ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கனிமொழி " பாலியல் புகார் ஐஜி முருகனை மாற்ற வேண்டும்!

மின்னம்பலம்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜி முருகனை லஞ்ச
ஒழிப்புத் துறையிலிருந்து மாற்ற வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஐஜி முருகனால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான பெண் அதிகாரி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல்வரின் அலுவலகம், டிஜிபி, உள் துறைச் செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார்.
இதற்கிடையில் கனிமொழியின் கவனத்துக்கு இந்த விவகாரம் வர, காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டால் அதை விசாரிக்கும் விசாகா கமிட்டி ஏன் அமைக்கப்படவில்லை என்று அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அரசு விசாகா கமிட்டியை அமைத்து அதற்கான அதிகாரிகளையும் நியமித்துள்ளது. இந்த நிலையில் விசாகா கமிட்டி, ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக கனிமொழி இன்று (செப்டம்பர் 2) தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜி முருகனை, இவ்வழக்கின் புலன் விசாரணை முறையாக நடக்க ஏதுவாக உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்ற வேண்டும். அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடர்வது, சாட்சிகளையும் தடயங்களையும் அழிக்க உதவும். தமிழக முதல்வர், இந்த விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்கும், விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக