சனி, 4 ஆகஸ்ட், 2018

சாதி தெரியாததால் அடக்கம் செய்ய மறுத்த கிராமம் ... சுமந்து சென்ற எம் எல் ஏ ஒடிஷா மாநிலம்

tamilthehindu :பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரெங்காலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா இந்த மனிதநேயச் செயலைசெய்து அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். ஒடிசா மாநிலம், ஜர்சுகுதா மாவட்டத்தில் ரெங்காலி சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா. ஒடிசா மாநில எம்எல்ஏக்களில் மிகவும் வசதியற்றவர், இன்னும் சாதாரண வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுதாமல் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமனபள்ளி கிராமத்தில் ஒரு ஏழை மூதாட்டியும், அவரின் சகோதரரும் சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர்.

பிச்சை எடுத்தும், வீடுகளில் உணவுகளைப் பெற்றும் இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்த இருவரின் சாதி குறித்து அந்தக் கிராம மக்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால் மனித நேய அடிப்படையில் உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை திடீரென அந்த ஏழை மூதாட்டி உயிரிழந்துவிட்டார். ஆனால், அந்த மூதாட்டி சாதி என்பது தெரியாததால், ஊர்மக்கள் அந்த மூதாட்டியின் உடலைத் தொட்டு தூக்கி அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர். இதனால் புதன்கிழமைமுழுவதும் அந்த மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது.
இந்தத் தகவலை எம்எல்ஏ ரமேஷ் பட்டுவாவுக்கு சிலர் தெரிவித்தனர். உடனடியாக தனது இரு மகன்கள் , உறவினர்களுடன் அமனப்பள்ளி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் தொடத் தயங்கிய அந்த மூதாட்டியின் உடலைத் தனது மகன்களின் உதவியால் தனது தோளில் சுமந்து சென்று இந்து முறைப்படி அடக்கம் செய்தார்.
ஒரு மகன் தாய்க்கு செய்யும் அனைத்துக் கடமைகளையும் எம்எல்ஏ ரமேஷ் செய்து, அந்த மூதாட்டியின் உடலை சகலமரியாதையுடன் அடக்கம் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 இது குறித்து எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா கூறியதாவது:
“ ஏழை மூதாட்டியின் உடலை யாரும் தொட்டு தூக்காமல் இறுதிச்சடங்கு செய்யாமல் இருக்கிறார்கள் ஏன் என சிந்திக்கவில்லை, ஏனென்றால், இந்த கிராமத்தைப் பொருத்தவரை அடுத்த சாதியைச் சேர்ந்தவரின் உடலை மற்றொரு சாதியினர் இறந்தபின் தொடமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
தகவல் கிடைத்தவுடன் அந்த கிராமத்துக்குச் சென்றேன், எனது இரு மகன்கள், உறவினர்கள் சிலரையும அங்கு அழைத்துச் சென்று அந்த ஏழை மூதாட்டியின் உடலை எங்கள் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தோம்.
என்னுடைய இரு மகன்களுக்கும் இறுதிச்சடங்கு குறித்த அனுபவம் இல்லாமல் இருந்தனர். ஆனால், உறவினர்களும், நானும் சென்று மூங்கில், மாலை, உள்ளிட்ட பொருட்களை வாங்கிவந்து, தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்து மிகுந்த மரியாதையுடன் அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தோம்.
பெரும்பாலான மக்கள் இந்து முறைப்படி புதைத்து வருவதால், அதன்படியே செய்தேன். ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும், இறந்தபின் மிரியாதைடன் நடத்தப்படுவது அவசியமாகும். அதை நான் ஒரு மனிதராக மனிதநேயத்துடன் செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
எம்எல்ஏ ரமேஷின் செயலைப் பார்த்த கிராம மக்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர். ஒடிசாவில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ரமேஷ் செய்தி குறித்து ஒளிபரப்பாகி வருகிறது.
லொய்டா கிராமத்தைச் சேர்ந்த கனு சரண் மிஸ்ரா கூறுகையில், “எங்களுடைய ரெங்காலி எம்எல்ஏ ரமேஷ் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் உதாரணமானவர். அனைவரும் அவரிடம் இருந்து பாடங்களைக் கற்க வேண்டும்.
அடையாளம் தெரியாத நபர் இறந்துவிட்டால்கூட தனது தொகுதிக்குள் இருந்தால், அவரை மரியாதையுடன் அடக்கம் செய்து, இறுதிச்சடங்குகளை மனிதநேயத்துடன் செய்கிறார்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக