திங்கள், 10 செப்டம்பர், 2018

பாரத் பந்த்: நாடு முழுவதும் ..எதிர்க்கட்சிகள் ..


பாரத் பந்த்: வட மாநிலங்களில் பாதிப்பு!மின்னம்பலம் : பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தன. அதன்படி, இன்று (செப்டம்பர் 10) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
கைலாச யாத்திரைக்கு சென்றிருந்தபோது தான் எடுத்துவந்த புனித மன்சரோவர் நதி தண்ணீரை காந்தியின் நினைவிடத்தில் ராகுல் தெளித்தார். பின்னர் அங்கிருந்து பேரணியாக ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்றுவரும் போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் உட்பட பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.


மன்மோகன் சிங் பேசுகையில், “அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வேற்றுமையை மறந்து ஒன்றாக இணைந்து இந்த அரசுக்கு எதிராகப் போராட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இங்கு இணைந்துள்ளது சிறப்பானது. இதை பயன்படுத்தி நாம் மோடி அரசை தூக்கியெறிய வேண்டும். மக்கள் விரக்தியிலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மோடி அரசாங்கத்தால் முடியவில்லை. தேச நலன் சாராத பல்வேறு செயல்களை மோடி அரசு செய்துள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி பேசுகையில், “70 ஆண்டுகளில் நடக்காததை 4 ஆண்டுகளில் செய்து காட்டுவோம் என்றும் மோடி கூறுகிறார். உண்மைதான், 70 ஆண்டுகளில் நடக்காததை கடந்த 4 ஆண்டுகளில் அவர் செய்துள்ளார். ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்கிறது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது, விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி இது பற்றி பேசாமல் மௌனமாக உள்ளார். அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிட்டார் என்பது எங்களுக்கு புரியவில்லை. ஜிஎஸ்டியை ஒரே வரியாக அமல்படுத்த காங்கிரஸ் எண்ணியது. ஆனால் மோடி நமக்கு 5 வரியை கொடுத்துள்ளார். பாஜகவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டு மக்களின் மனதில் உள்ளதைத்தான் நாம் நினைக்கிறோம். பாஜகவை 2019ஆம் ஆண்டில் நாம் தோற்கடிப்போம்” என்று கூறினார்.

ஒடிசா மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது. புவனேஸ்வர்- விசாகப்பட்டினம் மற்றும் புவனேஸ்வர்- ஹவ்ரா ரயில் உட்பட 12 ரயில்களில் சேவையை கிழக்கு மத்திய ரயில்வே நிறுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜன் பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றை காங்கிரஸ் தொண்டர்கள் உடைத்துச் சேதப்படுத்தினர். பந்த் காரணமாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது. சஞ்சன் நிருபம் ,அசோக் சவான் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் வேலைநிறுத்தத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் உயர்வுக்கு எதிராகக் கண்டன பேரணிகள் நடத்தப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக