வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

எடப்பாடி.. அழகிரியை வைத்து ஸ்டாலினுக்கு டென்ஷனை உண்டாக்க ...

மின்னம்பலம்: "அழகிரி தரப்பில் கோபமாக இருப்பதையும், அவரது
ஆதரவாளர்களை ஒன்று திரட்டி வருவதையும் வைத்து புதுக்கணக்கு போட ஆரம்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘அழகிரியின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் வாட்ச் பண்ணுங்க. அவரோட ஆதரவாளர்கள் யாரெல்லாம் இருக்காங்க... யாரையெல்லாம் அவரு சந்திக்கிறாரு என்ற முழு விவரங்களும் எனக்கு உடனுக்குடன் வரணும்..' என உளவுத் துறையை முடுக்கி விட்டிருக்கிறார் முதல்வர்.
டிஜிட்டல் திண்ணை: அழகிரிக்கு ஆதரவாய் எடப்பாடிஇது தொடர்பாக அமைச்சர்கள் சிலரையும் அழைத்து ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. 'கலைஞர் இருந்தவரை நாம செஞ்ச அரசியல் வேற. ஸ்டாலின் பெருசா நமக்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்தாரு. இனி அப்படி இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. நாம மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்ற கோபம் அவங்களுக்கு நிறையவே இருக்கு. நாம அஞ்சலி செலுத்தப் போனபோது ஸ்டாலின் எப்படி நடந்துகிட்டாருன்னு நீங்களே பார்த்தீங்க. இன்னும் சில வாரங்களில் அவங்க எடுத்து வைக்கிற அடி நிச்சயமாக நமக்கு சவாலாகத்தான் இருக்கும். இதுநாள் வரை எதுவும் பேசாமல் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் இனியும் அப்படி இருக்க மாட்டாங்க. எல்லா பக்கம் இருந்தும் நமக்கு இடி வரும். எல்லாத்தையும் சமாளிச்சுதான் ஆகணும். அம்மா இறந்தபோது நம்ம கட்சியில் எப்படி ஒரு சலசலப்பு இருந்துச்சோ அதே சலசலப்பு இப்போ திமுகவில் இருக்கு.

பிரச்சினை அவங்களுக்கு அழகிரி மூலமாக ஆரம்பிச்சிருக்கு. அழகிரி திமுகவிலேயே இல்லை என ஸ்டாலின் சொல்லிட்டு இருந்தாலும் அவரும் கலைஞரோட பிள்ளைதான். மதுரை பக்கம் அவருக்கும் செல்வாக்கு இருக்கு. கலைஞர் பிறந்த திருக்குவளையில் ஸ்டாலினை விட அழகிரிக்குதான் ஆதரவாளர்கள் அதிகம். அதனால் தன்னோட ஆதரவாளர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டும் வேலையில் அழகிரி இறங்கிட்டாரு. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் நம்ம நிர்வாகிகளுக்கு அங்கே இருக்கும் திமுகவில் யார் ஸ்டாலின் ஆதரவாளர்கள், யார் ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் என்பது தெரியும். அப்படி ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் எல்லோரும் அழகிரியை பார்க்கப் போவாங்களா என்பது தெரியாது. போக வைக்க வேண்டிய வேலையை நாம பார்க்கணும்.
அழகிரிக்கான ஆதரவாளர்கள் அதிகமாக அதிகமாக அது ஸ்டாலினுக்கு சிக்கலை உண்டாக்கும். அவரோட நோக்கம் எல்லாம் அவங்க கட்சியை காப்பாத்துவதில்தான் இருக்கும். நம்மகிட்ட தொல்லைக்கு வர மாட்டாங்க. அழகிரிக்கு நாம நேரடியாக உதவி செய்ய வேண்டாம். ஆனால் மறைமுகமாக எல்லாமே செய்யலாம். அழகிரியால் தனி அணியை உருவாக்கி அரசியலில் ஜொலிக்க முடியாது. 5வருடங்கள் டெல்லியில் இருந்தாரே... நாடாளுமன்றத்தில் ஒருநாள் பேசினாரா... அவரோட கெப்பாசிட்டி அவ்வளவுதான். இங்கே நம்மகிட்ட இருந்தவங்க எப்படி ஆரம்பத்தில் தீபாகிட்ட போனாங்களோ அப்படித்தான் இருக்கும். ஆனால், அதுவே திமுகவில் பெரிய சலசலப்பை உண்டாக்கும். நமக்கு ஸ்டாலின் குடைச்சலை கொடுக்கும் போதெல்லாம் அழகிரியை வைத்து அவருக்கு டென்ஷனை உண்டாக்கினாலே போதும். நமக்கு பெரிய அளவில் பிரச்சினை வராது' என்று சொன்னாராம் எடப்பாடி.
அதை அமைச்சர்களும் ஆமோதிக்க, தென் மாவட்டங்களில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் யார் என்பதை லிஸ்ட் எடுக்கும் வேலையை அமைச்சர் ஒருவரே சீக்ரெட் ஆக தொடங்கி இருக்கிறாராம். நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொன்னது போல அழகிரிக்கு கூட்டம் சேர ஆரம்பித்து இருக்கிறது. கூட்டத்தை அதிமுகவே சேர்க்க ஆரம்பித்து இருக்கிறது" என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். அத்துடன் ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
"டிடிவி தினகரன் வீட்டுக்கு வழங்கியிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக காஞ்சிபுரம் நகர செயலாளர் புல்லட் பரிமளம், கடந்த மாதம் 27 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள டிடிவி வீட்டுக்கு கடந்த மாதம் 29ம் தேதி பெட்ரோல் கேன், அரிவாளுடன் காரில் வந்த பரிமளம் திடீரென தனது காரை தீ வைத்து கொளுத்தினார். இதில் பெட்ரோல் கேன் வெடித்து சிதறியதில் புல்லட் பரிமளம், டிடிவி தினகரன் டிரைவர் பாண்டியன் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு கோரி அ.ம.மு.க அமைப்பு செயலாளர் பழனியப்பன் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி டிடிவி தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஒரு ஷிப்டுக்கு 5 பேர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்றிரவு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. நேற்று காலையில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் முதல்வரை சந்தித்து இருக்கிறார். அப்போது, தினகரன் வீட்டுக்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு பற்றி பேச்சு வந்திருக்கிறது.
'4 நாள் பாதுகாப்பு கொடுத்தால் போதாதா... இன்னும் எதுக்கு அவருடைய வீட்டுக்கு முன்னாடி போலீஸ் போட்டு இருக்கீங்க? எல்லோரையும் திரும்ப வரச் சொல்லுங்க...' என எடப்பாடியே சொன்னாராம். அதன் பிறகுதான் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் வாங்கப்பட்டிருக்கிறது. தினகரனிடம் சொல்லாமலே அங்கிருந்து கிளம்பிவிட்டார்களாம் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார்" என்று முடிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக