சனி, 11 ஆகஸ்ட், 2018

யானைகளின் வழித்தடம் யானைகளுக்கே! ... ஜாகி வாசுதேவ் போன்ற திருடர்களுக்கு அல்ல ..

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..? மின்னம்பலம் : யானைகளின் வழித்தடம் யானைகளுக்கே! இந்தியாவில் அரசாங்கக் கணக்குகளின்படி, வழித்தட ஆக்கிரமிப்புகளால் ஓர் ஆண்டிற்கு 973 யானைகள் இறக்கின்றன. இந்தியாவின் மொத்த யானைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், இது அந்த இனத்தின் பேரழிவு என்பது புரியும். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் யானை வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அபாரமான சாதனை. ஆனால் அதை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
நீலகிரி மாவட்டத்தின் சூழ்நிலையே சுற்றுலாப் பயணிகளால் சீர்குலைந்துவருகிறது. காட்டுப் பகுதியில் விடுதிகள் கட்டி ‘அட்வெஞ்சர் ட்ரிப்ஸ்’ எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் பயணங்களால் காட்டுயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்களால் உயிரிழக்கும் காட்டுயிர்களின் எண்ணிக்கையைவிட அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் உயிரிழக்கும் காட்டுயிர்களின் எண்ணிக்கை அதிகம்.
இச்செய்தியை முன்வைத்து, 2011 ஆண்டு யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் விடுதிகளைக் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு வரலாற்றுத் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

யானையின் வழித்தடத்தில் இருக்கும் உணவு விடுதிகளை 48 மணிநேரத்தில் இடித்துத் தள்ள வேண்டுமெனவும், விடுதி உரிமையாளர்கள் தங்களுடைய குடியிருப்புகளைக் காலி செய்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
வீடுகள் கட்டுவதற்காக அனுமதி வாங்கிவிட்டு, காட்டெஜ்கள் கட்டிப் பணம் பண்ணும் உரிமையாளர்களையும் கைது செய்து சம்மந்தப்பட்ட காட்டேஜ்களுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
போன வருடம் காட்டுயிர்களின் வழித்தடங்கள் தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய வரைவுத் திட்டத்திற்கே இன்னும் தமிழக அரசு பதிலளிக்கவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தமிழக அரசு செயல்படுத்துமா என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி!
- நரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக