செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அறநிலைய துறையை களவாட பாஜக கும்பல் சதி .. முறியடிக்க ஒன்று திரள்வீர்! பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ..

அறநிலையத்துறை கோயில்``நீதிக்கட்சி உருவாக்கிய அறநிலையத் துறை பாதுகாக்கப்பட வேண்டும்!vikatan.com -இ.லோகேஷ்வரி : “1927-ம் ஆண்டு இந்து சமயஅறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்கவும், கணக்கு வழக்கற்ற சொத்துகளை ஆவணப்படுத்தி அரசு பதிவேட்டில் ஏற்றும் நோக்கில், கோயிலின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது நீதிக்கட்சி.” கோ யில் சொத்துகளைப் பாதுகாக்க `இந்து அறநிலையத் துறை பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்பட வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்  36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களும் 60 மடங்களும் உள்ளன. கோயில்களைப் பராமரிப்பது, அவற்றை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை அறநிலையத் துறை செய்துவருகின்றது. இந்நிலையில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் கோயில்களை முறையாக அறநிலையத் துறை பராமரிக்கவில்லை என்றும் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா `ஆலய மீட்புக் குழு’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பேசி வந்தார்.

 இதையடுத்து, கோயில்களை மீட்க கடந்த 2-ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார் ஹெச்.ராஜா.

அந்தப் போராட்டத்தில் ஹெச்.ராஜா பேசுகையில், “கோயில்களை அரசு கையகப்படுத்தும் போது, அனைத்துக் கோயில்களிலும் வழிபாடு நடந்து வந்தது. ஆனால், இப்போது 9,000 கோயில்களில் வழிபாடு இல்லை. 2,000 கோயில்கள் இருந்த இடத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்ளன. அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் 5.2 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாக அரசு கொள்கை விளக்கக் குறிப்பு கூறுகிறது. ஆனால், 2018-ம் ஆண்டில் 4.78 லட்சம் ஏக்கர்தான் உள்ளது என்று அரசு கூறுகிறது. 55,000 ஏக்கர் என்ன ஆனது என்று தெரியவில்லை. 4.78 லட்சம் ஏக்கரும் பெரிய அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அதிகாரிகள் மீட்கவில்லை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர்ச்சியாக சிலைக் கடத்தல் நடக்கிறது. அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் தனபால் கூட சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட தனபாலை நடுரோட்டில் நிற்கவைத்து தோலை உரிக்க வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கடுத்த சில நாள்களில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில், “அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில் சொத்துகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கிறார்கள்” என்றும் அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகள் வீட்டுப் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார் ஹெச்.ராஜா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினார்கள். இதையடுத்து, அறநிலையத் துறையில் உள்ளவர்களின் வீட்டுப் பெண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக, நாகர்கோயில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹெச்.ராஜாவைக் கண்டித்து, வரும் 27-ம் தேதி அறநிலையத் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில், “இந்துக்களுக்குச் சொந்தமான கோயில், மடங்களின் சொத்துகளைப் பார்ப்பனர்கள் அபகரித்துக் கொள்ளாமல் தடுக்க, இந்து அறநிலையத் துறைப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும்” என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துக்குப் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், “பாதுகாப்பு இயக்கம் குறித்து, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அறநிலையத் துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் சில தினங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுப.வீரபாண்டியனும் இதே கருத்தைத் தெரிவித்திருப்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியனிடம் பேசினோம். “தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பலபேர் மிகப்பெரிய அளவில் சொத்துகளை எழுதிவைத்திருக்கின்றனர். கோடிக்கணக்கான சொத்துகளை குறிப்பிட்ட சிலர் அனுபவித்தும், கொள்ளையடித்தும் வந்தனர். இதையடுத்து, நீதிக்கட்சியின் முதல்வரான பனகல்அரசர் ராமராயநிங்கர், 1922-ம் ஆண்டு `இந்துப் பரிபாலன சட்டம்’  கொண்டு வந்தார். 1927-ம் ஆண்டு இந்து சமயஅறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்கவும், கணக்கு வழக்கற்ற சொத்துகளை ஆவணப்படுத்தி அரசு பதிவேட்டில் ஏற்றும் நோக்கில், கோயிலின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது நீதிக்கட்சி. அதேபோல், கோயிலில் இருந்த தீண்டாமையையும் அகற்ற அறநிலையத் துறையை நீதிக்கட்சி கொண்டு வந்தது. சமூகநீதிக்கு வழிவகுக்கும் அறநிலையத் துறையை தற்போது கையகப்படுத்த நினைக்கிறது ஒரு கூட்டம். நீதிக்கட்சி உருவாக்கிய அறநிலையத் துறை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். அறநிலையத் துறை நடத்தும் போராட்டத்திலும் பங்கு கொள்வேன்” என்றார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக