திங்கள், 13 ஆகஸ்ட், 2018

பாப்பம்மாளுக்கு எதிராக போராட்டம் .. தலித் சமுகத்தை சேர்ந்தவர் சமைக்ககூடாதாம்,,,?

பாப்பம்மாளுக்கு எதிராகப் போராட்டம்!மின்னம்பலம் :திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு எதிராக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமலைகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில், கடந்த மாதம் 16ஆம் தேதி பாப்பம்மாள் சத்துணவு சமையலராகப் பணியில் சேர்ந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இதையறிந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் சிலர், தலித் சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் சமைக்கக் கூடாது என்று கூறினர். சாதிரீதியாகப் பாப்பம்மாளைத் திட்டி, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்கள்.
இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பம்மாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாள் இடமாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. அவர், அதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இதையடுத்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அரசுப் பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், அந்த ஊரைச் சேர்ந்த 87 பேர் மீது சேவூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று பாப்பம்மாள் சமைத்த உணவில் பல்லி விழுந்ததாகவும், என்றைக்கும் இல்லாமல் பவித்ரா என்கிற தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த குழந்தை அன்றைய தினம் மதிய உணவு வாங்கியதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து, சத்துணவில் பல்லி இருந்ததாகச் சில பெற்றோர்கள் எழுப்பிய புகாரின் அடிப்படையில், பாப்பம்மாள் மீது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா போலீசில் புகார் செய்தார்.

"நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப் பள்ளியில் நான் பணிபுரியக் கூடாது என்பதற்காக, நான் சமைத்த உணவில் பல்லி விழுந்துள்ளது என்ற பொய்யான குற்றச்சாட்டுகளைச் சாதிய வன்மத்தோடு பொதுமக்களும், பள்ளித் தலைமை ஆசிரியரும் என் மீது சுமத்தியுள்ளனர்" என்று கடந்த 7ஆம் தேதியன்று அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளரிடம் பாப்பம்மாள் புகார் மனு கொடுத்திருந்தார்.
ஊர் மக்கள் மீது பாப்பம்மாள் பொய்யான புகார் கொடுத்துள்ளதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக