வியாழன், 6 செப்டம்பர், 2018

வடமாநிலங்களில் முழு கடையடைப்பு எஸ் சி .. எஸ் டி சட்டத்திருத்தத்தை எதிர்த்து ..


மின்னம்பலம் :எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநிலங்களில் இன்று (செப்டம்பர் 6) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு. “சில நேரங்களில் நேர்மையாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதனால், அப்பாவி ஊழியர்கள் குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த நோக்கங்களுக்காக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்பு சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை இந்தச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கடந்த ஏப்ரல் மாதம் சில அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் நடத்தப்பட்டது. இந்நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் பாரத் பந்த் மேற்கொள்ள அழைப்பு விடுத்தனர்.
அதன்படி இன்று மத்தியப் பிரதேசம், குஜராத், பிகார், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் பந்த் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. குவாலியர் பகுதியானது, ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரயில் நிலையத்தில், இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக