சனி, 15 செப்டம்பர், 2018

திராவிடர்கள் ஒற்றுமை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திராவிடர்கள் ஒற்றுமை: முதல்வர் வலியுறுத்தல்!மின்னம்பலம்: தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் திராவிடம் என்ற ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஒற்றுமையின் மூலமே உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வு நிறுவன துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று(செப்டம்பர் 145) நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளையும் திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
திராவிடம் என்றால் ‘திரவம்’ மற்றும் ‘விடா’ என்ற சொற்களின் சங்கமம் எனவும், அது மூன்று கடல்கள், அதாவது- வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் சந்திக்கும் இடம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திராவிட மொழிகளின் தாயகமாக விளங்குவது தமிழ் மொழி. தென்னிந்தியாவின் மற்ற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு 30 நூற்றாண்டுக்கு மேற்பட்ட ஆதார வளம் உள்ளது.
பெயர்களில் உயர்திணை அஃறிணை என்று திராவிட இலக்கண ஆசிரியர்கள் வகுத்த முறை உலகில் வேறெந்த மொழிகளிலும் இல்லையென்று ராபர்ட் கால்டுவெல் போற்றியிருப்பது நமக்கு பெருமையல்லவா?
திராவிடர்களாகிய நாம், மொழியாலும், நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், உணர்வாலும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டு கொள்வது மட்டுமே போதுமானதல்ல.
நமது திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான, மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகின்ற உணவையும், மாநிலத்திற்கு மாநிலம் பகிர்ந்து உதவ வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதை திராவிட இயல் ஆய்வு நிறுவனம் தனது பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தென் மாநிலங்களை சேர்ந்த நாம் அனைவரும் திராவிடம் என்ற ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நமது ஒற்றுமையின் மூலமே உலகுக்கு உணர்த்த வேண்டும். தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு,பாலாறு, காவேரி, வைகை, குண்டாறு மற்றும்
பம்பா அச்சன்கோவில் வைப்பாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த திராவிட நாடுகளைச் சார்ந்த நாம் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, திராவிடம் என்பதை தாரக மந்திரமாக்கிக் கொண்டு, நாம் திராவிடர்கள், நம் மொழி திராவிட மொழி, திராவிடத்தால் தென்னக நாடுகளைச் சார்ந்த நாம் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம், வருகிறோம், வருவோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த திராவிட ஆய்வியல் நிறுவனம் திறம்பட உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக