திங்கள், 6 ஆகஸ்ட், 2018

காஷ்மீரில் பதட்டம் .. சிறப்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு .. இன்று முக்கிய விசாரணை..

Kashmir tense ahead of Article 35-A hearing in Supreme Court tamil.oneindia.com -veerakumaran : />ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து,அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவியது. எனவே, 1954ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 370க்கு ஏற்ப, 35ஏ என்ற பிரிவு 1954ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சட்டத்தில் 35ஏ பிரிவை சேர்த்து உத்தரவிட்டார்.

இந்த அரசியல் சாசன பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதற்கான வரையறையை உருவாக்கும் அதிாரத்தை அம்மாநில சட்டசபைக்கு அளிக்கிறது.
இந்த சட்டப்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கிறது. காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாது. பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில், சொத்து வாங்க முடியாது.
இந்த பிரிவுகளை சுட்டிக்காட்டி, 'வி தி சிட்டிசன்ஸ்' அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படாத 370 சட்டப்பிரிவு செல்லாது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 368ன்படி நாடாளுமன்றத்துக்கே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய அதிகாரமுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அரசியல் சட்ட பிரிவு, இது அரசியல் சட்டத்தின் 14, 19 மற்றும் 21ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்பதால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு அப்போதைய குடியரசுத் தலைவர் செயல்பட்டாரா? என்ற சந்தேகமும் மனுவில் எழுப்பப்பட்டுள்ளது.
இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்பது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யவுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரும் வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தீவிரவாதிகளும் தங்களுக்கு சாதகமாக இதை பயன்படுத்தி தாக்குதல் நடத்த கூடும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக