திங்கள், 27 ஆகஸ்ட், 2018

அழகிரி : என்ன சேர்க்காவிடில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்! கலைஞர் சேர்பதாக கூறினார். ..சிலர் தடுத்துவிட்டனர்

மின்னம்பலம்: திமுகவில் இணைக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைவதற்கு முயற்சி எடுத்துவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மகனுமான மு.க.அழகிரி, வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி செல்லவுள்ளார். இதற்காக நான்காவது நாளாக இன்று (ஆகஸ்ட் 27) தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், இத்தனை ஆண்டுகள் இல்லாமல் தற்போது திமுகவில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அப்போது கலைஞர் இருந்தார். கலைஞர் இருந்தபோது திமுகவில் என்னை சேர்க்கிறேன் என்று கூறினார். ஆனால் சேர்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர்” என்று பதிலளித்தார்.

“அமைதிப் பேரணிக்கு அனைத்துத் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரணி என்பது தொண்டர்களின் முயற்சிதான். என் தலைமையில் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே நான் ஏற்பாடு செய்துள்ளேன்” என்று தெரிவித்த அழகிரி, கலைஞர் தற்போது இல்லை, எனவே கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திமுகவில் சேர களமிறங்கினேன். திமுகவில் இணைக்கவில்லை எனில் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.
பேரணியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்வார்களா என்ற கேள்விக்கு, “உங்களின் யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” என பதிலளித்தார்.
திமுக குறித்து கடந்த மூன்று நாட்களாக அழகிரி தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு அக்கட்சியின் தரப்பிலிருந்து எவ்வித எதிர்வினையும் ஆற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக