திங்கள், 24 செப்டம்பர், 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு 45,000 பேர் ஆதரவு!

45,000 பேர் ஆதரவு: ஸ்டெர்லைட்!மின்னம்பலம்: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த மூவர் குழுவின் சார்பில், சென்னை பசுமைத் தீர்ப்பாய வளாகத்தில் இன்று (செப்டம்பர் 24) கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையில் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில், ஆலையை ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழுவை அமைத்தது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். அதன்படி நேற்று (செப்டம்பர் 23) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை தொடங்கினர். இதன் பின்னர், தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிகளவில் மனுக்கள் வந்ததாகத் நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள தென்மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஸ்டெர்லைட் துணைத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். எதிர்மனுதாரர்கள், மனுதாரர்கள் என அனைவரும் நேரில் ஆஜராகி, ஆவணங்களை அளித்ததுடன் தங்கள் தரப்புக் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான மனுக்களை ஆய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலைக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர் 45,000 பேர் கையொப்பம் இட்டிருந்தனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆய்வுக் குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க வந்தவர்களிடம், அக்டோபர் 5ஆம் தேதியன்று மூவர் குழு கருத்து கேட்கவுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை குறித்து, இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். “இன்றைய கருத்துக் கேட்பு கூட்டத்தில் 1.30 மணி நேரம் வரை ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை எடுத்துரைத்தார். தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆட்களைக் கொண்டு வந்துள்ளது. சில தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் ஒரு சில அமைப்புகளைக் கொண்டுவந்து, ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்றும், ஆலை மூடப்பட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூற வைத்துள்ளனர். இதோடு இன்றைய கூட்டம் முடிவடைந்தது.
தெருவோர மக்கள், பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள், பல லட்சக்கணக்கான மக்களின் குரலைக் கேட்க வேண்டும். அதற்கு முழுமையான வாய்ப்பு வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு நாசகார ஆலை என்று கூறினேன். அதற்கு உங்களுக்கென்று நேரம் ஒதுக்கப்படும், அக்டோபர் 5ஆம் தேதியன்று உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என நீதிபதி தருண் அகர்வால் கூறினார்” என்று வைகோ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக