செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அழகிரியை வரவேற்ற திமுக பகுதிச் செயலாளர் இடை நீக்கம்.. விமான நிலையத்தில் ... அன்பழகன் அறிவிப்பு

tamil.thehindu.com :  நேற்று சென்னை வந்த மு.க.அழகிரியை விமான நிலையம் சென்று திமுக பகுதிச் செயலாளர் ஒருவர் வரவேற்றார். அவரை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியாதாக அன்பழகன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
திமுகவில் கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. கருணாநிதி உயிருடன் இருக்கும் வரையில் அவர் கட்சியில் இணைக்கப்படவில்லை. கருணாநிதி உடல் நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் ஓய்வில் இருந்தபோது அவரை பலமுறை அழகிரி வந்து பார்த்துச் சென்றார்.
கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமான போது அழகிரி மீண்டும் வந்தார். கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார். காவிரி மருத்துவமனையிலும் இருந்தார். கருணாநிதியின் மறைவின்போது இறுதி நிகழ்ச்சியில் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி உட்பட குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக இருந்தனர்.

இதனால் அழகிரி மீண்டும் கட்சியில் இணைக்கப்படலாம் என்ற கருத்து எழுந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பிறகு நான்கு நாட்களில் திடீரென அழகிரி கருணாநிதி நினைவிடத்தில் வணங்கி, உண்மையான திமுகதொண்டர்கள் தனக்கு பின்னால் இருப்பதாக பேட்டி அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது மன ஆதங்கத்தை கருணாநிதியிடம் சொன்னேன் என்று கூறிய அழகிரி தன்னை திமுகவில் இணைக்காவிட்டால் திமுகவுக்கு ஆபத்து எனவும், தலைவராக ஸ்டாலின் அவசரப்படுகிறார் எனவும் பேட்டி அளித்தார். அதன் பின்னர் செப்.5 அன்று அமைதி ஊர்வலம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
தான் திமுகவில் இணைய உள்ளதாகவும், இணைந்தால் ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்றும் பேட்டியளித்தார். பின்னர் தனது ஆதரவாளர்களை வைத்து கூட்டம் நடத்தினார். பின்னர் நான் கருணாநிதியின் மகன் சொன்னதைச் செய்வேன் செப்.5 பேரணி நடக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னையில் அழகிரிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்கிற நிலையில் ஒரே ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து அழகிரி நேற்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், அழகிரியை வேளச்சேரி கிழக்குப்பகுதி திமுக பகுதிச்செயலாளர் ரவி வரவேற்றார். பின்னர் அவர் திமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். நாளை அழகிரி அமைதிப் பேரணி மூலம்  தனது செல்வாக்கைக் காட்ட உள்ள நிலையில் இந்த நிகழ்வு திமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக