செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சசிகலாவை சந்திக்கும் வைரவியாபாரி ... புதிய அரசியல் புரோக்கர்?

மின்னம்பலம் :“பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டிப் டாப்பாக டிரஸ் போட்ட ஒருவர் அடிக்கடி சத்தமில்லாமல் சந்திக்க வருவதும் போவதுமாக இருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார்கள். இவர்களை வழக்கறிஞர்களும், உறவினர்களும், கட்சியினரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சட்ட ரீதியாகச் சந்தித்துவருகிறார்கள். சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஒன்றாகச் சந்திக்க கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதியோடு இருவரையும் ஒரு அறைக்கு வரவழைத்துச் சந்தித்து வருகிறார்கள். இதெல்லாம் வழக்கமாக நடக்கும் நடைமுறைதான். ஆனால், இப்போது லேட்டஸ்டாக டிப் டாப் ஆசாமி ஒருவரின் தலை அதிகமாக பரப்பன அக்ரஹாரா பக்கம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
கடந்த 19ஆம் தேதி, அந்த நபர் சிறைக்கு சென்றுவந்தபோது சில புகைப்படக்காரர்கள் படம் எடுத்துள்ளனர். அதைப் பார்த்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் அந்தப் புகைப்படக்காரரை தனியாக அழைத்துக் கொண்டு போய், படத்தை அழித்துவிட்டுதான் அனுப்பியிருக்கிறார்கள். ‘அவரு படம் எங்கேயும் வெளியே வர வேண்டாம்னு அண்ணன் சொல்லியிருக்காரு. வந்தால், எங்களுக்குப் பிரச்னை ஆகிடும்...’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அதையும் மீறி, சிலரது உதவியுடன் சிறைக்கு வந்து போகும் அந்த நபரின் படத்தை நாம் வாங்கினோம். அதை வைத்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். ‘இவரு அம்மா இருந்த காலத்துல இருந்தே அடிக்கடி கார்டன் பக்கம் வந்துட்டுப் போவாரு. இவரை வைர வியாபாரின்னு சொல்லுவாங்க. விளம்பர ஏஜென்சியும் நடத்திட்டு இருந்தாராம். மும்பையை மையமாகக் கொண்ட அவருக்கு இந்தியா முழுமையும் நல்ல அரசியல் தொடர்பும் உண்டு. கார்டனுக்கு அடிக்கடி வந்து போன வகையில சின்னம்மாவுக்கும் நல்ல நெருக்கம்தான். அதன் அடிப்படையில்தான் இப்போ ஜெயிலுக்கு போய் வந்துட்டு இருக்காரு...’ என்று சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், அம்மா இருந்த போது நெருக்கம் காட்டியவர் இப்போ எதுக்காக அடிக்கடி சின்னம்மாவை போய் பார்க்கிறாரு? அப்போ எதாவது பெருசா திட்டம் போடுறாங்களா?’ என்ற கேள்வியையும் அதிமுக தரப்பில் எழுப்புகிறார்கள்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக