சனி, 11 ஆகஸ்ட், 2018

சென்னையில் எளிமையாக வலம் வந்த ராகுல் காந்தி

tamilthehindu : சென்னை ராஜாஜி அரங்கில் திமுக தலைவர் கலைஞர்  உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டத்தோடு கூட்டமாக வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. கைப்பிடிச் சுவர் மீது ஏறி பாதுகாப்பு கொடுக்க வருகின்றனர் பாதுகாப்புப் படை வீரர்கள்.படங்கள்: எஸ்.விஜயகுமார்
 காங்கிரஸ் தலைவர், பிரதமர் வேட்பாளராக இருந்தும் சென்னை யில் மிக எளிமையாக ராகுல் காந்தி வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் என முக்கியப் பொறுப்புகளை வகித்த ராகுல் காந்தி, கடந்த 2017 டிசம்பர் 16-ம் தேதி அக்கட்சியின் தலைவராக பதவியேற்றார். மிக எளிமையாக உடையணியும் ராகுல் காந்தி, எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமர்ந்து இறுதி நிகழ்வுகளில் கடைசி வரை பங்கேற்றார்.
</ அதுபோல திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் பொறுமையுடன் அமர்ந்து இறுதி நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்றார்.
ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அவர்களது குடும்பத்தினருக்கு எப்போதும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உண்டு. ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் அவர்தான் பிரதமர்.
ஆனாலும், கருணா நிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் மட்டுமே உடன் இருந்தார். தற் போதைய அரசியல் சூழலில் சாதாரண கவுன்சிலராக இருப்ப வர்கள்கூட எப்போதும் 10 நபர் களுடன் வலம் வரும் நிலையில் ராகுல் காந்தி எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராகுல் காந்தி வந்தபோது கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது. இதனால் உடன் வந்த திருநாவுக்கரசர் அவரைப் பின் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் தனித்து விடப்பட்ட ராகுல், சில நிமிடங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ராஜாஜி அரங்கை சுற்றிப் பார்க்க ஆரம்பித்து விட்டார். பொதுமக்களுக்கு கை கொடுத்து, அவர்களை வாஞ்சையோடு முதுகில் தட்டிக் கொடுத்தார். பிரதமர் வேட்பாளரான அவரது இந்த எளிமை பார்ப்பவர்களை வியக்க வைத்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன் ஸிடம் கேட்டபோது, “அரசியல் என்பது அதிகாரத்துக்கானது அல்ல. மக்களுக்கு சேவை செய்யவே என்பதை ராகுல் உணர்ந்துள்ளார். அதனால்தான் தனது அருகில் கருப்புப் பூனை படை வீரர்களை அவர் அனுமதிப் பதே இல்லை. மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் எளிய உடை அணிகிறார். செயற்கையாக அல்லாமல் இயற்கையாகவே அவர் சாதாரண ஏழை, ஒடுக்கப் பட்ட மக்களுடன் பழகுகிறார். சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் ராகுல் இப்படித்தான் இருக்கிறார். அதிகார அரசியல் கோலோச்சும் இந்தியாவில் ராகுல் காந்தி நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக