வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரி

இடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரிமின்னம்பலம் :திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் தன்னை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறார். திமுகவின் உண்மை தொண்டர்கள் தன்பக்கம் தான் உள்ளனர் என்று கூறியதோடு, அவர்களை ஒருங்கிணைத்து தனது தந்தை கலைஞரின் சமாதி நோக்கி பேரணி செல்லப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி, கடந்த 5ஆம் தேதி பேரணி சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். முடிந்தால் இவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிப்பார்க்கட்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தியா டுடே ஊடகத்திற்கு அவர் நேற்று (செப்டம்பர் 6) அளித்துள்ள பேட்டியில், “ திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் நான் இல்லாமல் திமுக வெற்றி பெறாது. திருப்பரங்குன்றத்தில் 4ஆவது இடத்துக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
பேரணி அண்மையில் நடந்துள்ள நிலையில், புதுக்கட்சி குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. எத்தனையோ தேர்தல்களில் ஸ்டாலினுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். என்னை திமுகவில் சேர்த்துக்கொண்டால் அவரை தலைவராக ஏற்று தேர்தல் பணியாற்றத் தயாராக உள்ளேன்.
அடிமட்ட மக்களிடையே ரஜினிக்கு ஈர்ப்பு உள்ளது. கலைஞர் மீது ரஜினிக்கு பிரியம் உண்டு. ரஜினி அரசியல் கட்சியை தொடங்கினால் திமுகவில் உள்ள அவரது ரசிகர்கள் அவர் பின்னால் செல்ல வாய்ப்புண்டு” என்று தெரிவித்தார்.
திருமங்கலம் ஃபார்முலா குறித்த கேள்விக்கு, “திருமங்கலம் ஃபார்முலா என்பது பணத்தை கொடுத்து வெற்றி பெற்றது என்று பலரும் தவறாக கூறி வருகின்றனர். கலைஞர் தேர்தல்களை எப்படி அணுகுகிறார் என்பதை சிறுவயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். தொண்டர்களை ஊக்குவிப்பார், திடீரென இரவு நேரத்தில் பூத்துக்கு சென்று ஆய்வு செய்வார். அவரது பாணியையே நான் திருமங்கலத்தில் பின்பற்றினேன்” என பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக