வியாழன், 20 செப்டம்பர், 2018

கவிஞர் கலி.பூங்குன்றன்: பறைச்சிகள் இரவிக்கை கட்டியதால் என்று பெரியார் கூறினாரா?

by Ravi Pallet
"பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது",
எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்:
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.
அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.
வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியா சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார்.

அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.
காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில் (11.12.1968) பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான்.
எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.
நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்.
இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்".
11-12-1968 அன்று சென்னை - அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 15-12-1968 -"பெரியார் களஞ்சியம்" தொகுதி 18- "ஜாதி-தீண்டாமை" பாகம்- 12 பக்கம் 73-81
தரவு:
கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக