 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது; அந்தாண்டில் ரூ.45 கோடிக்கும் மேலான தொகை செலவிடப்படாமல் விடப்பட்டுள்ளது. இதேபோல 2007-08ஆம் ஆண்டில் ரூ.36 கோடி செலவிடப்படவில்லை. 2014-15ஆம் ஆண்டில் ரூ.63 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.36 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.24 கோடியும் செலவிடப்படவில்லை. செப்டம்பர் 22, 2017 வரையில் ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை.

1933ஆம் ஆண்டில் துப்புரவுத் தொழில் ஒழிப்பு தொடர்பான முதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு 2013ஆம் ஆண்டில் இரண்டாவது சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டாவது சட்டத்தின்படி, கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, சாக்கடை போன்றவற்றைச் சுத்தம் செய்வதற்கு மக்களைப் பயன்படுத்துவதற்கும், அதுபோன்ற தேவைகளுக்கு அவர்களின் சேவைகளை நாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 12 மாநிலங்களைச் சேர்ந்த 53,326 நபர்கள் தற்போது துப்புரவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையை (13,000) விட இது நான்கு மடங்கு அதிகமாகும்.
இதுமட்டுமே துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த இறுதித் தகவல் இல்லை. ஏனெனில், நாட்டிலுள்ள 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெறும் 121 மாவட்டங்களின் தகவல்களைக் கொண்டு மட்டுமே இத்தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை குறித்த உண்மையான தகவல்களை மாநில அரசுகள் வெளியிடுவதில்லை என்று சமூகச் செயற்பாட்டாளர்களின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ள 53,000 துப்புரவுத் தொழிலாளர்களில், 6,650 நபர்களை மட்டுமே மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் 28,796 துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர்.
அரசு சாரா அமைப்பான ஜன் சகாசின் இயக்குநரும், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினருமான ஆசிஃப் ஷேக் இந்த சர்வேக்கள் குறித்துப் பேசுகையில், “கடந்த 26 ஆண்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்களைக் கண்டறிவதற்கு மத்திய அரசு ஏழு தேசிய சர்வேக்களை நடத்தியுள்ளது. 1992ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வேயில் நாட்டில் 5.88 லட்சம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரியவந்தது. 2002-03ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.76 லட்சமாக உயர்ந்தது. பின்னர், அரசு சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்த பின்னர் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ எட்டு லட்சமாக (7,70,338) உயர்ந்துள்ளது. குழப்பம் என்னவென்றால், 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பூட்டும் விதமாக துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சில ஆயிரங்கள் குறைந்துள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஒவ்வொரு சர்வேயிலுமே ஆழமான பிழைகள் உள்ளன” என்று கூறுகிறார்.
சுகாதாரமின்மை அல்லது நீர் வசதியில்லாத கழிப்பறைகளே துப்புரவுத் தொழிலுக்கான முதன்மைக் காரணம் என அரசு நம்புகிறது. துப்புரவுத் தொழிலாளர் பயன்பாடு தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம் 2013, பிரிவு 5இன் கீழ், நீர் வசதியில்லாத கழிப்பறைகளைக் கட்டமைப்பது சட்டவிரோதமானதாகும்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 26 லட்சம் குடும்பங்கள் தங்களது வீடுகளில் பல்வேறு நீர் வசதியில்லா கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் 7.94 லட்சம் குடும்பங்களில் உள்ள கழிப்பறைகளைக் கையால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும். உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்தான் அதிகபட்சமான நீர் வசதியில்லா கழிப்பறைகள் (5.58 லட்சம்) உள்ளன.
குஜராத் போன்ற மாநில அரசுகள் தங்களிடம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பதையே இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், குஜராத் மாநிலத்தில் 32,690 நீர் வசதியில்லா கழிப்பறைகள் உள்ளன. தேசியத் தலைநகர் டெல்லியில் 69,640 கழிப்பறைகள் உள்ளன.
பெஸ்வதா வில்சன் பேசுகையில், “துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கழிவறைகளைக் கட்டமைப்பது அவர்களின் பொழுதுபோக்கு. பல நூற்றாண்டுகளாக துப்புரவுத் தொழிலாளர்கள் நம் சமூகத்தின் மலத்தை அவர்களின் தலைகளில் சுமந்துகொண்டு இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியோ தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி குறித்து பெருமையாகப் பேசுகிறார். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த விவாதம் அவரது சிந்தனையில் என்றுமே தோன்றியதில்லை” என்று கூறுகிறார்.
நன்றி: தி வயர்
தமிழில்: அ.விக்னேஷ்
நேற்றைய கட்டுரை: இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவசியம் என்ன?
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக