ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை குழு தலைவராக சிதம்பரம்

காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை குழு தலைவராக சிதம்பரம்மின்னம்பலம் :காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது ஆளும் பாஜகவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது குறிப்பாக பாஜகவைத் தோற்கடிக்கும் முயற்சிகளில், ரஃபேல் ஊழல் உட்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜக மீது குற்றம்சாட்டி வருகிறார். தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

தேர்தல் ஏற்பாடுகளின் முக்கிய பகுதியாக ராகுல் காந்தி, கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு என்ற மூன்று குழுக்களைக் கடந்த மாதம் அமைத்தார். இந்தக் குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் குழுக்களுக்குத் தலைவர்களை நியமித்து, நேற்று (செப்டம்பர் 15) ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக ராஜீவ் கௌடா, விளம்பரக் குழு தலைவராக ஆனந்த் சர்மா, விளம்பரக் குழு ஒருங்கிணைப்பாளராக பவன் கேரா, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக