சனி, 29 செப்டம்பர், 2018

சென்னையிலிருந்து கொழும்பைத் தாக்கத் திட்டமிட்டனர்

மின்னம்பலம்: “விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்க முயற்சி செய்தனர்” என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு உலக நாடுகளும் இதற்காக இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கிடையே இலங்கையில் 2015ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேவைத் தோற்கடித்து புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவியேற்றார்.

இந்த நிலையில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் நகருக்கு சென்ற சிறிசேனா, அங்கு வாழும் இலங்கை மக்களிடையே நேற்று (செப்டம்பர் 28) உரையாற்றினார். 2009 ஆண்டு நடந்த விடுதலை புலிகளுக்கு எதிரான போர் குறித்து பேசியவர், “விடுதலைப் புலிகள் சென்னையிலிருந்து கொழும்பின்மீது வான்வெளித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அப்போது இலங்கையில் முன்னாள் அதிபரும் இல்லை, முன்னாள் பிரதமரும் இல்லை. அப்போது நான்தான் பாதுகாப்புத் துறை அமைச்சராகச் செயலாற்றினேன். மற்றவர்கள் எல்லாம் தாக்குதலுக்கு பயந்து ஓடிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “விடுதலை புலிகளின் தாக்குதலுக்கு பயந்து அன்றைய தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியே இருந்தனர். நான்கூட கொழும்பில் இருக்கவில்லை. விடுதலை புலிகள் தலைநகரை தாக்கக்கூடும் என்பதால், கொழும்பைச் சுற்றியுள்ள இடங்களிலேயே தங்கியிருந்தேன்” என்ற தகவலையும் தனது பேச்சினூடே குறிப்பிட்டார்.
சமீபத்தில் டெல்லி வந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, போரில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியதாகப் பேட்டியளித்திருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இலங்கையில் தற்போதைய அதிபர் சிறிசேனா இவ்வாறு பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக