திங்கள், 27 ஆகஸ்ட், 2018

நேபாளம் . மாதவிடாய்க்கு எதிரான வன்கொடுமைக்கு சிறை தண்டனையும் அபராதமும் .

நேபாளம்: மாதவிடாய் கொடுமைக்கு எதிரான சட்டம்!மின்னம்பலம்: நேபாளத்தி்ல் மாதவிடாயை காரணமாக வைத்து பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
பெண்கள் தாய்மைப்பேறு அடைவதற்கான உடல் தகுதி அடைவதுதான் மாதவிடாய். இது மருத்துவம் மற்றும் அறிவியல் பார்வையாகும். ஆனால் இந்து மதம் மாதவிடாயை தீட்டாக கருதுகிறது. மாதவிடாய் காலத்தில் வழிபாடு மற்றும் பொது நிகழ்வுகளில் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று இந்துக்களின் மனு சாஸ்திரம் கூறுகிறது. இதன் அடிப்படையில்தான் கேரளாவிலுள்ள ஐய்யப்பன் கோயிலில் பல தலைமுறைகளாக 10 வயதிற்கும் மேலும் 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்து நாடு என்று அறிவித்து கொண்டிருக்கும் நேபாளத்தில் மாதவிடாயை முன்னிறுத்தி பெண்களை கோயிலுக்குள் அனுமதி மறுத்தால் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற விதிகள் உள்ள ஒரு சட்டத்தை அந்நாட்டின் அரசு இயற்றியுள்ளது. கடந்த 17ம்தேதியன்று அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின்படி, பெண்களுக்கு மாதவிடாயை காரணம் காட்டி கோயிலுக்குள் அனுமதி மறுப்பவருக்கு 3 மாத கால சிறைத்தண்டனையும் அல்லது 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நேபாளத்திலும் நமது நாட்டை விட மோசமான முறையில்தான் பெண்கள் மாதவிடாயின்போது நடத்தப்பட்டனர். அந்நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசுத்தமானவர்களாகவும், அழுக்கானவர்களாகவும், தீட்டானவர்களாகவும், துரதிருஷ்டமானவர்களாகவும் கருதப்பட்டனர். அந்த காலங்களில் அவர்கள் சத்தான உணவை தொடக்கூடாது. அவர்களின் கணவர்களையும், மற்ற குடும்ப உறுப்பினர்களையும்,உறவினர்களையும், நீர் ஆதாரங்களையும், மரங்களையும், கால்நடைகளையும் தொடக்கூடாது
இது தொடர்பாக காஞ்சன்பூர் நகராட்சியின் ஒரு வார்டின் தலைவர் பகதுார் மஹாரா என்பவர் கூறுகையில், மாதவிடாய் காலத்தில் பெண்களை மாட்டுக்கொட்டகையில் ஒரு கிழிந்த துணியைக் கொடுத்து (ரத்த போக்கை சுத்தம் செய்து கொள்வதற்காக) அடைத்து விடுவார்கள். இதனால் அவர்கள் கடுமையான வெப்பம் மற்றும் குளிரினால் அவதியுற்று நோயாளிகளாகி விடுவதும் சாதாரணம். இது போன்’று குடிசையிலோ மாட்டுக்கொட்டகையிலோ அடைக்கப்படும் பெண்களுக்கு நிமோனியா,வயிற்றுப்போக்கு,சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு சிலர் இறந்துள்ளனர். சிலர் பலவீனமாகி நீண்ட கால நோயாளிகளாகியுள்ளனர்.
அச்சாம் மாவட்டத்தில் ஒரு பெண் மாட்டுக்கொட்டகையில் இருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்தார். இன்னொருவர் புகை மூட்டத்தில் மூச்சு திணறி இறந்து போனார்.
நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை அந்நாட்டின் சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு நீண்ட நாள் போராட வேண்டி வரும் என்று அந்நாட்டின் பெண்ணிய இயக்கங்கள் கூறியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக