சனி, 8 செப்டம்பர், 2018

திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்-2! கலைஞர்!

சிறப்புக் கட்டுரை: திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்-2!மின்னம்பலம் ::கலைஞரின்  சினிமா வரலாறு குறித்து முந்தையக் கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
குண்டலகேசி காப்பியத்தில் இருந்து எடுத்தாண்டு அவர் இதே பெயரில் எழுதிய நாடகத்தை அடிப்படையாக கொண்டு இதன் திரைக்கதை அமைந்ததது. தமிழ் திரைப்பட உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய கடைசி படமாக மந்திரி குமாரி அமைந்தது. ஹாலிவுட்டுக்கு சென்று பணியாற்றிய பிறகு அவர் திரும்பி வந்து, மாடர்ன் தியேட்டர்சுக்காக பாரதிதாசன் எழுதிய பொன்முடியை இயக்கினார். அதன் பிறகு மந்திரி குமாரி அமைந்தது. மந்திரி குமாரி படம் டங்கன் மற்றும் டி.ஆர்.சுந்தரம் இணைந்து இயக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதி பரிந்துரையின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் இந்தப் படத்தின் நாயகனாக நடித்தார். அப்போது கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் நல்ல நண்பர்களாக ஆகியிருந்தனர். மூன்று படங்களில் இணைந்து பணியாற்றினர்.

எம்ஜிஆர் முக்கிய வேடத்தில் நடித்த ராஜகுமாரி மற்றும் அபிமன்யூ படத்திற்குப் பிறகு, மருத நாட்டு இளவரசி ( எம்ஜிஆர் மற்றும் அவரது வருங்கால மனைவி வி.என்.ஜானகி நடித்தனர்) படத்தின் திரைக்கதை அதன் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்காததால், படத்தை தாமதப்படுத்திய நிலையில், கலைஞர்  அதை திருத்திக்கொடுத்தார். திரைக்கதையை திருத்தியது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு, கருணாநிதிக்கு சுந்தரத்திடம் இருந்து அழைப்பு வரக் காரணமானது.
கருணாநிதியின் திறமையை புரிந்து கொள்ள அவரது திரைக்கதையின் இரண்டு அம்சங்களை அலசி ஆராய வேண்டும். முதல் அம்சம் தன்னிடம் வழங்கப்பட்ட கதைகளில் அவர் செய்த அடிப்படை மாற்றம். இரண்டாவது அம்சம், அதை வித்தியாசமானதாக மாற்ற அவர் கடைப்பிடித்த திராவிட வார்ப்பு. தனது முன்னோடிகளான அண்ணா மற்றும் பாரதிதாசன் பின்பற்றிய பாணியில் அவர் பெற்றிருந்த பயிற்சியின் விளைவாக இந்த திராவிட வார்ப்பு அமைந்திருந்தது. மந்திரி குமார், பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா, ராஜா ராணி மற்றும் பூம்புகார் இதற்கான உதாரணங்கள். இந்த படங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றிலும் அதன் வெற்றிக்கான அம்சங்கள் இருந்தன. அதில் பின்பற்றப்பட்ட பாணியில் வார்ப்பு மற்றும் வேறுபாடுகள் இருந்தன. அடிப்படையாக புராணங்களில் இருந்து வரலாற்றுக்கான மாற்றம் நிகழ்ந்தது.

மந்திரி குமாரியில், நல்ல அரசன், வில்லனான ராஜகுரு, போர்க்குணம் கொண்ட தளபதி மற்றும் மோசமான வில்லத்தனம் கொண்ட ராஜகுருவின் மகன் ஆகியோர் இருந்தனர். ராஜகுரு வில்லனாக இருப்பது என்பது திராவிட நாடகங்களில் காணப்படும் வார்ப்பாகும். இதை அவர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய முதல் படத்திலேயே திரையில் புகுத்தினார். இந்து மதத்தில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனிய ஆதிக்கத்தை ராஜகுரு பாத்திரம் பிரதிபலிக்கிறது. ராஜகுருவின் தவறான செயல்கள் மற்றும் வஞ்சக வழிகள் அரசரைத் தவறாக வழிநடத்தி மக்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. தளபதி பாத்திரம் தான் இன்னும் முக்கியமானது. இவர் சாமானிய மக்களிடம் இருந்து வந்ததோடு, அதிகாரத்தில் இருந்து விலகியே வாழ்பவராக இருந்தார். தளபதி எப்போதும், துணிச்சலான போர்வீரனாக இருந்தார், பதவிக்கு ஆசைப்படவில்லை. மக்கள் துயர் துடைக்கும் முயற்சியில் அவர் அதிகார மோதலில் சிக்கி கொள்கிறார். திராவிட அரசியல் வழிநடப்பவர்களுக்கு உண்மையான தளபதி அறிஞர் அண்ணா தான். அவர் பெரியாரின் தளபதியாக இருந்தார். திராவிட மேடைகளில், திராவிட இயக்கப் பத்திரிகை, கட்டுரைகளில் அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். திரைப்பட தளபதி பலவித பரிமாணங்களை கொண்டிருந்தார். அரசரை தன் கைப்பாவையாக வைத்திருக்கும் தீயவனாக தோன்றும் இடங்களில், மொத்த கதையும் அவரது மாற்று/அழிவு/சீர்திருத்தத்தை சுற்றி அமைந்திருக்கும். எல்லாவற்றையும் சரி செய்யும் புதிய சாமானியர் தளபதி மூலம் இது சாத்தியமாகிறது. சாமானியர்களின் தளபதி இளவரசியின் மனதையும் வென்று, வருங்கால அரசியின் கனம் கவர்ந்தவர் புதிய அரசராகவும் உருவாகிறார். ஆனால் வழக்கமாக அரியணை ஏற, பிளாஷ்பேக் கதையில் சாமானியரை அரச வம்சத்தோடு இணைக்கும் கதையாக அமையவில்லை. திமுக தேர்தலுக்கு தயாரான நிலையில், திரைப்படத்தில் தீய சக்திகளை அகற்றி அரியணை ஏற இருந்தவர் கூட, மகுடத்தை துறந்து மக்களாட்சியை பிரகடனம் செய்கிறார். கருணாநிதி எழுதிய இத்தகைய வரலாற்று படங்கள் அரசியல் கருத்துக்களை பிரதிபலிக்க, ஆட்சியில் இருந்தவர்களை விமர்சிக்க உதவின..
திரைக்கதை சக்தி
மூன்று படங்களின் திரைக்கதையை ஆய்வு செய்தால், விரும்பிய விளைவைக் கொண்டு வருவதற்காகக் கையாளப்பட்ட உத்திகளைப் புரிந்து கொள்ளலாம். இவற்றில் இரண்டு படங்கள் வெற்றிகரமாக மேடை நாடகமாக விளங்கி பின்னர் தமிழ் திரையுலகின் முத்திரை படங்களாக மாறின. பராசக்தி மற்றும் மனோகரா ஆகியவைதான் இந்தப் படங்கள். பராசக்தி பாவலர் பாலசுந்தரம் எழுதிய நாடகம். தமிழர்களுக்கு ஆழமான வடுக்களை உண்டாக்கிய பர்மா போரில் சிக்கி அவதிப்படும் குடும்பத்தின் கதையை அது விவரித்தது. ஏ.வி ஏ.வி.எம் செட்டியார், பி.ஏ.பெருமாளுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, பர்மா போரில் செட்டியார் சமூகத்தினர் பலர் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்தக் கதை அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது. கருணாநிதி இதன் திரைக்கதை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரது திரைக்கதை தமிழ் திரையுலகின் மைல்கற்களில் ஒன்றாக மாறியது. படத்தில் வரும் குடும்பத்தின் வலி மற்றும் வேதனைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தப்பட்டது. இதில் கடைப்பிடிக்கப்பட்ட உத்தி மைய கதையில் இருந்து விலகவில்லை. இந்த திறமையான மாற்றம் மாயத்தை ஏற்படுத்தியது. பாண்டியன் தனது கட்டுரையில், இந்த படத்தை திராவிட இயக்க வரலாற்றில் வைத்து, அதுவெளிப்படுத்திய அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய கொள்கைகளை அலசியுள்ளார்.

மனோகரா நாடக மேதை பம்பல் சம்பந்த முதலியாரால் எழுதப்பட்டது. தான் காதல் வயப்படும் இளம் பெண்ணிடம் மகுடத்தை அளித்து விட்டு நிற்கும் அரசரைச் சுற்றி இதன் கதை அமைந்திருந்தது. இந்த கள்ளக்காதலி ராணியின் சுயநலத்தால் குடும்பம், மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். கலைஞர்  எழுதிய திரைக்கதை இந்த கதையின் அம்சம் அரசியல் கொண்டதாக மாற்றியது. வசந்தசேனை அரசியல் சொல்லாடலின் தீய பெண்மணிக்கான குறியீடாக அமைந்தது. அரசவையில் மனோகரன் தீப்பிழம்பாக பேசும் காட்சி மறக்க முடியாததாக அமைந்தது. ஆட்சியில் இருக்கும் வஞ்சகர்களின் செயலால் அவமானப்படும் போதெல்லாம் மனோகரன் தன் தாயிடம் ஆணையிடுங்கள் அன்னையே எனக் கெஞ்சுகிறார். ஆனால் தாய் அவனை சாந்தப்படுத்துகிறாள். வசந்தசேனை வரம்பு மீறும் போது, அரசவைக்கு வரும் தாய், தனது மகன் தூணில் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதை பார்த்து வெகுண்டு, பொறுத்தது போதும்,பொங்கி எழு மனோகரா என ஆணையிடுகிறாள். ஆவேசமாக மனோகரன் பேசும் பேச்சு ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது. சொல்லாட்சி மிக்க, எதுகை மோனையுடன், உணர்ச்சி மயமான வசனங்கள் அண்ணாவின் வேலைக்காரி படத்திலிருந்தே தனி முக்கியத்துவம் பெற்றிருந்தன. ராஜன் குறை தனது கட்டுரையில் கூறுவது போல, அலங்காரநயமும், நேர்த்தியும் கொண்ட மொழியில் இத்தகைய பேச்சுகள் திரை வெளியைக் கடந்து பொதுமக்களைக் கலைநயத்துடனும், தெளிவாகவும் சென்றடைந்தன.
அருமையான திரைக்கதைக்கு ராஜாராணி படம் இன்னொரு நல்ல உதாரணமாக அமைகிறது. கருணாநிதி இந்தப் படத்திற்கான திரைக்கதையில் சமூக மற்றும் வரலாற்றுத் தன்மையை கையாள்வதில் தனக்குள்ள திறமையை அழகாகப் பயன்படுத்தியிருந்தார். தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அடையாளத்தை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைந்திருந்தது. கருணாநிதி ஷேக்ஸ்பியரின் காமடி ஆப் எரர்ஸ் நாடகத்தை அறிந்திருந்தாரா எனத்தெரியவில்லை, ஆனால் படம் அந்த நாடகத்தை நினைவுபடுத்துகிறது. வசதியான இளைஞரான ராஜா ( சிவாஜி) நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறிய பணக்கார பெண்ணாக நடிக்கும் ராணி ( பத்மினி) மீது காதல் கொள்கிறார். இதை அறிந்த பாபுவும் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) பிரச்சனை செய்கிறார். அனைத்து பாத்திரங்களும் நாடகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததால், படத்தில் நாடகம் முக்கிய அம்சமாக அமைந்து, வரலாற்று நாடகத்தை இணைப்பதற்கான வாய்ப்பாகவும் இருந்தது. படத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் ஒற்றைக்காட்சியாக வரும் புகழ் பெற்ற சேரன் செங்குட்டுவன் நாடகம் ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றது. ஏற்ற இறக்கங்கள் மிக்க உச்சரிப்புடன் சிவாஜி ஐந்து நிமிடங்களுக்கு மேல் இடைவெளியில்லாமல் பேசியது மறக்க முடியாததாக அமைந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற சாக்ரட்டீஸ் நாடகத்தின் தனிப்பேச்சு மற்றொரு மகத்தான அம்சமாக அமைந்தது. இதில் சாக்ரட்டிஸ் கிரேக்க பெரியராக உருவகப்படுத்தப்பட்டிருந்தார். படத்தின் முடிவு மற்றும் அதில் நாடகத்தை இணைத்தது சிறந்த உத்தியாக அமைந்து, கலைஞரின்  திரைக்கதை ஆற்றலுக்கு சான்றானது. சாக்ரட்டிசிடம் விஷம் வழங்கப்பட்டதும் அவர் உணர்ச்சி பொங்க பேசி முடிக்கிறார். இங்கு தான் எதிர்பாராத திருப்பம் வருகிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ( படத்தில் வில்லன் பாபுவின் மைத்துனர்), நாடகத்திற்குத் தலைமை வகிப்பவர் உணர்ச்சி வயப்பட்டவராகிறார். சாக்ரட்டிஸ் தண்டனையை தடுத்து அவரைக் காப்பாற்ற நினைக்கிறார். அவர் மேடையில் நுழைந்து, காட்சியை நிறுத்தி, சாக்ரட்டிஸ் கைகளில் இருந்து விஷ கோப்பையை பறித்து ( வில்லன் அதில் தேனுக்கு பதில் நிஜ விஷத்தை நிரப்பியிருந்தார்), வில்லனைக் குடிக்க வைக்கிறார். இது சிக்கலுக்கு தீர்வானது. காமெடி ஆப் எரர்ஸ் மற்றும் அடையாள மாற்று அடிப்படையாகக் கொண்ட படம் அந்த நாட்களில் புரட்சிகரமாக அமைந்தது.

சிவாஜி, எம்ஜிஆர்
கருணாநிதியின் முக்கியமான பங்களிப்பு என்பது தமிழ் திரைத்துறையின் இரு முகங்களான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் வாழ்க்கையை உருவாக்கியது அல்லது வடிவமைத்ததாக அமைகிறது. இந்த இரண்டு முகங்களும் தமிழர் வாழ்க்கையின் பல அம்சங்களை பிரதிபலிக்கின்றன. குறிப்பாகக் கடந்த காலத்தின் தீவிர அரசியல் மற்றும் அதற்கு பிந்தைய காலத்தைப் பிரதிபலிக்கின்றன. அவர்களின் இருப்பு, ரசிகர்கள் முதல் அரசியல் கொள்கை வரை கலாச்சார வெளியில் இரண்டு நேர் எதிரான நிலையைக் கொண்டிருந்தன. 25 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்திய இந்த இருவரும் தங்களுக்கான தனியிடத்தை உருவாக்கிக் கொண்டு, கருணாநிதி பாடுபட்டுக்கொண்டிருந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டனர். ஆனால் அது அவர்களை உருவாக்கிய மேடையின் இருப்பை மறைத்துவிடவில்லை.
பராசக்தி படம் மூலம் சிவாஜி கணேசன் உடனே நட்சத்திர அந்தஸ்து அடைந்தார். இந்த நிகரில்லாத நடிகர், இன்னமும் கொண்டாடப்படுபவர், வெற்றிகரமான திரை நட்சத்திரமாக விளங்கியவர் தனது சார்பை காங்கிரஸ் கட்சிக்கு மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளாக சிறு பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். கருணாநிதியுடன் ராஜகுமாரி (1947) படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தாலும், மந்திரிகுமாரி (1950) படம் தான் அவரை நட்சத்திர அந்தஸ்து பெற வைத்தது. அது தனி நாயகனாக அவர் நடித்த முதல் படமாகும். கருணாநிதியின் தலையீடு மூலமே இது சாத்தியமானது. கதை, திரைக்கதை மற்றும் வசனத்திற்குப் பொறுப்பேற்றிருந்த கருணாநிதியே மந்திரிகுமாரி வெற்றிக்கு முக்கிய காரணம். அதன் பிறகு வெளியான பிரம்மாண்ட படமான மலைக்கள்ளன் (1954) படம் மூலம் எம்.ஜி.ஆர் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து அடைந்தார். படத்தில் அவருடன் இணைக்கப்பட்ட ராபின் ஹூட்/ஏழை பங்காளன் தோற்றம் எம்ஜிஆர் தொழில் வாழ்க்கையில் பல அற்புதங்களை செய்தது. இந்தப் பிம்பம் பாதிக்கப்பட அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்தப் பிம்பத்தை அவர் கவனமாக வளர்த்துக்கொண்டார். 1960களில் திமுக ஆட்சி அதிகாரத்தை நெருங்கியபோது, கட்சி கொள்கை திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட பிம்பம் இடையே சமநிலை வகித்த பாதையை அவர் கவனமாக தேர்வு செய்து கொண்டார். கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் நேர் எதிர் முகாம்களில் வந்து சேர வழி வகுத்த நீண்ட கதை இது. இன்னமும் இதன் தாக்கம் தொடர்கிறது.
ஆட்சியில் இருந்தாரா இல்லையா என்பது கலைஞருக்கு  ஒரு போதும் முக்கியமாக இருந்தது இல்லை. கலை மற்றும் இலக்கியத்திற்கான அவரது ஆர்வம் ஒருபோதும் தணியவில்லை. திமுக தலைவர் மற்றும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கும் திரைப்படத்துறைக்கும் இடையிலான உறவு எப்போதும் துண்டிக்கப்பட்டது இல்லை. அவர் கடைசியாக திரைக்கதை எழுதியது 2016 ல், என்பது, 70 ஆண்டுக்காலம் திரைத்துறை செயல்பாடுகளை கொண்ட மகத்தானவராக அவரை முன்னிறுத்துகிறது. இந்திய துணைக்கண்டத்தில் இவ்வாறு செய்தது அவர் மட்டும் தான். கால மாற்றத்திற்கு ஈடுகொடுத்து அந்தந்த காலத்திற்கு ஏற்ற வார்த்தைகளுக்கும் ஈடு கொடுக்க முடிந்தது, அவர் தனது அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிட்சயத்தை எந்த அளவுக்கு புதுப்பித்துக்கொண்டிருந்தார் என்பதை உணர்த்துகிறது. அவர் திரைப்படத்துறையின் அனைத்து வடிவங்களிலும் பரிசோதனைகளை மேற்கொண்டார். தொலைக்காட்சி தொடரிலும் அவர் வெற்றி பெற்றார். மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜர் பற்றிய அவரது தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. சமரசமில்லாத, உறுதி மிக்க அந்த நாத்திகர் தெளிவான லட்சியம் கொண்டிருந்தார். ஆளும் கட்சியால் இந்துத்வா கொள்கை தீவிரமாக முன்னெடுக்கப்படும் அரசியல் வெளியில் அவர் அதற்கு நேர் எதிரான சொல்லாடலை வலுவாக்கினார். ஏற்றத்தாழ்வு அடுக்குகளில் மூழ்கியிருந்த சமூகத்தை சீர்திருத்தியவராக அவர் ராமானுஜரை சித்தரித்தார். அது தான் கருணாநிதி. அவரது குன்றாத உற்சாகம், சமூக பிரச்சனைகளில் எப்போதும் விழிப்புடன் இருப்பது மற்றும் துடிப்பாக எதிர்வினையாற்றுவது அவரது தனிச்சிறப்பாகும். தமிழ் திரைப்பட வரலாறு அவருக்கு இடம் இல்லாமல் முழுமையை அடையாது. ஏனெனில், அதன் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான அவர் அதன் நவீன யுகத்தை வரையறை செய்திருந்தார்.
கட்டுரையாளர் குறிப்பு:
வி.எம்.எஸ்.சுபகுணராஜன், திரைப்பட விமர்சகர், ஆய்வாளர், நாடக ஆர்வலர் மற்றும் திராவிட ஆய்வு ஆர்வலர்.
(தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியரான ராஜன் குறை இந்தக் கட்டுரையை வாசித்து கருத்துக்கள் வழங்கியதற்கு இக்கட்டுரையின் ஆசிரியர் நன்றி தெரிவித்துக்கொள்கிறார்.)
நன்றி: ஃபிரன்ட்லைன்
தமிழில்: சைபர்சிம்மன்
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக