வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கருணாஸ் பேச்சு.. பின்னணியில் சசிகலா? ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது

Hemavandhana -ONEINDIA TAMIL ON
சென்னை: தமிழ்நாட்டு நிலைமை இவ்வளவு
கேவலமாக போயிடும்னு நாம கொஞ்சம்கூட நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். 
கருணாஸ் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தகுமா? எவ்வளவு வன்முறை வார்த்தைகளை வாரி இறைத்திருக்கிறார்? எவ்வளவு துணிச்சலாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்? எங்கிருந்து இவ்வளவு தைரியம் கருணாஸ்-க்கு வந்தது? யார் கொடுத்த பலம் இது? 
 ஒரு சாதாரண நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு திரையில் நுழைந்தவர் கருணாஸ். அப்போதெல்லாம் தன்னை ஒரு அப்பாவி போலவும், ஏழ்மை, வறுமை, போன்றவற்றை முன்னிறுத்தியே ஆரம்ப கட்டத்தில் வலம் வந்தவர். ஆனால் இன்று ஜாதியை பலமாக வைத்துக் கொண்டு புதிய விளையாட்டை தொடங்கியுள்ளார். 
இதுவரை தமிழக வரலாற்றில் "ஒரு முதலமைச்சர் தன்னை பார்த்து பயப்படுகிறார்" என்று ஒரு சாதாரண எம்.எல்.ஏ. சொல்லி யாராவது கேட்டிருப்போமா? பார்த்திருப்போமா? எங்காவது இந்த அதிசயம் நடந்திருக்கிறதா? அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று யாரை பார்த்தாவது ஒரு நபர் இப்படி பேசியிருப்பார்களா? இல்லை, அவர்களை பேசத்தான் வாய் வருமா? 
கருணாஸ் பேசியதைவிட கொடுமை இதற்கெல்லாம் முதலமைச்சர் தரப்பு வாய் மூடி மவுனமாக இருப்பதுதான்.
 ஒரு சாதாரண எம்எல்ஏ, அதுவும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவரை ஒரு முதமைச்சரால் கண்டிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் தமிழக மக்களுக்கான முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருணாஸ் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா தமிழக அரசு? இதுவரை அதிமுக தரப்பில் இருந்து ஏதாவது கண்டனம் வந்திருக்கிறதா? கட்சி தலைமை அமைதி காக்க காரணம் என்ன? 
கருணாஸ் பேசியதை கண்டிக்க ஏன் மனம் வரவில்லை? கருணாசுக்கு பயப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திலா இந்த அரசு உள்ளது? 
ஒரு எம்எல்ஏவை முதலமைச்சரே கண்டிக்காவிட்டால் நாளை முதல்வரை... இந்த மாநிலத்தை ஆளுபவரை மக்கள் எப்படி பார்ப்பார்கள்? மக்கள் என்ன நினைப்பார்கள்? 
கட்சிக்குள் தற்போது உள்ள அவப்பெயர்கள் எல்லாம் போதாதா? கருணாஸ் முதலமைச்சரை எதிர்த்து பேச காரணம் என்ன? நடிகர் என்ற நினைப்பா? பிரபலமான நபர் என்ற ஆங்காரமா? இல்லை... இது எதுவுமே கிடையாது.. கருணாஸின் எகத்தாள பேச்சிற்கும், ஆணவ வார்த்தைகளுக்கும் முழு முதல் காரணமும், பலமும், பின்னணியும், ஆதரவும் எல்லாமே சசிகலா என்ற பிம்பத்தின் துணிச்சல்தான். 
இது போதாதென்று சசிகலா தயவில் கிடைத்த எம்எல்ஏ என்ற பதவியும் கருணாசிற்கு கூடவே உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக தனது ஜாதியை பக்கத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். 
கருணாஸ் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததற்கு இதுவே காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அப்பட்டமாக ஊழலை செய்த அமைச்சரை பதவியை விட்டு என்றோ முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டுமே? 
போன வாரம் டிடிவி தினகரன் பேசும்போது, குட்கா டாக்டர் என விமர்சித்தார். விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டத்திற்கே சென்று அங்குள்ள தொகுதி மக்களிடமே "இந்த மாவட்ட அமைச்சர் குட் டாக்டர் இல்லை, குட்கா டாக்டர்" என்று சொன்னதற்கு இதுவரை யாராவது அதிமுகவில் வாய் திறந்து கண்டனம் சொன்னார்களா?
 கருணாஸ் விஷயத்திலும் அதிமுக அடக்கி வாசிப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியை பார்த்து கருணாஸ் பேசியதற்கும் இதுவரை கட்சி சார்பாகவோ, அரசு சார்பாகவோ யாருமே பதிலடி தரவில்லை. 
இந்த காவல்துறையும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 
90-களில் ஆட்சி செய்தபோது ஜெயலலிதாவை ஒரு சர்வாதிகாரி என்றார்கள், பல பத்திரிகைகளில் அவரை ஹிட்லருடன் ஒப்பிட்டு கார்ட்டூன் போன்றவற்றை வரைந்தார்கள். சர்வாதிகாரம் என்பது சமுதாயத்திற்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்தானதுதான். ஆனால் ஒரு கட்சி தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஜெயலலிதா எடுத்த அதிரடிகள் அனைத்தும் சரியே என்று தற்போது எண்ண வைத்து வருகிறார்கள் கருணாஸ் போன்றோர். 
ஜெயலலிதாவின் இந்த பாணியை இப்போதுள்ள அரசு கொஞ்சமாவது கையில் எடுக்க வேண்டும். கருணாஸ் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் பொங்கி வரவேண்டும். 
கருணாஸ் போன்றவர்களை இப்படி பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் போக்கு தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதிமுக என்று மட்டுமில்லை, கருணாஸ் மாதிரியான ஆட்களை வளரவிடாமல், அவரது துடுக்குத்தனத்தை ஒட்ட நறுக்க வேண்டியது ஜனநாயகத்தை காப்பதாக சொல்லும் அனைத்து கட்சி தலைவர்களின் உடனடி கடமையும்கூட!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக