வியாழன், 2 ஆகஸ்ட், 2018

வடக்கு கர்நாடகாவை தனி மாநிலமாக ... கோரிக்கை வலுக்கிறது . பின்னணியில் பஜாக ...?

கர்நாடகாவை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி பந்த்!மின்னம்பலம்: கர்நாடகாவில் இருந்து வடக்கு கர்நாடகாவைப் பிரித்துத் தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி இன்று (ஆகஸ்ட் 2) பந்த் நடைபெறவுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி உள்ளார்.
ஜூலை 5ஆம் தேதி புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் வடக்கு கர்நாடகப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வடகர்நாடகாவைத் தனி மாநிலமாக அறிவிக்ககோரி இன்று (ஆகஸ்ட் 2) போராட்டம் நடத்த சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

வடகர்நாடகாவைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. வடக்கு கர்நாடகா அல்லது உத்தர் கர்நாடகா என அழைக்கப்படும் பகுதி 13 மாவட்டங்களை உள்ளடக்கியது. சுதந்திரத்துக்கு முன்பாக பாம்பே மாகாணத்தின் கீழ் இந்தப் பகுதிகள் இருந்தன. சுதந்திரத்துக்கு முன்பாக அனைத்து அதிகாரங்களும் வடக்கு கர்நாடகாவில் உள்ள மைசூரை ஒட்டியே இருந்தது. பின்னர் இவை தெற்கு கர்நாடகாவில் உள்ள பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைந்த ஆட்சி அமைத்தபோதே வடக்கு கர்நாடகத்தின் பெலகாவியை இரண்டாவது தலைநகராக அறிவிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இது முடியாமல் போனது.
தற்போது, வடக்கு கர்நாடகம் புறக்கணிக்கப்படுவதாகவும் இதைக் கண்டித்து இன்று (ஆகஸ்ட் 2) முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் உத்தர கர்நாடக ராய்த்த சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையே, பெலகாவிக்கு மாவட்டத்திற்கு இரண்டாவது தலைநகர் அந்தஸ்து வழங்க குமாரசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில், “இந்தப் பிரச்சினையை பாஜக 20 நாட்களுக்கு முன்புதான் கிளப்பியுள்ளது. ஆனால், பெலகாவியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். மாநிலத்தில் இரண்டு உப லோக் அயுக்தாக்கள் உள்ளன. இதில் ஒன்றை பெலகாவிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளேன். 5 முதல் 6 ஆர்டிஐ ஆணையர்கள் உள்ளனர். அவர்களில் மூன்று பேரை வடக்கு கர்நாடகத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளேன். இதேபோல், அங்கு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தவும், சில அரசு அலுவலகங்களை அங்கு மாற்றவும் தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் வடக்கு கர்நாடகாவைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. வடக்கு கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைப் பேசி தீர்க்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கையாக உள்ளதாக அவை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “இது பாஜகவின் திட்டமிட்ட சதி. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டே அவர்கள் இதைச் செய்கின்றனர். வடக்கு கர்நாடகம் பிரச்சினையை வாக்காக மாற்ற அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால், இது அவர்களையே திரும்ப தாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக