செவ்வாய், 11 செப்டம்பர், 2018

விஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர்.. ஒருவர் மீது ஒருவர் பிராண்டல்

டிஜிட்டல் திண்ணை: விஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர்
 மின்னம்பலம்: தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டுவருகின்றன. அது அத்தனையும் உண்மைக்குப் புறம்பானவை. எந்தத் துறையிலும் தவறு நடப்பதாக எனக்கு தெரியவில்லை. அமைச்சர் வீட்டில் சிபிஐ விசாரணை நடந்தது என்பதற்காக எப்படி அவரைக் குற்றவாளியாகக் கருதமுடியும்? குற்றம் நிருபிக்கப்பட்டால் மட்டுமே அவர் குற்றவாளி. குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக எல்லாம் யார் மீதும் நடவடிக்கை எடுத்துவிட முடியாது...’ - சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் இப்படிப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது அப்படியே இருக்கட்டும்.... செப்டம்பர் 3ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் ஒரு பகுதியை மட்டும் இங்கே தருகிறேன்.
“துணை முதல்வர் பன்னீர், ‘அம்மா இருக்கும்போது இப்படி ஆதாரம் எல்லாம் தேவையே இல்லை... ஒரு அமைச்சர் மீது புகார் வந்தால் அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குவார். கட்சிப் பொறுப்பையும் பிடுங்குவார்.
ஆனால் இப்போ நமக்கு ஆதாரத்துடன் வருமான வரித் துறை கடிதம் கொடுத்து இருக்கு. இப்பவும் நடவடிக்கை இல்லை என்பதால்தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்யுறாங்க. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்...’ என்று சொன்னாராம். அதற்கு எடப்பாடியோ, ‘அம்மாவோட மறைவுக்குப் பிறகு அமைச்சரவையில் நாம பெரிய மாற்றம் கொண்டு வரவில்லை. முக்கியமானவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
தேர்தலில் தொடங்கி எல்லாக் கட்டங்களிலும் அவரோட உதவிகளை நாம எதிர்பார்த்தோம். இப்போ நாம அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினால் அவர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். தினகரன் பக்கம்கூடப் போகலாம். ஏற்கெனவே 18 பேரால நாம நிம்மதி இழந்திருக்கோம். இதுல இன்னொருத்தரையும் இழக்கணுமா? அதுவும் இல்லாமல் அவரை வெளியே விட்டால், எங்கே போனாலும் நம்மை விமர்சனம் செய்வாரு. இங்கே என்ன நடக்குதுன்னு பொது வெளியில பேசுவாரு. அது நமக்கான சிக்கலை இன்னும் அதிகமாக்கும். அவரோட ஆதாரவாளர்கள் என ஒரு குரூப் கிளம்புவாங்க. நமக்கான சிக்கல் இன்னும் அதிமகாகும்... அதனால விட்டுப் பிடிக்கிறதுதான் நல்லது’ என சொன்னாராம்.” - இது நாம் அன்றே சொன்னது.
அதாவது குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்பி.வேலுமணி இருவரையும் மாற்ற வேண்டும் என்பது பன்னீரின் விருப்பம். இதைப் பல முறை எடப்பாடியிடம் அவர் பேசிவிட்டாராம். நேற்றும்கூட இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அப்போது பன்னீர், ‘விஜயபாஸ்கரையும் வேலுமணியையும் மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். இருவர் மீதான புகார்கள் நாளுக்கு நாள் பூதாகரமாகிட்டு இருக்கு. நீங்க வெச்சிருக்கும் பொதுப்பணி துறையை வேற ஒருத்தர்கிட்ட கொடுத்துட்டு, உள்ளாட்சித் துறையை நீங்களே பார்க்கலாம். சுகாதார துறைக்கு மட்டும் புதுசா ஒருத்தரை நியமிக்கலாம். ‘ என்று ஐடியா கொடுத்திருகிறார். ஆனால் எடப்பாடி அதற்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.
‘அமைச்சரவை மாற்றம் என்பதை இப்போ யோசிக்கவே வேண்டாம். அது நமக்கு நாமே சிக்கலை உண்டாக்கிக்கொள்ளும் விஷயம் என்பது உங்களுக்கு புரியலையா? விஜயபாஸ்கரையும், வேலுமணியையும் நீங்க சொல்ற மாதிரி தூக்கிட்டா அவங்க ரெண்டு பேரும் அமைதியாக கேட்டுகிட்டு போய்டுவாங்கன்னு நினைக்கிறீங்களா? இங்கே முதல்வராக இருப்பது நான்தான்... அம்மா இல்லை. எனக்கு அடுத்த சிக்கலை கொடுக்கலாம்னுதான் அவங்க யோசிப்பாங்க. நம்ம ஆட்சி முழுமையாக இன்னும் மூணு வருஷம் நீடிக்கணும்னு நான் நினைக்கிறேன். அதுக்கு இவங்க எல்லோரையும் அனுசரிச்சுதான் போகணும். ஒருவேளை அவங்க ரெண்டு பேரு மேலயும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அப்போ என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்...’ எனச் சொன்னாராம்.
அதற்கு பன்னீர் கொஞ்சம் கோபமாகவே பேசியிருக்கிறார். ‘நீங்க அஞ்சு வருசத்தை ஓட்டணும்னு பார்க்குறீங்க. நான் அடுத்தும் நம்ம ஆட்சி வரணும்னு நினைக்கிறேன்..’ எனச் சொன்னதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லையாம். அதன் ரியாக்‌ஷன்தான் இன்று சேலத்தில் எடப்பாடி பேசினாராம்” என்று முடிந்தது மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அடுத்த மெசேஜும் வந்திருந்தது. “பன்னீர் தங்களுக்கு எதிராகக் காய் நகர்த்தி வருவது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி இருவருக்குமே தெரியுமாம். எடப்பாடி தரப்பிலிருந்தே இந்தத் தகவல் அமைச்சர்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ‘அதை தைரியம் இருந்தால் என்கிட்ட சொல்லட்டுமே... அவரு என்னவெல்லாம் ஊழல் செஞ்சாரு... எங்கிருந்தெல்லாம் பணம் வருதுன்னு நான் ஒரு லிஸ்ட் தரட்டுமா? இப்போ இருக்கிற அமைச்சர்களில் ஒரு ரூபாய்கூட வாங்காத அமைச்சர் யாருன்னு ஒரு லிஸ்ட் எடுக்கட்டும். அப்படி யாரும் இருந்தால் முதல்ல காட்டச் சொல்லுங்க... அப்புறமா என்னை மாத்துறத பத்தி பேசிக்கலாம்...’ என பன்னீருக்கு நெருக்கமான ஒருவரிடமே சொல்லி அனுப்பியிருக்கிறார் இருவரில் ஒரு அமைச்சர்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக