வெள்ளி, 14 செப்டம்பர், 2018

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ?

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா?
ஆழி செந்தில்நாதன்vinavu.com :திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.
ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு.
தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்றோ இந்தியாவில் ராணுவ ஆட்சி வரவேண்டும் என்றோ இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றோ கூறுவதுகூட அரசியல்சாசன ரீதியில் குற்றம்தான். இந்தியா என்பது இறையாண்மையுள்ள, ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்றக் குடியரசு. இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு எந்த அடிப்படையில் இயங்கமுடியும்? அல்லது வேறு எந்த மதவாத அமைப்பாவது இயங்கமுடியுமா?

உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் சுயநிர்ணய உரிமையைக் கோருவதே குற்றமாகக் கருதப்படுவதில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில் இதுபோன்ற முழக்கங்கள் எழுகின்றன. அதற்கென கட்சிகள் இருக்கின்றன. அத்தகையக் கட்சிகள் தேர்தலில்கூட நின்று வெல்கின்றன, ஏன், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்பது குறித்து வெகுசன கருத்தறியும் தேர்தல்களையேகூட நடத்தியிருக்கிறதே? அந்தக் கட்சியை தடைசெய்ததா பிரிட்டன்?
சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இயல்பான உரிமை (natural right). அதைத்தான் இந்திய அரசுமே ஏற்றுக்கொண்ட ஐநா அவையின் விதிமுறைகளும் கூறுகின்றன. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்று தனி அரசு நடத்துவதற்கான உரிமை. ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேரு இத்தகைய உரிமையை இந்தியாவிலுள்ள மாகாணங்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் தரவேண்டும் என்று பேசியவர்தான்.
சுயநிர்ணய உரிமை என்பது விவாகரத்து உரிமையைப் போன்றது என்பார்கள். திருமணமானவர்களுக்கு விவாகரத்து உரிமை இருக்கவேண்டும். அந்த உரிமை இருப்பதானாலேயே அவர்கள் விவாகரத்து செய்துவிடுவதில்லை. மாறாக, சேர்ந்து வாழமுடியாது என்கிற நிலைமையில்தான் விவாகரத்தைப் பற்றி யோசிப்பார்கள். உண்மையில் விவாகரத்து நடந்தால் அதன் பிறகு என்ன ஆகும் என்ற அச்சத்தில், தங்களுடைய போக்குகளை மாற்றிக்கொள்கிற தம்பதிகள் மிகவும் அதிகம்.
சுயநிர்ணய உரிமையின் எளிமையான வெளிப்பாடுதான் தனிநாடு கேட்பது. இணையத்தில் தேடிப்பாருங்கள். உலகில் நூற்றுக்கும் குறைவில்லாத அளவுக்கு தனிநாட்டுக் கோரிக்கைகள் உலவுகின்றன.
திராவிட நாடு கோரிக்கையை கைவிடாவிட்டால் திமுக தடைசெய்யப்படும் என்கிற நிலை ஏற்பட்டது. அப்போது அறிஞர் அண்ணா. 1963 இல் மாநிலங்களவையில் பேசியபோது அண்ணா இரண்டு கருத்துகளை முன்வைத்தார்.
சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டு உரிமை வேண்டும் என்று பேசுவதையே தடைசெய்வது என்பது இந்தியா அரசியல்சாசனம் கூறும் அடிப்படை உரிமைகள் (fundamental rights) என்கிற கோட்பாட்டுக்கே விரோதமானது.
இதைப்பற்றி பேசினாலே அல்லது கோரினாலே இறையாண்மை கெடும் என்கிற வாதம் அடிப்படையிலேயே தவறானது. இந்திய அரசியல்சாசனத்தின் படி இந்தியாவின் அரசியல் இறையாண்மை என்பது இந்தியாவிலுள்ள மக்களிடமே தங்கியிருக்கிறது. அதன் சட்ட இறையாண்மை ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை தில்லியில் மட்டுமே குவிந்திருக்கவில்லை. (Why do you think that our demand endangers
Before answering that we should be very clear about what we mean by sovereignty. The preamble to the Constitution says that the political sovereignty rests with the people. Then legal sovereignty is divided between the Federal Union and the constituent units. Why don’t you take it that our scheme is to make the states still more effective sovereign units? Why don’t you take it in that light? Why do you think that the moment we demand Dravidastan, we are cutting at the root of sovereignty? Sovereignty does not reside entirely in one particular place. – ‘Carry On, But Remember!’ speech by Anna).
திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிற முடிவுக்கு வருகிறார் அண்ணா. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்குக்கூடத் தடை என்பதை ஏற்க மறுக்கிறார். இறையாண்மை என்பதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்கிறார். இந்த அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் கட்சிதான் கண்ணதாசனைக் கைதுசெய்கிறது.
இன்று இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை குறித்து “கவலைக்கொண்டிருக்கிற” எல்லோருமே தனிநாடு கோரும் விஷயத்தை ஒரே விதமாக கைகொள்வதில்லை. சிலரைப் பொறுத்தவரை, தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்தான் தனிநாடு கோருவது தவறு. மற்றபடி, ஜனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு, ஆயுதம் ஏந்தியப் பாதைக்கு போகாத வரை, தனிநாடு பற்றி பேசுவதோ எழுதுவதோ பரப்புபரைசெய்வதோ பெரிய குற்றமல்ல என்றே நினைக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் குறைந்தது அந்தந்த தேசிய இனங்களில் நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகள், தனிநபர்கள் இது குறித்து பேசியும் எழுதியும் வருகின்றன. கல்வி மையங்களில்கூட இத்தகைய கருத்துகளை முன்வைப்பவர்கள் செயல்படுகிறார்கள். புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக, ஆசாதி முழக்கம் எழுப்பபட்டது என்று கூறி வலதுசாரிகள் கொந்தளித்தது நினைவிலிருக்கும். அப்போது அது குறித்து கருத்துத்தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நான் ஆசாதி முழக்கத்தை ஏற்கவில்லை என்றாலும், அதைப் பற்றி பேசுவதே குற்றமல்ல என்றார். (Although I personally disapprove of the slogan for azadi, in my opinion the shouting of such slogans per se, is no crime. So many people in India often shout such slogans. In the past, the advocates of Khalistan did so, as did Nagas and Mizos. In Kashmir today, tens of thousands of people are raising this slogan. In Scotland, many people demand separation from Great Britain, and many people in the French-speaking province of Quebec demand freedom from the rest of Canada. In a democracy, people should be allowed to let out steam, and the government should learn to not over-react.- Markandey Katju, thewire.in, Aug 20, 2016). கட்ஜூ தன் கட்டுரையில் வேறு ஒரு தீர்ப்பையும் குறிப்பிட்டிருந்தார். அது அமெரிக்காவில் நடந்தது.
கம்யூனிஸ்ட்கள் என்றாலே நரவேட்டை ஆடும் அமெரிக்காவில்கூட, கம்யூனிசம் பற்றி பேசுவதே ராஜதுரோகம் என்று கருதப்பட்ட காலத்தில், அதுவும் பனிப்போர் காலத்தில், நீதியரசர் ஹார்லன் பின்வருமாறு ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டார்: “The mere teaching of communist theory, including the teaching of the moral propriety or even moral necessity for a resort to force and violence, is not the same as preparing a group for violent action and steeling it to such action. There must be some substantial direct or circumstantial evidence of a call to violence now or in the future which is both sufficiently strong and sufficiently pervasive to lend colour to the otherwise ambiguous theoretical material regarding communist party teaching.’ (NOTO vs. US (1961).
ஆக, விடுதலை என்றோ புரட்சி என்றோ பேசுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் ஒரு ஜனநாயக நாட்டில் குற்றமாகாது. வன்முறை மூலம் ஆட்சியை அகற்றுவோம் என்று பேசுவது கூட குற்றமில்லை என்கிறார் ஹார்லன். அதற்காக உண்மையிலேயே வன்முறையில் இறங்கினால்தான் குற்றம் என்கிறார். ஆனால் அந்த நாட்டின் விடுதலையின்போது, மக்கள் ஆயுதமேந்தி போராடுவதுகூட உரிமைதான் என்று அமெரிக்க விடுதலையின் தலைமக்கள் பேசியிருக்கிறார்கள். Right to revolt பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.
நம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இன்றைய நிலையில், இது தன்னாட்சி கோரும் காலமே தவிர தனியாட்சி கோரும் காலம் அல்ல என்றே நினைக்கிறோம். ஆனால் தனியாட்சி கோரும் கருத்துரிமையை, அமைப்பு நடத்தும் உரிமையை நாம் காப்பாற்றவே வேண்டும். கருத்துரிமை, கூட்டும்கூடும் உரிமை, சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் எந்த சமரசமும் செய்யமுடியாது. இல்லையென்றால் பாரதிதாசனையும் பெருஞ்சித்திரனாரையும்கூட குற்றவாளிகளாக ஏற்கவேண்டியிருக்கும். அவர்கள் சாகும்வரை விடுதலையைப் பாடினார்கள். பெரியார் கடைசிவரை விடுதலையைப் பேசினார்.
அதைப் போலவே “இந்தப் பிரிவினைவாதிகளை தூக்கில்போடுங்கள்” என்று ஒரு சங்கப் பரிவார நபர் எழுதுகிறார் என்றால் அவருக்கும் அப்படி எழுத உரிமை உண்டு என்றே நாம் கருதவேண்டும். இங்கே ஆர்.எஸ்.எஸ். சட்டபூர்வமாக செயல்படமுடியுமானால், தமிழ்நாடு விடுதலை கோரும் பல்வேறு அமைப்புகளும் சட்டப்படி செயல்பட முடியவேண்டும்.
பிரிவினைக்கு எதிராக பேசும் பா.ஜ.க., வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரும் பல இயக்கங்களோடு இப்போது கூட்டுவைத்திருக்கிறது. அசாமில் இவர்கள் செய்யும் என்ஆர்சி விவகாரங்கள் அனைத்துமே உல்ஃபா போன்ற ‘பிரிவினைவாத’ அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள்தான்.
தேர்தல் ஆவணத்தில்தான் காஷ்மீரின் மக்கள் மாநாட்டுக் கட்சியும் பஞ்சாபின் அகாலி தளமும் பிரிவினையைப் பேசவில்லை. ஆனால் காஷ்மீரியத்தையும் பஞ்சாபியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், பஞ்சாப் விடுதலை கோரும் அல்லது விடுதலைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இந்தக் கட்சிகளில் இருக்கிறார்கள். தலைமைகள் அப்படி இல்லையென்றாலும், தொண்டர்களில் பலர் அதே விடுதலைக்கனவுகளோடு இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அவர்களோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டுவைக்கவில்லையா? அப்போது இந்திய தேசிய ஒற்றுமை குலைந்து போய்விடவில்லையா? அப்படித்தானே அகாலிதளத்துக்கு எதிராக, தனிநாடு கோருபவர் எனத்தெரிந்தும் பிந்தரன்வாலேவுக்கு இரகசிய ஆதரவளித்து வளர்த்தார் இந்திரா காந்தி?
தனித்தமிழ்நாடு வேண்டும், அதில் சோஷலிச சமூகத்தை அமைக்கவேண்டும் என்றெல்லாம் கருதுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் எந்த விதத்திலும் குற்றமல்ல, சட்டவிரோதமும் அல்ல.
அது சமூகத்தின் ஒரு பிரிவினரின் விழைவு. அதை இந்த அரசு ஏற்கமறுத்தால் எதிர்த்து பிரச்சாரம் செய்யலாம். அந்த விழைவை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவது என்பதே தவறு என்று பாய்வது முட்டாள்தனம். பாசிசம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்கத்தைப் பார்த்தோம்: “மாடு வேண்டும், மாடு வேண்டும் இல்லையென்றால் நாடு வேண்டும்”. காவிரி பிரச்சினையின்போது இப்படி ஒரு முழக்கம் வந்தது: “தண்ணியக் கொடு, இல்லேன்னா தனியா விடு”. இதெல்லாம் யாரும் சொல்லிக்கொடுத்து வந்தது அல்ல. அப்படி வந்திருந்தாலும் இந்த முழக்கங்கள் லட்சக்கணக்கானவர்களிடம் பரவியவதற்கு யார் காரணம்? வேறு எப்போதையும்விட தமிழ்நாட்டில் இப்போது “பிரிவினைவாதம்” பரவியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? – தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசும் அதன் எடுபிடி அரசும்தான் காரணம்.
“நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைத்தான் கைவிட்டோம், ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார் அண்ணா.
“இல்லை, இல்லை, அந்தக் காரணங்களை இப்போது நாங்கள் பல மடங்காக அதிகரித்திருக்கிறோம்” என்கிறது மோடி அரசு.
எது குற்றம்? யார் குற்றவாளி?
– ஆழி செந்தில்நாதன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக