ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் ! வரலாறு

வினவு : ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அன்று அகிலா ஹாதியாவாக மாறவும் இல்லை. அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கூற ஒரு உயர் நீதிமன்றமும் இல்லை. ந்திய துணைக்கண்டத்தின் கணிசமான மக்கள் எப்படி இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்ற கேள்வியை சங்க பரிவாரத்தின் வரலாற்று ஆசிரியர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். உடனே பளிச் என்று பதில் வரும். மத்தியகாலத்தைச் சேர்ந்த முசுலிம் மன்னர்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்பார்கள். எளிமையான பதில். இல்லையா?
மத்திய காலத்திலோ அல்லது பாக் பிரிவினைக்கு முந்தைய காலத்திலோ புவியியல் ரீதியாக இந்தியாவின் எந்தப் பகுதியில் முசுலிம்கள் அதிகம் இருந்தார்கள் என்பதை பரிசீலித்துப் பாருங்கள். மேற்கே இன்றைய பாகிஸ்தான், கிழக்கே வங்கதேசம், வடக்கே காஷ்மீர், தெற்கே கேரளா ஆகிய பகுதிகள்தான் அவை. இப்பகுதிகள் முகலாய சாம்ராச்சியத்தின் மையப்பகுதிகள் அல்ல. விளிம்புப் பகுதிகள்.
இப்பகுதிகள் தொடர்ச்சியாக முகலாய சாம்ராச்சியத்தின் கீழ் இல்லை என்பதுடன், அவ்வாறு இருந்த காலங்களிலும், இப்பகுதிளின் மீது முகலாய அரசின் அதிகாரம் மிகவும் பலவீனமாகவே இருந்தது. கேரளத்தை பொருத்தவரை அது முகலாய அரசின் கீழ் என்றுமே இருந்ததில்லை. எனவே இந்தப்பகுதிகளில்தான் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக கூறுவது அபத்தமானது.

இன்றைய கிழக்கு பஞ்சாப், டெல்லி, உ.பி., பிகார் ஆகியவைதான் முகலாய அரசின் இதயப்பகுதிகள். இப்பகுதிகளில் மக்கட்தொகையில் 12 முதல் 15 விழுக்காடுதான் முசுலிம்கள். அதாவது முகலாய அரசு அதிகாரத்தின் மையப்பகுதியில், அதன் விளிம்புப் பகுதியைக் காட்டிலும் முசுலிம் மக்கட்தொகை குறைவாக இருக்கிறது.
1830 இல் இந்தியாவுக்கு வந்த பிஷப் ஹீபர், இந்தியாவில் ஆறில் ஒருவர் முசுலிம் என்கிறார். 1941 மக்கட்தொகை கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கட்தொகையில் முசுலிம்கள் 24.7% என்று கூறுகிறது. இந்த கணக்கின்படி, இந்த இடைப்பட்ட 110 ஆண்டுகளில் அவர்களுடைய மக்கட்தொகை 50% அதிகரித்திருக்கிறது எனலாம்.
எனவே முசுலிம்களின் எண்ணிக்கைக்கு மதமாற்றம்தான் காரணம் என்று கூறுவதும், அது ஒரு சில தடவைகளில் பெரும் எண்ணிக்கையில் முகலாய அரசால் வாள்முனையில் நடத்தப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இது பல நூற்றாண்டுகளில் நடந்த நீண்டதொரு நிகழ்வு. அரசு உள்ளிட்டு இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
முகலாயர் ஆட்சி என்றாலே கோயில் இடிப்பு, மதமாற்றம் என்றுதான் சிலர் நம்புகிறார்கள். இதற்கு நேரெதிரான நிகழ்வுகளும் நடந்துள்ளன. முகலாயர் ஆட்சிக்காலத்தில் மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முசுலிம்கள் இந்துக்களாகவும் மதம் மாறியிருக்கிறார்கள். இது குறித்து சங்கபரிவாரம் உவகை கொள்ளலாம்.
1540 இல் ஹுமாயூனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஷெர்ஷா சில இந்து ஜமீன்தார்களை தண்டிக்க விரும்புகிறான். யார் அவர்கள்? அந்த ஜமீன்தார்கள் மசூதிகளை இடித்து அங்கே கோயில்களைக் கட்டியவர்கள் என்று கூறுகிறான் ஷெர்ஷா. இதே காலகட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த காம்பே எனும் துறைமுக நகரில் பார்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் ஒரு மசூதிக்குத் தீ வைத்து, 80 முசுலிம்களைக் கொல்கிறார்கள். இதனை விசாரித்து உண்மைகளை அறிந்த அந்தப் பகுதியின் இந்து மன்னன், மீண்டும் மசூதியைக் கட்ட உத்தரவிடுகிறான்.
மசூதிகளை இடித்து அந்த இடத்தில் இந்துக்கள் கோயில்களைக் கட்டிக் கொள்கிறார்கள் என்று ஷேக் அகமது ஷிர்ஹிந்தி என்ற முசுலிம் மதகுரு அக்பர் காலத்தில் புகார் செய்கிறார். பஞ்சாபில் 7 மசூதிகளை சட்டவிரோதமாகவும் வன்முறையாகவும் கைப்பற்றிக் கொண்டவர்களிடமிருந்து அவற்றை ஷாஜகான் மீட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
அவுரங்கசீபின் அரசவையில் அதி உயர் அதிகாரத்தில் இருந்த ராஜபுத்திர பிரபுவான ஜோத்பூரின் ஜஸ்வந்த் சிங் , மசூதிகளை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டியதை 1658 – 59 இல் அவுரங்கசீபே குறிப்பிடுகிறார். ஆனால் அதற்குப் பின் 20 ஆண்டுகள், அதாவது ஜஸ்வந்த் சிங் இறக்கும் வரை அவர் அவுரங்கசீபின் அரசவையில் பதவியில்தான் இருக்கிறார்.

அதே போல முகலாயர் ஆட்சிக்காலத்தின் முசுலிம்கள் இந்துக்களாக மதம் மாறிய நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன. இது பெரிய அளவில் நடந்து விடவில்லை. என்ற போதிலும் ஒருவேளை முகலாயப்பேரரசு என்பது ஒரு மதவாத அரசாக இருந்திருப்பின் இது நடந்திருக்குமா என்பதுதான் நாம் விடை காணவேண்டிய கேள்வி.
முகமது பின் அமிர் அலி பால்கி, என்ற மத்திய ஆசியப் பயணி ஜகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா வருகிறார். பனாரஸ் நகரில் இந்துப் பெண்களைக் காதலித்த 23 முசுலிம்கள், இஸ்லாத்திலிருந்து விலகி இந்துக்களாக மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
‘‘சிறிது நேரம் நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். ஏன் இப்படி வழி தவறிப் போனீர்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் வானத்தை நோக்கி கையைக் காட்டிவிட்டு, பிறகு நெற்றியில் தமது விரல்களை வைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது விதி என்று அவர்கள் சொல்வதாக நான் புரிந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் அலி பால்கி.
முகலாய சாம்ராச்சியம் உதிப்பதற்கு முன்னரே காஷ்மீரை ஆண்ட ஜெயின் அல் அபிதீன் என்ற மன்னன், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாறுவதற்கு அனுமதித்தார். பின்னாளின் அக்பர் இதற்கென ஒரு சட்டமே இயற்றினார். ஒரு இந்து தனது விருப்பத்துக்கு விரோதமாக எந்த வயதில் மதமாற்றம் செய்யபட்டிருந்தாலும், அவர் தன்னுடைய முன்னோர்களின் மதத்திற்குத் திரும்பலாம் என்றது அக்பரின் சட்டம். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரும், கவுடியா வைணவம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவருமான சைதன்ய மகாபிரபு, ஒரிசாவின் முகலாய கவர்னரை கர் வாப்ஸி செய்து வைணவராக்கினார்.
அதுமட்டுமல்ல, முன் எப்போதுமே இந்துவாக இருந்திராத பத்தான் முஸ்லீம்கள் பலரையும் மதம் மாற்றினார். இவர்கள் பட்டாணி வைணவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
தபிஸ்தான் – இ – மசாஹிப் என்ற 17 ஆம் நூற்றாண்டின் பாரசீக நூல் சமூகத்தின் மேல் மட்டத்தில் பலர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியதைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக ஷாஜகானின் அரசவையில் இருந்த மிர்சா சாலி, மிர்சா ஹைதர் என்ற இரண்டு பிரபுக்கள் முதலில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி, பின்னர் இஸ்லாத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இவர்கள் யாரும் எவ்வகையிலும் தண்டிக்கப்படவில்லை.
சமூகத்தின் கீழ் மட்டமும் இதற்கு விலக்கில்லை. காஷ்மீரின் பிம்பார் பகுதியில் முசுலிம் இளைஞர்கள் இந்து பெண்களை மணப்பதும், பிறகு அந்த இளைஞர்கள் இந்துவாக மதம் மாறுவதும் சகஜமாக நடப்பதை அறிந்த ஷாஜகான் அதைத் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனுடைய உத்தரவு எதுவும் வேலை செய்யவில்லை.
இது மட்டுமல்ல.
மதம் மாறாமல் அவரவர் மதத்தில் இருந்தபடியே இந்து – முஸ்லீம் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்வதும், சுமார் 5000 தம்பதிகள் அவ்வாறு மதம் மாறாமலேயே கணவன் மனைவியாக வாழ்வதும் ஷாஜகானுக்குத் தெரியவருகிறது. மனைவி மரிக்கும் பட்சத்தில், அவள் கணவனின் மதம் எதுவோ அந்த முறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ பட்டிருக்கிறாள். இதை தடுப்பதற்கு ஷாஜகான் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
அதே போல சீக்கிய மதகுருவான, குரு ஹர்கோவிந்த் ஏராளமான பேரை இஸ்லாத்திலிருந்து மதம் மாற்றியிருக்கிறார். பஞ்சாபின் கிராத்பூர் மலைகளுக்கும் திபெத்துக்கும் இடையில் ஒரு முசுலிம் கூட மிச்சமில்லை என்று இந்த மதமாற்றத்தை மிகைப்படுத்தி விவரிக்கிறது தபிஸ்தான் என்ற பாரசீக நூல்.
ஆகவே, வரலாறு என்பதை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளக்கூடாது – எப்போதுமே.
– பேரா. ஹர்பன்ஸ் முக்யா, ஜே.என்.யு. வில் பணியாற்றும் வரலாற்றாசிரியர்.
ஜூலை, 28, 2018, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக