சனி, 22 செப்டம்பர், 2018

"வில்லேஜ் ராக்ஸ்டார்" ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படம்!


மின்னம்பலம்:  2019ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு, இந்தியாவின் சார்பில் அஸ்ஸாமிய திரைப்படமான "வில்லேஜ் ராக்ஸ்டார்" பரிந்துரைக்கப்பட்டுள்ளது!
உலகின் தலைசிறந்த திரைப்பட விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் இவ்விருதில், உலகம் முழுவதிலும் இருந்து உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ‘சிறந்த வெளிநாட்டுப் படம்’ என்ற விருதை வழங்கி வருகின்றனர்.
இதில் இந்தியா சார்பில் ஆண்டு தோறும் ஒரு திரைப்படம் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஆறு திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கியிருந்த ‘விசாரணை’ படம் இடம் பெற்றிருந்தது.

இந்த ஆண்டு, ராஸி, பத்மவாத், ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம், மகாநடி, பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, பயோஸ்கோஸ்கோவாலா, மாண்டோ, 102 நாட் அவுட், பட்மன், பயானகம், அஜ்ஜி, நாட் , காளி குலியியன், ஆகிய படங்கள் திரைப்படங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தன. தமிழில் இருந்து, தேசிய விருது பெற்ற, டூ லெட், கோலமாவு கோகிலா ஆகியத் திரைப்படங்கள் இதில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை , 28 திரைப்படங்கள் தேர்வாகியிருந்த நிலையில், அதை 12 பேர் கொண்ட தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக, பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற திரைப்படம் பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.
அஸாம் மாநிலத்தை சேர்ந்த பெண் இயக்குநயர் ரீமா தாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அஸ்ஸாமிய திரைப்படங்களுக்குக் கடந்த 30 ஆண்டுகளாகத் தேசிய விருதுகள் ஏமாற்றம் அளித்து வந்த நிலையில் இந்தாண்டிற்கான தேசிய விருதுகள் பட்டியலில் இப்படம் இடம்பிடித்தது.
அஸாம் மாநில கிராமப்புற குழந்தைகளின் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தினை இயக்குநர் இயக்கியுள்ளார். அஸாம் மாநில அப்பாவி மக்களின் வாழ்க்கை, கடின உழைப்பு, கிராமங்களோடு இணைந்துள்ள சவால்கள், இயற்கை பேரிடர்கள் இவைகளுக்கிடையே சிறுமி ஒருவர் தன்னிடம் இருக்கும் கிட்டாரினை வைத்து வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற இசைக்குழுவினை அமைக்க முயற்சிப்பதே இப்படத்தின் கரு. இயக்குநரின் கிராமத்தை சுற்றியுள்ள குழந்தைகள், அவர்களுடைய குடும்ப நபர்களே அப்படத்தில் நடித்துள்ளனர்.
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், இதுவரை 70க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ள இந்த படம், 4 தேசிய விருதுகள் உட்பட 44 விருதுகள் வென்றுள்ளது. சிறந்த இடம், ஒலி பதிவு, எடிட்டிங் மற்றும் குழந்தை நட்சத்திரம் (பானித தாஸ்) ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் பெற்றது.
ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியுள்ள முதல் அஸ்ஸாமீஸ் படம் என்ற பெருமையை பெற்றுள்ள, இந்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குநர் ரிமா தாஸ், இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானது தன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. அளவுகடந்த ஆனந்தத்தோடும் . பெருமையோடும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என அனைத்துமே இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக