வெள்ளி, 21 செப்டம்பர், 2018

ஜார்ஜைப் போல கொள்ளையடித்த ஒரு காவல் ஆணையர் சென்னை காவல் துறை வரலாற்றில் கிடையாது

சவுக்கு :சேட்டனின் சேட்டைகள். செப்டம்பர் 2018 அன்று  முன்னாள் மாநகர ஆணையர் ஜார்ஜ் குட்கா ஊழலில் தனக்கு சம்பந்தமே இல்லை என்று பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசினார்.  ஏதோ ஒரு அப்பாவி மீது அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது போல, புலம்பினார்.
தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும், அவர்களால் தன் மீது களங்கம் சுமத்தப்பட்டுள்ளது என்று உத்தமர் போலவே நடித்தார்.
குட்கா ஊழலில் வருமான வரித் துறை கைப்பற்றிய ஆவணங்களில், அவர் பெயருக்கு நேராக, முன்னாள் காவல் ஆணையர், கிறிஸ்துமஸ் பரிசு என்று உள்ளதே என்று கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.   கேள்விக்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்ட நிருபரை பார்த்து நீங்கள் முஸ்லீம்தானே என்றார்.
அடுத்தடுத்து கேள்விகள் வந்ததும் திணறினார். ஒரு கட்டத்தில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தப்பி ஓடினார்.
ஜார்ஜ் சொல்லிக் கொள்வது போல அவர் அத்தனை உத்தமரா ?

சென்னை மாநகர காவல் துறையின் வரலாற்றில், ஜார்ஜைப் போல கொள்ளையடித்த ஒரு காவல் ஆணையர் யாருமே இருக்க முடியாது.  விபச்சாரம் ஜார்ஜ் காலத்தில் கொடிகட்டிப் பறந்தது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புதிய தொழில்களே இல்லை.   ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளும் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து சென்றன.   ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை, அம்மாநிலத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் அறைகள் நிரம்புவதை வைத்து அளவிட முடியும்.   2011 முதல், சென்னை நகரின் பெரும்பாலான, நட்சத்திர ஹோட்டல்கள் 30 சதவிகிதம் கூட நிரம்பியதில்லை.
அத்தனை பெரிய ஹோட்டல்களில், மின் கட்டணம், பணியாளர் ஊதியம் உள்ளிட்ட எத்தனை செலவுகள் இருக்கும் ?  எப்படி சமாளிப்பார்கள் ?
ஜார்ஜ் ஆணையராக இருந்த காலத்தில், சென்னை நகரின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பாருக்கு சென்ற நண்பர் சொன்ன கதை இது.   இரவு 11 மணி ஆகியிருந்தது.  சட்டப்படி அந்த பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால் சரியாக 11 மணிக்குதான் அழகழகான இளம் பெண்கள் சாரி சாரியாகவும், ஜோடியாகவும் வந்தார்கள்.
பாரை அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின் திறந்து வைத்திருப்பது பெரிய விஷயமே அல்ல. இந்த பெண்கள்தான்  முக்கிய விவகாரம் என்றார்.
இது ஒரு நவீன விபச்சாரம்.   வாட்ஸப்பில் பெண்களின் புகைப்படம் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பப்படும்.  பிடித்திருந்தால், குறிப்பிட்ட வழிமுறையில் ஒரு தொகையை கட்ட வேண்டும்.  சம்பந்தப்பட்ட பெண்கள், மும்பையில் இருந்து விமானத்தில் வரவழைக்கப்படுவார்கள்.  கஸ்டமர், அறையை புக் செய்ய வேண்டியதில்லை. அடையாள அட்டை காண்பிக்க வேண்டியதில்லை.  அறை எண் வாட்ஸப்பில் அனுப்பப்படும். குறிப்பிட்ட நேரத்துக்கு இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். அந்த பெண்ணை சந்தித்த பிறகு, இருவரும் மது அருந்தி விட்டு, அறைக்கு சென்று விடுவார்கள்.  சமாச்சாரம் முடிந்த பிறகு, அந்த பெண் விமானத்தில் சென்று விடுவார். கஸ்டமரும் சென்று விடுவார்.  இதில், அந்த பெண், ப்ரோக்கர், நட்சத்திர விடுதி என அனைவரும் பயன்பெறுவதோடு, ஜார்ஜ் இதில் பெருமளவு பயனடைந்தார்.
மாதா மாதம், போயஸ் தோட்டத்துக்கு 4 கோடி மாமூல் கட்டினார்  என்றால் ஜார்ஜ் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
இது பல 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஜார்ஜ் ஆணையராக இருந்த சமயத்தில் நடைபெற்றது.  இதன் மூலம் மட்டுமே, ஜார்ஜ்,  மாதந்தோறும் சில கோடிகளை சம்பாதித்தார்.    இது ஒரு வகையான வருமானம் மட்டுமே.
இது போக, திரைப்படங்களில் வரும் டான் போல, ஜார்ஜ் செய்த மோசடிகளும், அடாவடிகளும் எண்ணிலடங்கா.
அவற்றில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.  ஜாஸ் சினிமாஸ், சத்யம் குழுமத்திலிருந்து, மன்னார்குடி மாபியாவுக்கு கை மாறியது குறித்தும், அதில் ஜார்ஜின் பங்கு குறித்தும் சவுக்கில் 30 அக்டோபர் 2015 அன்று வெளிவந்த சிறை செல்லும் சீமாட்டி கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.  இதில் ஜார்ஜின் பங்கு  மிகப் பெரியது.  ஜார்ஜ் சத்யம் குழுமத்தினர் மீது நில அபகரிப்பு வழக்கு போடாமல் இருந்திருந்தால், சத்யம் குழுமத்தினர் மன்னார்குடி மாபியா கூட்டத்துக்கு சத்தியம் தியேட்டர்களை விற்றே இருக்க மாட்டார்கள்.
வேளச்சேரியில் தொடங்கப்பட்ட பீனிக்ஸ் மாலில், உலகத் தரம் வாய்ந்த 10 திரையரங்குகளை, சத்யம் குழுமம் கட்டியிருந்தது. இந்த திரையரங்குகளை மன்னார்குடி கூட்டம் தங்களுக்கு விற்குமாறு கேட்டது.  சத்யம் குழுமமும் விற்பனை செய்யத் தயாராகவே இருந்தது.  ஆனால் மன்னார்குடி கூட்டம் அதை அடிமாட்டு விலைக்கு கேட்டது.   10 தியேட்டர்களின் சந்தை மதிப்பு 1300 கோடி.  ஆனால் மன்னார்குடி கூட்டம் அதை வெறும் 800 கோடிக்கு கேட்டது.   அந்த 800 கோடியும் கருப்புப் பணமாகத்தான் தருவேன் என்றனர். சத்யம் குழுமத்தினர் மறுத்தனர்.
இந்த இடத்தில்தான் ஜார்ஜை ஏவலாளியாக பயன்படுத்தினர் மன்னார்குடி கூட்டத்தினர்.  சத்யம் குழுமத்தின் உரிமையாளர்களான ஸ்வரூப் ரெட்டி மற்றும் சுஜய் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தார்.  அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது, நில அபகரிப்பு வழக்கு.    ஸ்வரூப் ரெட்டி, மற்றும் சுஜய் ரெட்டியை ஜாமீனில் விடுவதற்கு ஜார்ஜ் பெற்ற தொகை, 10 கோடி.  சத்யம் தியேட்டரை மன்னார்குடி கூட்டத்துக்கு விற்பனை செய்த பிறகே அவர்களால் ஜாமீனில் வெளிவர முடிந்தது.
சென்னை அடையாறு காந்தி நகரில், 5.68 க்ரவுண்டு நிலம் உள்ளது.  அந்த நிலம் சென்னை கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது.   அந்த கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளுக்கு முன்னால் 8 கூட்டுறவு சங்கங்களாக பிரிக்கப்பட்டது.   பிரிக்கப்பட்ட பின், இந்த அடையாறு நிலம், காந்தி நகர் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டது.  அந்த நிலத்தின் உரிமையை வைத்திருந்த சங்கர ரெட்டி என்பவர், சாரதா சுகுமார் என்பவருக்கு இந்நிலத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் ஒன்றை அறுபதுகளில் போடுகிறார்.
பின்னர் இவர்கள் இருவரிடையே தகராறு ஏற்படுகிறது.சாரதா சுகுமார், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.   அதில் அவருக்கு சாதகமாக 15.01.1963 அன்று தீர்ப்பு வருகிறது.  இந்த தீர்ப்பை அடுத்து, சாரதா காந்தி நகர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக்கப் பட்டு,  நிலத்தின் முழுமையான உரிமையாளராகிறார்.
ஆனால் சாரதா நேரடியாக அந்த நிலத்தை ஷீலத் அன்ட் சன்ஸ், என்ற நிறுவனத்துக்கு தன் நிலத்தை விற்பனை செய்யப் போவதாக கூட்டுறவு சங்கத்துக்கு 24.02.1968 அன்று கடிதம் எழுதுகிறார். கூட்டுறவு சங்கம், அதற்கு சம்மதிக்கிறது.   இறுதியாக இந்த நிலம் 04.02.1971 அன்று, ஷீலத் நிறுவனத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்படுகிறது.   பின்னர் இந்நிலத்தில் கட்டுமானம் நடைபெறுகிறது.  ஷீலத் நிறுவனத்தின் உரிமையாளர்கள், இந்த நிலத்தை 2013ம் ஆண்டில் விற்பனை செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
12.12.2013 அன்று இந்த நிலம் 21 கோடி, 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு  பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்ற பெரிய நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு எந்த சிக்கலும் இல்லை.  இந்நிலையில், இந்த நிலத்தின் முதல் உரிமையாளராக இருந்த சாரதா சுகுமாரின் வாரிசான, ஜெயா தம்பி என்பவர், அவர் மகன் அனில் தம்பி, மூலமாக இந்த நிலத்தை சட்டவிரோதமாக அபகரிக்க முனைகிறார்.  அனில் தம்பியும், ஜெயா தம்பியும் மலையாளிகள்.
இதற்காக இவர்கள் அணுகியது, தாதா ஜார்ஜ் ஐபிஎஸ். 16.06.2014 அன்று, 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என்று அழைத்துக் கொள்ளும் ரவுடிகள் கூட்டம், அடையாறு நிலத்துக்குள் நுழைந்து, நிலத்தில் பெயர் பலகை நட முயல்கிறார்கள்.   ஆனால் பிஜிஆர் குழுமத்தினர்,  வழக்கறிஞர்கள் உதவியோடு அந்த முயற்சியை முறியடிக்கிறார்கள். மீண்டும் 18.06.2014 அன்று அதே கும்பல் நிலத்தை அபகரிக்க முயல்கிறது. அந்த முயற்சியும் முறியடிக்கப்படுகிறது.    இந்த விவகாரத்தில் ஜிஞ்ஜு பாத்திமா என்பவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் ஆகியோருமே இந்த கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள்.
நிலத்தில் அத்து மீறி நுழைந்ததற்காக, நிலத்தில் நுழைந்த அனில் தம்பியின் பிரதிநிதி ஜிஞ்ஜு பாத்திமா மற்றும் பால் கனகராஜ் ஆகியோர் மீது பிஜிஆர் நிறுவனம் புகார் அளிக்கிறது.  ஆனால், ஜார்ஜ், பிஜிஆர் உரிமையாளர் சசிகலா ரகுபதி மீது, மத்திய குற்றப் பிரிவில், 394/2014 (மக்கிய குற்றப் பிரிவு அணி XVIII) என்ற வழக்கை பதிவு செய்கிறார்.  என்ன வழக்கு தெரியுமா ?
1971ம் ஆண்டு ஷீலத் நிறுவனத்துக்கு நிலத்தை விற்பனை செய்த சாரதா சுகுமாரின் கையெழுத்தை போர்ஜரி செய்து, ஷீலத் நிறுவனம் நிலத்தை வாங்கி விட்டதாம்.  இந்த விவகாரம் 2014ம் ஆண்டுதான் சாரதா சுகுமாரின் பேரன், அனில் தம்பிக்கு தெரிய வந்து புகார் அளிக்கிறாராம்.   அனில்
தம்பியின் தாயார் ஜெயா தம்பி யிடம் ஜார்ஜ் இந்த கட்டப்பஞ்சாயத்துக்காக பெற்ற தொகை 5 கோடி.  இதில் ரவுடிகளை அனுப்பிய பால் கனகராஜுக்கு ஜார்ஜ் அளித்த தொகை வெறும் 2 லட்சம்.  ஜிஞ்ஜு பாத்திமா மற்றும் பால் கனகராஜை தவிர இந்த விவகாரத்தில் அனில் தம்பி சார்பாக ஈடுபட்ட மற்றொரு முக்கிய நபர் ஜெயமோகன்.
ஜார்ஜின் சட்டவிரோதமான இந்த அத்துனை உத்தரவுகளையும் நிறைவேற்றியவர்கள், கூடுதல் ஆணையர் நல்லசிவம், மற்றும் துணை ஆணையர்கள் செல்வகுமார் மற்றும் ஜெயக்குமார்.  இந்த ஜெயக்குமாரைத்தான் மோசமான அதிகாரி என்று ஜார்ஜ் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.  அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்தவர், இருப்பதிலேயே பெரிய கேடி.  அவர்தான் அப்போது சென்னை மாநகர உளவுப் பிரிவின் இணை ஆணையராக இருந்த வரதராஜு.

துணை ஆணையர் ஜெயக்குமார்

துணை ஆணையர் செல்வகுமார்.

உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜு

கூடுதல் ஆணையர் நல்லசிவம்
பிஜிஆர் உரிமையாளர் சசிகலா மீது எப்ஐ ஆர் பதிவு செய்த ஜார்ஜ், உடனடியாக அவரை கைது செய்ய முயலவில்லை.  மாறாக, சில வாரங்கள் கழித்து நடக்க இருந்த சசிகலாவின் மகள், வாணியின் திருமணத்துக்காக காத்திருந்தார்.   திருமணம் நெருங்கவும், கைது செய்யப் போவதாக நெருக்கடி கொடுக்கிறார்.  கைதுக்கு பயந்து, பிஜிஆர் எனர்ஜி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுத்தது.  ஆனால் ஜார்ஜ் 20 கோடி வேண்டும் என்றார். பிஜிஆர் குழுமத்தினர் திருமணம் முடிந்ததும் மீதம் உள்ள 10 கோடியை தருகிறோம் என்று கெஞ்சினார்கள்.   தாதா ஜார்ஜ் பெரிய மனது பண்ணி, திருமணத்துக்கு பிறகு அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார்.
1971ம் ஆண்டு பத்திரப் பதிவு செய்யப்பட்ட ஒரு நிலத்தை 42 ஆண்டுகள் கழித்து, நிலத்தை விற்பனை செய்தவரின் வாரிசுகள், அபகரிக்க ஜார்ஜ் எப்படி உதவி செய்கிறார் பார்த்தீர்களா ? இந்த ஒரே விவகாரத்தில் ஜார்ஜ் சம்பாதித்தது மட்டும் 20 கோடியே 10 லட்சம்.
பிஜிஆர் நிறுவனம் சிறிய நிறுவனம் அல்ல.  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம்.  பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம் தவிர, மொத்தம் 23 நிறுவனங்களின் இயக்குநர்தான் இந்த சசிகலா ரகுபதி.  அவருக்கே இந்த கதியென்றால், ஜார்ஜ் ஆணையராக இருந்தபோது சாமான்ய மனிதர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.
அடுத்த சம்பவம்
பாண்டியராஜன் மற்றும் சுஜய் ரெட்டி என்பவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்தது,  பாண்டியராஜன், ஐபிஎஸ் அதிகாரி சிவணான்டியின் நெருங்கிய உறவினர்.  இந்த சுஜய் ரெட்டி, சத்யம் சினிமாஸ் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவர்.  2004ல் பாண்டியராஜன் மற்றும் அவர் மனைவி அனித்ரா ஆகியோர், சுஜய் ஆனந்த் மற்றும் அவர் மனைவி  தொடங்கிய ஒரு நிறுவனத்தில் 50 லட்சம் பணம் முதலீடு செய்கின்றனர்.  பின்னர் பத்தாண்டுகள் கழித்து இவர்களுக்குள் தகராறு வரவே, பாண்டியராஜன், சுஜய் ஆனந்த மற்றும் அவர் மனைவி மீது மோசடி புகார் தருகிறார்.
இதற்காக பாண்டியராஜன் ஜார்ஜுக்கு ஒரு பெரும் தொகை கொடுத்திருக்கிறார்.   சுஜய் ஆனந்தும் சத்யம் குழுமத்தை சேர்ந்தவர் என்பதால், ஜார்ஜ், அவர்களிடமும் பணம் கறக்க முடிவ செய்கிறார். கூடுதல் ஆணையர் நல்லசிவம், துணை ஆணையர் ஜெயக்குமார் மற்றும் உளவுத் துறை இணை ஆணையர் வரதராஜுவை பயன்படுத்தி, ரவுடி ஆர்ம்ஸ்ட்ராங்கை வைத்து மிரட்டுகிறார்.  சுஜய் ஆனந்த், பாண்டியராஜன் மீது புகார் அளிக்கிறார்.   ஆனால் சுஜய் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல்,  பாண்டியராஜன் புகாரில் வழக்கு 129/2015 பதிவு செய்யப்படுகிறது.  இந்த விசாரணைக்காக பாண்டியராஜன், 01.04.2015 அன்று விசாரணைக்கு ஆணையர் அலுவலகத்துக்கு அழைக்கப்படுகிறார்.
விசாரணை முடிந்து அவர் வெளியே வருகையில், கணபதி என்பவர் தலைமையில் ஒரு கும்பல், அவரை கடத்த முயற்சிக்கிறது.  பாண்டியராஜன் தப்பிச் சென்று, வேப்பேரி காவல்நிலையத்தில் தஞ்சமடைகிறார்.
டிஐஜி சிவனாண்டிதான் தன்னை கடத்த ஆளை அனுப்பியிருக்கிறார் என்று புகார் அளிக்கிறார்.  காவல்துறை கணபதி மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் அதில் சிவனாண்டியின் பெயர் இல்லை.

இந்த வழக்கில் கைது செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், குறிப்பாக, சிவனாண்டியின் தூண்டுதலில்தான் பல வழக்கறிஞர்கள், அப்போதைய தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்று, பூந்தொட்டிகளை உடைத்து, சூறையாடியது.  இந்த வழக்கிலும் இரு தரப்பிலும் பெரிய தொகையை வசூலித்திருக்கிறார் ஜார்ஜ்.  இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது போக, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள ஏஜிஎஸ் சினிமாஸ் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்க ஜார்ஜ் பெற்ற தொகை ஒரு கோடி. இதே போல, வடபழனியில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்கு தடையில்லா சான்று வழங்க பெற்ற தொகை 4 கோடி.
இப்படி ஜார்ஜ் அவர் ஆணையராக இருந்தபோது பல கோடிகளை வாரிக் குவித்திருக்கிறார்.
இப்படி ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்த ஜார்ஜ்தான், தன்னை தமிழகம் சந்தித்திராத நேர்மையான அதிகாரி என்று கூறிக் கொண்டு பேட்டியளித்தார்.
அன்பார்ந்த ஜார்ஜ், 1991ல் நான் முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தபோது, நீங்கள் அங்கே எஸ்பியாக இருந்தீர்கள்.  பின்னர், 2001ல், கருணாநிதியை கைது செய்த படையில் இருந்துவிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குநராக வந்தீர்கள்.
ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் உங்களிடம் நான் பணியாற்றியிருக்கிறேன்.
உங்களைப் போன்ற ஆணவம் பிடித்த மனிதரை இந்நாள் வரை நான் பார்த்ததேயில்லை.  லஞ்ச ஒழிப்புத் துறை வரலாற்றிலேயே இல்லாதவகையில், அத்துறையின் ரகசிய நிதியை கையாடல் செய்தீர்கள்.  உங்கள் கீழ் பணியாற்றிய ஊழியர்களை புழுவைப் போல நடத்தினீர்கள்.
உங்களை விட வயதில் பல வயது மூத்த ஊழியர்களை அவமரியாதை செய்தீர்கள்.  ஆனால், இன்று சிறுமைப்பட்டு, சந்தி சிரிக்கிறது உங்கள் நிலை.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
நீங்கள் சிறப்பான அதிகாரி என்பதால், உங்களுக்கு இரண்டாவது குறள்.
உங்களைப் போல தமிழக காவல்துறையில் ஊழல் செய்து சம்பாதித்த அதிகாரி இல்லை. ஆனால், அந்த பணத்தையும், சொத்துக்களையும் அனுபவிக்கும் நிலையில் நீங்கள் இல்லை.
நேர்மையாக இருந்து, ஓய்வூதியம் மட்டும் பெற்றுக் கொண்டு நீங்கள் இன்று இருந்தீர்கள் என்றால், உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து, புகழ் பெற்றிருப்பீர்கள்.
ஆனால் உங்கள் மீது இன்று குட்கா நாற்றம் வீசுகிறது.  முடைநாற்றம் மூக்கை பொத்த வைக்கிறது.
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்றார் பட்டினத்தார்.   அதை நீங்கள் உணராமல் போனது வேதனையே.
இந்தாருங்கள் உங்களுக்காக மற்றொரு குறள்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக