ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

37 ஊழியர்கள்; மாதம் ரூ.15,000 சம்பளம் – சட்டவிரோதமாக தனி அலுவலகம் நடத்திவந்த அரசு அதிகாரி கைது!

கைது செய்யப்பட்ட சுப்பிரமணியன்
சோதனைvikatan.com : வேலூர் மண்டல நகர ஊரமைப்புத் துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
இதில், 3 லட்சத்து 28 ஆயிரம் லஞ்சப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், துணை இயக்குனர் சுப்பிரமணயன் தனியாக வீடு எடுத்து 37 பேரை வைத்து தனி அலுவலகமே நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரவு முழுதும் நடந்த சோதனை 8 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவு பெற்றது. வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை உள்ளடக்கிய வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம். இதன் துணை இயக்குனராக சுப்பிரமணியன்( பொறுப்பு) இருந்து வருகிறார்.
இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கிகாரம் அளிக்க துணை இயக்குனர் சுப்பிரமணியன்  லஞ்சம் பெறுவதாக வந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து, வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் (07.09.2018) நேற்று இரவு 7.30 மணி முதல் சத்துவாச்சாரில் உள்ள அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கப்பணம் மொத்தம் 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை அங்கிருந்து பறிமுதல் செய்தனர். பல முக்கிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் கணக்கு காட்டப்பட்டு இருக்கும் பல ஆவணங்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, துணை இயக்குனர் உட்பட அலுவலகத்தில் பணியாற்றும் 11 ஊழியர்களிடமும் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது. ஆவணங்கள் இல்லாதது குறித்து துணை இயக்குனர் சுப்பிரமணியனிடம் விசாரணை செய்தபோது அவர் கூறியது அதிர்ச்சி ரகம். சுப்பிரமணியன், வள்ளலார் விவேகானந்தர் தெரிவில் தனியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் சட்டவிரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளுக்கு பட்டா ஏற்பாடு செய்வது, பட்டா மாற்றித் தருவது போன்ற வேலைகளைச் செய்துவந்துள்ளார். இந்த வேலைக்கு பணியாற்ற 37 பேரை நியாமித்து அவர்களுக்கு மாதம் தலா 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளார்.


இந்த 37 பேரை  மேற்பார்வை செய்ய இதே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரை நியாமித்து அவருக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து வந்துள்ளார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்து பணத்தை அள்ளியுள்ளார் என்பது தெரியவந்தது. அதாவது,அரசு அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலையை சட்டவிரோதமாக தனியாக வீடு எடுத்து, ஒரு தனி அரசு அலுவலகத்தையே நடத்திவந்துள்ளார்.

“வள்ளலார் விவேகானந்தர் தெருவில் உள்ள வீட்டை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், அங்கிருந்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் கணிணி பதிவுகளை கைபற்றியுள்ளனர். இதையடுத்து துணை இயக்குனர் சுப்பிரமணியனை மீண்டும் சத்துவாச்சாரி அலுவலகம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டனர். துணை இயக்குனர் சுப்பிரமணியன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகாளாவே இவர் தனியாக இடம் எடுத்து ஆட்களை வைத்து சட்டவிரோதமாக அலுவலக வேலை செய்யதது தெரிய வந்துள்ளது.
கடந்த ஒன்றாறை ஆண்டுகளாக தனியாக அலுவலகம் நடத்தியதற்கு மட்டும் இவர் மாதம் சுமார்  4 லட்சம் ரூபாய் வரை செலவழித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதன் மூலம்  கடந்த  ஆண்டுகளில் பலகோடி ரூபாய்க்கு லஞ்சம் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர், சுப்பிரமணியனிடம் இரவு முழுவதும்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் பின்னணியில் லோக்கல் அமைச்சருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகிறனர்.
 vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக