சனி, 11 ஆகஸ்ட், 2018

டி.எம். கிருஷ்ணா :சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை இயேசு, அல்லாவுக்கும்...

tmkrishnaதினமணி : கர்னாடக இசைப்பாடகரான டி எம் கிருஷ்ணா சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கர்னாடக இசை 'எலைட்' மக்களுக்கும், ரசிகர்களுக்கும் மட்டுமே சொந்தமானதில்லை. சேரிப்புறத்து இளைஞர்களும், சிறுவர், சிறுமியரும் கூட கர்நாடக இசை கற்றுக் கொண்டு அதை ரசிக்கவும், பாடவும் முடியும் என்று ஆணித்தரமாக நம்பக் கூடியவர் டி எம் கிருஷ்ணா. நம்புவதோடு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சென்னையில் மீனவக் குப்பங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கர்னாடக இசையை அறிமுகம் செய்யவும் அவர் தவறுவதில்லை. இதனால் அவர் மீது சிலருக்கு அதிருப்தி இருந்தாலும் அதை கிருஷ்ணா பொருட்படுத்துவதாக இல்லை.

இதோ பாரம்பரிய சங்கீதம் என்பது இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை அல்லா, இயேசு கிறிஸ்துவுக்கு கூட கர்னாடக இசையில் வழிபாட்டுப் பாடல்களை இசைக்க முடியும். இனிமேல் மாதந்தோறும் இயேசு அல்லது அல்லாவிற்காக பாடி வெளியிடவிருக்கிறேன் என்று அடுத்தொரு வெடிகுண்டுக்கான திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக தனது முகநூல் பக்கத்தில் ‘சருவேசுரா’ என்ற கிறிஸ்தவப் பாடல் ஒன்றையும் வெளியிட்டு கிறிஸ்தவர்களில் கர்னாடக இசைப் பிரியர்களாக இருப்பவர்களை சந்தோஷக் கடலில் மூழ்கடித்திருக்கிறார்.
சருவேசுரா பாடலைக் கேட்க... 

கிருஷ்ணா முகநூலில் வெளியிட்ட பாடலுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல கர்னாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக இசை ராகங்களில் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதின் மூலம் மதமாற்றத்தை ஆதரிப்பதாக அர்த்தமில்லை என்றும், தான் பாடி வெளியிட்ட ஸ்ரேஷ்டா ஆல்பத்தின் ‘சமானுலேவரு பிரபோ’ எனும் இசை பாடல் தொகுப்பை பணத்திற்காகவோ அன்றி வேறு உள்நோக்கங்களுக்காகவோ தான் பாடவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டிஎம் கிருஷ்ணா, நித்யஸ்ரீ மட்டுமல்ல கர்நாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதற்காக... முன்னதாக ஓ.எஸ் அருண் மற்றும் அருணா சாய்ராம் உள்ளிட்ட கர்னாடக இசைப்பாடகர்கள் தீவிர கர்னாடக இசை ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தாண்டு தஞ்சையில் நடைபெறவிருக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவில் மேற்கண்ட பாடகர்களை எல்லாம் பாட அனுமதிக்கக் கூடாது என்று கூட போர்க்கொடி உயர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாடகர் டி எம் கிருஷ்ணாவின் ‘கர்னாடக இசையில் மாதந்தோறும் ஒரு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய பாடல்’ எனும் அறிவிப்பு எத்தனைகெத்தனை ஒரு சாரரால் வரவேற்கப்படுகிறது அத்தனைக்கத்தனை ஒரு சாரரால் வெறுக்கப்படுவதாகவும் விமர்சிக்கப் படுவதாகவும் உள்ளது.
ஏனெனில், கர்னாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடும் போது அது இந்து மதப் பாடல்களைப் போலவே ஒலிக்கக் கூடும். அதை வைத்து அவர்கள் எளிதாக மதமாற்றம் செய்ய முனைவார்கள். மதமாற்றத்தை வலியுறுத்தும் மார்க்கங்களில்  கர்னாடக இசையில் பாடப்படும் கிறிஸ்தவப் பாடல்கள் நாளை முன்னுதாரணமாகி விடக்கூடாது. என பாரம்பர்ய கர்நாடக இசை ரசிகர்கள் மற்றும் கர்னாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்கல் எனும் அறிவிப்பின் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக