ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

நோபல் பெற்ற எழுத்தாளர் நைபால் மறைவு! ட்ரினிடாட் .. இந்திய வம்சாவளி எழுத்தாளர்

நோபல் பெற்ற எழுத்தாளர் நைபால் மறைவு!மின்னம்பலம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபால், நேற்று (ஆகஸ்ட் 11) தனது 85ஆவது வயதில் லண்டனில் இயற்கை எய்தினார்.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் நகரில், 1932ஆம் ஆண்டு வி.எஸ்.நைபால் பிறந்தார்.
இவரது முழுப்பெயர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால்.
இவரது முன்னோர்கள், இந்தியாவிலிருந்து பிழைப்பு தேடி டிரினிடாட் நாட்டுக்குச் சென்றனர். இதனால், இவர் தன் பெற்றோருடன் அங்கு இளமைப்பருவத்தைக் கழித்தார்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், நைபால் ஆங்கில இலக்கியம் படித்தார். அதன்பின், இவர் லண்டனில் வசிக்கத் தொடங்கினார். 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர் பிஸ்வாஸ்’ நாவல் மிகப்பிரபலமானது.
1971ஆம் ஆண்டு 'இன் ஏ ப்ரீ ஸ்டேட்' என்ற புத்தகத்துக்காக, இவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. இவர் பல புதினங்களும், பயண நூல்களும் எழுதியுள்ளார். 2001ஆம் ஆண்டு, இவர் எழுதிய A Bend in the River’, ‘A House for Mr Biswas’ and ‘India: A Wounded Civilisation ஆகிய 3 புதினங்கள் உலகப்புகழ் பெற்ற இலக்கியங்களாக திகழ்ந்தன.
இந்த மிகச்சிறந்த இலக்கியங்களுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். பயணங்களைப் பெரிதும் விரும்பிய நைபால்,பெரும்பாலும் பல நாடுகளுக்குச் சென்று பயண நூல்கள்எழுதியுள்ளார்.
இந்தியாவைக் குறித்து நைபால் எழுதிய ’An area of darkness, A wounded civilization’ போன்ற புத்தகங்கள், இந்தியாவைத் தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதாகக் கூறி சர்ச்சைகள் எழுந்தன. இது பெருமளவில் விவாதங்களையும் எழுப்பியது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நைபால் நிதி நெருக்கடியாலும் தனிமையாலும் பாதிக்கப்பட்டார். அப்போது தான், இவர் தனது முதல்மனைவி பாட்ரீஷியாவை சந்தித்தார். நைபாலின் இலக்கியப் படைப்புகள் வெளிவர பாட்ரீஷியா ஆதரவாக இருந்து வந்தார். 1996ஆம் ஆண்டு புற்று நோய் பாதிப்பால், பாட்ரீஷியா காலமானார். அதனைத் தொடர்ந்து, நதிரா அல்வி என்ற பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை திருமணம் செய்துகொண்டார் நைபால்.
85வயதான நைபால், லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று (ஆகஸ்ட் 11) காலமானதாகத் தெரிவித்துள்ளார் அவரது மனைவி நதிரா அல்வி. நைபாலின் மறைவுக்கு, சர்வதேச எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக