சனி, 4 ஆகஸ்ட், 2018

தேவ கௌடா : கலைஞர் நூறாண்டுகளைக் கடந்து வாழ்வார்

மின்னம்பலம்:  “கருணாநிதி நூறாண்டுகளைக் கடந்து வாழ்வார்” என்று காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் தினமும் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா நேற்று மாலை பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். தேவகவுடாவிடம் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, “நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் மருத்துவர் அறிவுரைப்படி கருணாநிதியை அருகிலிருந்து பார்க்கவில்லை. சற்று தொலைவிலிருந்து பார்த்தேன். நாட்டின் மிக மூத்த தலைவரான கருணாநிதி, ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்து மக்களுக்குச் சிறப்பான சேவைகளைப் புரிந்துள்ளார்.
அவர் நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவை புரிவார். அதற்காக நான் பிரார்த்திக்கிறேன். தமிழகத்தில் மட்டுமல்லாது தேசிய அரசியலில் அவர் வகித்த பங்கை ஒருநாளும் மறக்க முடியாது. வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சி அமைய முக்கிய பங்கு வகித்தார். தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை சாத்தியமாக்கியவர். மத்தியில் நிலையான ஆட்சி அமைய முக்கியப் பங்கு வகித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக நேற்று மதியம் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் வினித், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வரவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக