வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞர் – வரலாறு தந்த வரம்... சவுக்கு ..

savukkuonline.com : அப்போது எனக்கு வயது 10.   என்
தாய் என்னையும் என் தங்கையையும்,  போப் ஆண்டவர் வருகிறார் என்ற தகவல் தெரிந்து திருவிழா பார்ப்பதற்கு செல்வது போல, அழைத்துச் சென்றார்.   முதன் முதலாக அப்போதுதான் எம்ஜிஆரை பார்த்தேன்.  அப்போது கவர்னராக இருந்தவர் குரானா,  குரானா ஒரு நீல நிற கோட் அணிந்து போப் ஆண்டவரோடு வந்தார்.
எம்ஜிஆர் எப்படிப்பட்ட மக்களை வசீகரிக்கக் கூடிய தலைவர் என்பதை நாம் அறிவோம்.  ஆனால் என்னை எம்ஜிஆர் வசீகரிக்கவில்லை.  நான்  நேரில் பார்த்திராத, கலைஞர்தான் என்னை வசீகரித்தார்.  என் தந்தை அவர் அலுவலகம் சென்று வரும் சைக்கிளின் கேரியரில்  அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப, விகடன், குமுதம் மற்றும் கல்கி இதழ்களை வைத்து வருவார்.  நான் வெளியே வந்து பார்ப்பேனோ என்று எதிர்பார்த்தபடியே, அந்த ஒண்டு குடித்தன காம்ப்பவுண்டுக்குள் நுழைந்ததும்  பெல் அடிப்பார்.  நான் மிகவும் ஆர்வமாக ஓடி வந்து, அவர் சைக்கிள் கேரியரில் இருக்கும் அந்த வாரத்து வார இதழ்களை எடுத்துக் கொண்டு, படிப்பேன்.
அந்த இதழ்களை படித்துதான் நான் கலைஞரை கண்டு கொண்டேன். 
இப்போது போலல்லாமல் அப்போதெல்லாம், எதிர்க் கட்சிகளுக்கு உரிய இடத்தை ஊடகங்கள் தந்து கொண்டிருந்தன. அது 1986.
நாங்கள் இருந்த் கூட்டுக் குடும்பம்.  ஒரு காம்பவுண்டுக்குள், 10 குடும்பங்கள் இருக்கும்.   அந்த காம்பவுண்டுக்குள் ஒரே ஒரு வீட்டில் மட்டும்தான் டிவி இருக்கும்,  அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் தேர்தல் சமயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு 5 நிமிடங்கள் ஒதுக்குவார்கள்.   அதை பார்ப்பதற்கு, எங்கள் காம்பவுண்டுக்குள்  ஒரே ஒரு வீட்டில் இருக்கும் கருப்பு வெள்ளை டிவிக்கு முன்னால் எல்லா குழந்தைகளும் அமர்ந்திருப்போம்.
அப்படி ஒரு தேர்தல் சமயத்தில் கலைஞர் பேசுகிறார் என்று தகவல் அறிந்து, நண்டு சிண்டுகளெல்லாம் டிவி முன்னால் அமர்ந்திருந்தோம். திரையில் தோன்றிய கலைஞர், ஆங்கிலத்தில் பேசினார்.  எனக்கு அவ்வளவு சோகம். ஏனென்றால் நான் படித்த பத்திரிக்கைகளில், கலைஞரின் தமிழ் குறித்து அப்படி எழுதப்பட்டிருந்தது.
பின்னர் என் தந்தைக்கு ஆவின் நிறுவனத்தில் அயல் பணி கிடைத்ததால் மாதவரம் பால் பண்ணைக்கு குடிபெயர்ந்தோம்.  என் தந்தைக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப் பட்டிருந்தது.   எங்கள் வீட்டின் எதிரே குடியிருந்தவர், எப்போதும்  வேலைக்கு போக மாட்டார்.   ஏன் என்று விசாரித்தபோது, 1983ம் ஆண்டு, ஆவின் நிறுவனத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடந்தது   பால் அத்தியாவசிய பொருள் என்பதால் அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1300  பேர் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களை நிர்வாகம், குடியிருப்பை காலி செய்ய  சொல்லவில்லை.  மாதத்துக்கு ஒரு முறை, அவர்கள், மாதவரம் பால் பண்ணையில் இருந்த ஒரு வாட்டர் டேங்க்கின் கீழே, கூட்டம் போடுவார்கள்.  அந்த டேங்க்கின் மேலே நின்று நான் தவறாமல் அவர்கள் கூ ட்டத்தை வேடிக்கை பார்ப்பேன்.  எதுவும் புரியாது.  ஆனால் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.
அதன் பிறகு 1987ல் எம்ஜிஆர் இறந்தபோது, எனக்கு இனங்காணத் தெரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.  கலைஞர் ஆட்சிக்கு வரப் போகிறார் என்று எனக்கு அத்தனை மகிழ்ச்சி.    ஒரு அட்டை பெட்டியை எடுத்து, அதில் பேப்பரில் உதயசூரியனை   கட் செய்து, அதனுள் ஒரு பல்பை போட்டு, என் வீட்டு வாசலில் தொங்க விட்டேன்.    என் தந்தை அரசு ஊழியர் என்பதால், அவர் தம்பி இது மாதிரி பண்ணக் கூடாதுப்பா என்றார்.   நான் முகம் சுழித்ததும் என்னை அவர் கடிந்து கொள்ளவில்லை.
தேர்தல் பிரச்சாரத்துக்காக வீடு வீடாக வந்த திமுகவினர், இந்த வீடு நம்ப லிஸ்டுலயே இல்லையே என்று வியந்தனர். அந்த 1989 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், 1983ல் ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேருக்கும் வேலை வழங்கினார்.
அதன் பிறகு வெகு சில ஆண்டுகளில், தந்தை இறந்து நான்  லஞ்ச ஒழிப்புத் துறையில் அரசு ஊழியர் ஆனேன்.
உளவுத் துறையில் பணியாற்றி  ஓய்வு பெற்ற ஒரு டிஎஸ்பியோடு ஒரு நாள் வெளியூருக்கு பயணிக்க நேர்ந்தது.
அப்போது அவர் கலைஞர் பற்றி சொல்லியவை பொக்கிஷங்கள்.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது.  அது சிறுபான்மை ஆட்சி.    பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தயவில் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.   பாமக தலைவர் ராமதாஸ்,  கலைஞருக்கு அப்போது கொடுத்த தொல்லைகளை சொல்லி மாளாது.   ஆரம்ப காலத்தில், பாமகவை பார்த்துக் கொண்டிருந்த ஒரு உளவுத் துறை அதிகாரிதான், திமுகவுக்கும் பாமகவுக்கும் பாலம்.
ஆட்சி தொடர வேண்டும் என்பதனால் அந்த அதிகாரி, மருத்துவர் ராமதாஸ் கோபப்படாத வகையில் அவரை குளிர்விப்பார்.   கலைஞரின் நடவடிக்கைகளில் ஏதாவது, ராமதாஸை கோபப் படுத்தினால், இந்த அதிகாரி, ராமதாஸ் மனம் குளிர்வது போன்ற விளக்கத்தை அளித்து அவர் மனதை குளிர்விப்பார்.
ஒரு கட்டத்தில், மருத்துவர் ராமதாஸ் திடீரென்று கோபம் கொண்டார்.    அந்த அதிகாரியை அழைத்து, “தம்பி,  சொல்லிடுங்க. இதெல்லாம் நல்லா இல்ல” என்று கூறுகிறார்.   அந்த அதிகாரி, விஷயத்தை தன் உயர் அதிகாரிகள் மூலமாக கலைஞர் காதுக்கு கொண்டு செல்வதற்குள், அந்த அதிகாரிக்கு மத்திய அரசு பணிக்கு மாறுதல் வருகிறது.
அந்த அதிகாரி சென்றதும், கலைஞருக்கும்  ராமதாசுக்குமான இணைப்பு அறுந்து போகிறது.  சில நாட்களில், ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.    கலைஞர் செய்வது சரியில்லை.   நான் அவர் செய்த தவறுகளை ஒரு அதிகாரியிடம் சொன்னேன்.  அவர் கலைஞரிடம் அதை சொன்னாரா இல்லையா என்று தெரியாது என்று அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிட்டே, பத்திரிக்கை சந்திப்பு நடத்துகிறார் ராமதாஸ்.
கலைஞர் அதை பார்த்து விட்டு, யாருய்யா அந்த அதிகாரி.  கூப்புடுய்யா அவனை என்கிறார்.  அந்த அதிகாரியோ மத்திய அரசின் உளவுப் பிரிவில் இருக்கிறார்.  முதல்வர் சொன்ன பிறகு யாராவது எதிர் கேள்வி கேட்க முடியுமா என்ன ?

தமிழக உள்துறை செயலாளர், மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே திருப்பி அனுப்புங்கள் என்று கடிதம் எழுதுகிறார்.   மத்திய உளவுத் துறை இயக்குநர், சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் அழைத்து, கடுமையாக கடிந்து கொள்கிறார்.  நீ எதுக்கு இங்க டெபுடேஷன்ல வந்த.    ஒரு ஸ்டேட் கவர்மென்ட் லெட்டர் எழுதி உன்னை திருப்பி கூப்புட்ற அளவுக்கு நீ பெரிய ஆளா என்கிறார்.  அந்த அதிகாரி, எனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என்று கூறவும், அப்போ, நான் திரும்ப ஸ்டேட் வேலைக்கு போகலன்னு எழுதிக் கொடு என்கிறார். அந்த அதிகாரி, அப்படியே எழுதிக் கொடுகிறார்.
அந்த அதிகாரி மாநில அரசு பணிக்கு வர விரும்பவில்லை என்று கலைஞருக்கு தெரிவிக்கப்படுகிறது.   வரலன்னா விடுய்யா.   அவன் என்ன பெரிய இவனா என்று அப்படியே விட்டு விடுகிறார்.  அதன் பிறகுதான், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில், காடுவெட்டி குரு ஒரு கூட்டத்தில்  அவதூறாக பேசியதை, ஆற்காடு வீராச்சாமி ஒரு திமுக திருமண விழாவில் சுட்டிக்காட்டி கடிந்து கொள்ள,  திமுக பாமக  கூட்டணி பிரிகிறது.
30 ஜுலை 2000ம் அன்று, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்துகிறார்.
இந்தியாவே பதற்றம் அடைகிறது.  கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் நலனுக்கு ஆபத்து என்பதை உடனடியாக உணர்கிறார் கலைஞர்.  ஜெயலலிதா ஆட்சி காலத்தில், கலைஞருக்கும், திமுகவுக்கு எதிராக செயல்பட்ட கூடுதல் டிஜிபி அலெக்சாண்டரை, ஒரு டம்மி போஸ்டில் வைத்திருக்கிறார் கலைஞர்.   இந்த விவகாரத்தை திறம்பட கையாள, அலெக்சாண்டர்தான் சரியான நபர் என்பதை உணர்ந்த கலைஞர், துளியும் ஈகோ பார்க்காமல், உடனடியாக அலெக்சாண்டரை இந்த விவகாரத்தை கையாளும்படி பணிக்கிறார்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட மறுநாள், ஒரு ஆடியோ கேசட் காவல்துறையை வந்தடைகிறது.  அதில், ராஜ்குமார், தான் நன்றாக இருப்பதகாவும், தன்னை வீரப்பன்  நிறைவாக வைத்திருப்பதாகவும் பேசியிருக்கிறார்.
உளவுத் துறை அதிகாரிகளுக்கோ, அதில் பேசியது, ராஜ்குமார்தானா என்று சந்தேகம்.  அப்போது  தந்தை கடத்தப் பட்டதால் சென்னை வந்திருந்த ராஜ்குமாரின் மகன், சிவராஜ்குமாரிடம்  அந்த கேசட்டை போட்டுக் காட்டுகிறார்கள்.    அவர் அதை கேட்டதும், அது தன் தந்தைதான் என்று கூறி விட்டு ஓவென்று அழுகிறார்.
வெளியே சென்று, தன் தாய் பர்வதம்மாளிடம் விஷயத்தை சொல்கிறார்.   பர்வதம்மாள் நடிகர் ரஜினிகாந்தை போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்கிறார்.  ரஜினி, உடனடியாக, கலைஞரை தொடர்பு கொள்கிறார்.
உளவுத் துறை அதிகாரிகள், அந்த கேசட்டை சரி பார்த்து, விஷயத்தை உறுதி செய்து, கலைஞரை சந்திக்க  அவர் அறைக்கு உள்ளே நுழைந்ததும் கலைஞர் கேட்ட முதல் கேள்வி “கேசட் எங்கய்யா”  என்பதுதான்.    உளவுத் துறை அதிகாரிகள், கலைஞரின் சிஐடி காலனி வீட்டுக்கு செல்லும்போதே, அங்கே சன் டிவி மற்றும், உதயா டிவியின் கேமராக்கள் தயாராக இருந்தன.  சன் மற்றும் உதயா என்பதை கூர்ந்து கவனிக்கவும்.
உளவுத் துறை அதிகாரிகள், கலைஞரிடம் விஷயத்தை விளக்கி முடித்ததும் உதயா டிவி மற்றும் சன் டிவியில், ராஜ்குமார் பேசிய ஒலி நாடா ஒளிபரப்ப படுகிறது.     ராஜ்குமார் எப்படி இருக்கிறார் என்று பரிதவித்த மக்களுக்கு அவர் பேசியது, பெரும் நிம்மதியை அளித்தது.
அதன் பிறகு அந்த கேசட்டில் கூறியபடி தூதுவரை அனுப்ப முடிவெடுக்கப் படுகிறது.  வீரப்பன், நக்கீரன் கோபால்தான் தூதுவராக வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.  கோபாலை அழைத்தால், அவர், இரு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட, நக்கீரன் நிருபர் செல்வராஜின் கொலையாளிகளை கைது செய்தால்தான் வருவேன் என்று அடம் பிடிக்கிறார்.
கலைஞரே, கோபாலிடம் பேசுகிறார்.    கோபால், அதன் பிறகு கலைஞரை சந்தித்த பின், நிபந்தனையின்றி, காட்டுக்கு செல்கிறார்.   கோபால், நக்கீரன் இதழுக்கென்று, பிரத்யேகமாக புகைப்படங்களை எடுத்து வருவார்.    காட்டுக்கு சென்ற பிறகு, நேராக கலைஞரை சந்திப்பார்.  அப்போது, கோபால் காட்டில் எடுத்த புகைப்படங்களை காண்பிப்பதற்கு முன், கலைஞர், போட்டோக்களை எடுத்து, “இதுவா பாருய்யா”  என்று கூறுகையில், அதற்குள் எப்படி இந்த விஷயங்கள் கலைஞரை வந்தடைந்தது  என்று அதிர்ச்சி அடைவார்.
முடிவே இல்லாமல் இந்த சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.   வீரப்பன் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருந்தபோதும், உச்சநீதிமன்றத்தில், குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு காரணமாக, சிக்கல் அதிகரிக்கிறது.

கலைஞரும், கர்நாடகா சென்று, அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணாவை சந்தித்து, நிலைமை சிக்கலாகாமல் பார்த்துக் கொண்டார்.
மருத்துவர் ராமதாஸ், மற்றும், காலம் சென்ற ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் சென்னையில் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.    இந்த நிலைமை தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது என்று உணர்ந்து, ராமதாஸ் அவருக்கு நெருக்கமான ஒரு காவல் துறை அதிகாரியை அழைக்கிறார்.
தான் எழுதும் ஒரு கடித்தை அவர் கூறும் நபரிடம் கொடுத்தால், ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறார்.   இந்தத் தகவல், கலைஞரிடம் தெரிவிக்கப்படுகிறது.   நாம கவர்மென்ட் நடத்திக்கிட்டு இருக்கோம்.  அந்த ஆளு நல்ல பேரு வாங்கிக்கிட்டு போயிடுவானா என்று அந்த உதவியை நிராகரித்தார் கலைஞர்.  அதன் பிறகு, பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரி சுகுமாரன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பல முறை காட்டுக்கு சென்று ராஜ்குமாரை மீட்டது வரலாறு.   ராஜ்குமார் காட்டில் இருந்த 108 நாட்களும், மிக மிக சாதுர்யமாக கலைஞர் அந்த விவகாரத்தை கையாண்டதால்தான், கர்நாடகாவில் இருந்த லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரும் உடைமைகளும் பாதுகாக்கப்பட்டன.  ஒரே ஒரு சிறு தவறு, நிலைமையை பெரும் சிக்கலுக்கு ஆளாக்கியிருக்கும்.
1997ம் ஆண்டு, நவம்பர் மாதம், தற்போது சிறையில் இருக்கும், இமாம் அலி, ரயில்களில் குண்டு வைக்கப் போவதாக உளவுத் துறைக்கு தகவல் வருகிறது.   இமாம் அலியின் புகைப்படமும் கிடைக்கிறது.
அப்போது உளவுத் துறை தலைவராக இருந்த அலெக்சாண்டர், இந்த தகவலை உதாசீனப் படுத்துகிறார்.    6 டிசம்பர் 1997 அன்று, பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் அன்று தமிழகம் மற்றும் கேரளாவில் மூன்று ரயில்களில் குண்டு வெடிக்கிறது. பதற்றத்தோடு, உளவுத் துறை அதிகாரிகள், கலைஞர் வீட்டுக்கு சென்று சந்திக்கின்றனர்.
இமாம் அலியின் புகைப்படத்தோடு இருந்த அறிக்கையை அவரிடம் அளிக்கின்றனர்.   “இதை வைச்சிக்கிட்டு புடுங்கிக்கிட்டு இருந்தீங்களா ?” என்று கோபப்படுகிறார் கலைஞர்.  பின்னர் உளவுத் துறை அதிகாரிகளை அனுப்பி விடுகிறார்.  சில மணி நேரத்தில் நக்கீரனில் இருந்து, இரு நிருபர்கள் வந்து, உளவுத் துறை ஐஜியாக இருந்த ராமானுஜத்தை சந்திக்கின்றனர்.    இமாம் அலியின் புகைப்படத்தை கலைஞர் வாங்கிக் கொள்ளச் சொன்னார் என்று கூறுகின்றனர்.
வேறு வழியின்றி, இமாம் அலியின் புகைப்படத்தை உளவுத் துறை அதிகாரிகள் நக்கீரன் நிருபர்களிடம் வழங்குகின்றனர்.   நக்கீரனில், வெடிகுண்டு குற்றவாளியின் புகைப்படம் வெளியானதும், பொதுமக்களிடையே இருந்த கோபம் தணிந்தது.   காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற நம்பிக்கை பிறந்தது.  அந்த புகைப்படம் வெளியானதால், இந்து அமைப்புகள், குண்டு வெடிப்பு விவகாரத்தை பெரிய சிக்கலாக்க முடியவில்லை.
ஒரு முறை, தமிழகத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள், கரும்பாலைகள் விவசாயிகளுக்கு, தர வேண்டிய 200 கோடி ரூபாயை கேட்டு, மிகப் பெரிய போராட்டத்தை அறிவித்திருந்தனர்.   உளவுத் துறை, இந்த போராட்டம் அரசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை  கலைஞரிடம் தெரிவிக்கின்றனர்.
அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் விவசாயத் துறை அமைச்சர். தற்போது தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன், சர்க்கரைத் துறை இயக்குநர்.   இருவரையும் உடனடியாக அழைத்து, 200 கோடியை வழங்குமாறு உத்தரவிட்டார்.   போராட்டம் நடக்க இருந்த அன்று, விவசாயிகள் சங்க தலைவர், கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.    இது போல பல போராட்டங்களை தன் சாதுர்யத்தால் கவனமாக தவிர்த்தவர் கலைஞர்.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் தனக்கென்று ஒரு ஆளை வைத்திருப்பார்.   உளவுத் துறை அதிகாரிகள் தகவல் சொல்வதற்கு முன், இவர் அந்த விபரங்களை சொல்லி, சரி பார்க்க சொல்லுவார்.   தகவல் வேண்டுமென்றால், எவர் ஒருவரிடமும் பேசத் தயங்கவே மாட்டார் என்றார் அந்த அதிகாரி.  நாம் முதல்வர்.   மூத்த அதிகாரிகளிடம்தான் பேச வேண்டும் என்றெல்லாம் வறட்டு பிடிவாதம் கொண்டவரல்ல.  அனைத்து விவகாரங்களும், தனக்கு முதலில் தெரிய வேண்டும் என்று நினைப்பவர்.  அது பல நேரங்களில் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, கலைஞருக்கு கைகொடுத்திருக்கிறது.
இவையெல்லாம் கலைஞர் எத்தகைய சிறந்த நிர்வாகி என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.   அவர் அதிகம் படித்தது இல்லை.  லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் நிர்வாகம் பயின்றதில்லை.  ஆனால் அவரைப் போன்ற சிறந்த நிர்வாகியை பார்த்தது கிடையாது என்று அவரிடம் பணியாற்றிய பல மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
கலைஞர் சூது வாது நிறைந்தவர் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.   சூதும், வாதும், சூழ்ச்சிகளும்,  அரசியலில் வெற்றி பெற அடிப்படை அம்சங்கள் இல்லையா ?   பெரியாரின் அண்ணன் மகனான ஈவிகே.சம்பத், கலைஞரை விட அற்புதமான பேச்சாளர்.  ஆனால் அவரால் அரசியலில் சோபிக்கவே முடியவில்லை.  அவர் தொடங்கிய தமிழ் தேசிய கட்சியோடு காணாமல் போனார்.   நாவலர் நெடுஞ்செழியன் அறிஞர் அண்ணா இறந்தபோது முதல்வராகியிருக்க வேண்டியவர்.  ஆனால் அவர் பின்னாளில் மக்கள் திமுக என்று ஒரு கட்சியை தொடங்கி, அதை கலைத்து விட்டு அதிமுகவோடு ஐக்கியமானவர்.
தமிழகத்தின் மிக மிக சிறுபான்மையான ஜாதியில் பிறந்து, எவ்விதமான பெரிய பின்புலமும் இல்லாமல், கோடிக்கணக்கான மக்களை வசீகரிக்க முடிந்த கலைஞர், இத்தனை ஆண்டுகளாக திமுக என்ற இயக்கத்தை பாதுகாத்து, கட்டிக் காப்பாற்றியதற்கு சூது வாது  உள்ளிட்ட அவரது அனைத்து திறமைகளுமே காரணம்.    அரசியல் முதலைகள் நிறைந்த குளம்.    இரு பெரிய பிளவுகளை சந்தித்த பின்னர், ஆட்சியை இழந்தும்  50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியை காப்பாற்ற முடிந்தது என்றால் அது கலைஞரின் தனிப்பட்ட திறமையே அன்றி, வேறல்ல.

வரலாறு, மிக மிக அரிதாகவே, அற்புதமான மனிதர்களை காண்கிறது.   அவர்கள் அரிதானவர்கள்.   அப்படி அரிதிலும் அரிதான ஒரு தலைவர் கலைஞர்.   இது போன்ற அற்புத மனிதர்களை இனி எந்த ஆண்டு காலம் நமக்குத் தருமோ என்பது விடையில்லா கேள்வி.
கலைஞரிடம் குறை இருக்கிறதா என்றால் ஏராளம்.  அவர் குறைகளை மட்டும் பட்டியலிட்டு, அவரை விமர்சித்து, இதை விட பெரிய கட்டுரையை எழுத முடியும்.
ஆனால், யாரிடம் குறைகள் இல்லை ?  குறைகளோடு இருப்பவன்தானே மனிதன் ?   குறைகளே இல்லாதவன் இயந்திரமாகி விட மாட்டானா ?
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
குறிப்பு – கலைஞரின் 2006 ஆட்சியில்தான் நான் கைது செய்யப்பட்டேன்.  கடுமையான காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன்.   இரண்டாவது முறை பொய் வழக்கில் கைது செய்யப்பட்டேன்.  ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிதில் இருந்து நானும் என் குடும்பத்தினரும் அடைந்த துக்கத்தை வார்தைகளால் விவரிக்க முடியாது.    இதுதான் கலைஞர். இதனால்தான் அவர் காவியத் தலைவன்.
காவியத் தலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக