வெள்ளி, 28 செப்டம்பர், 2018

முதல்வராகும் எண்ணமில்லை: கனிமொழி"

மின்னம்பலம் :முதல்வராகும் எண்ணம் எனக்கில்லை என்று திமுக எம்.பி.
கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் நேற்று (செப்டம்பர் 27) FICCI நடத்திய கருத்தரங்கில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கவிதைகள் வழியாகச் சொல்ல வேண்டிய கருத்துகளை துல்லியமாகவும், வலிமையாகவும் கூற முடியும். இந்தியாவில் பட்டதாரிகள் எண்ணிக்கை உயர்ந்தபோதும், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை மற்றும் பெண் தொழிலதிபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கருத்தரங்கைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, FICCI பெண்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சுயதொழில் தொடங்குவதற்காகவும் இந்த அமைப்பு தொடர்ந்து நிறைய பணிகளை செய்து வருகிறது. தொழில் செய்வதில் பெண்களைச் சொந்த காலில் நிற்பவர்களாக மாற்றுவதில் இந்த அமைப்பின் பங்கு அளப்பரியது என்று கூறினார்.

கருத்தரங்கின்போது உங்களிடம் முதல்வராகும் எண்ணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, அவ்வாறான எண்ணம் நிச்சயம் இல்லை, டெல்லி அரசியல் என்பது பழக்கமான ஒன்று. அதனால் பழகின இடத்திலேயே பணியாற்ற விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கு, அரசியலில் ஆணாதிக்கம் உள்ளது என்று சொல்லவில்லை. அனைத்துத் துறைகளிலும் ஆணாதிக்கம் உள்ளது என்று குறிப்பிட்டார் கனிமொழி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருடைய கட்சியில் சில தலைவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கொண்டு, அனைத்துப் பெண்களும் அரசியலில் சம இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இன்றும் கூட நாடாளுமன்றத்திலும், மாநில சட்ட மன்றங்களிலும், மாநில முதல்வராகவும் எத்தனைப் பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, பெண்களுக்குப் பதவி வழங்க திமுகவில் வலியுறுத்துவேன். திமுகவில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை. சில அரசியல் கட்சிகள் கூட பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை. பெண் பிள்ளைகளை விரும்பாத பலர் இன்றும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக