வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

BBC :வெள்ளத்தில் மூழ்கும் கேரளா ... பேரிடம் மீட்பு குழு திணறல்

மலைகளுக்கும், கடற்கரைகளுக்கும் பெயர்பெற்ற
கேரள மாநிலம் தற்போது
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. மலைப்பகுதிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான நிலச்சரிக்கு இதுவரை குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு அதிக அளவில் பெய்த மழையால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உண்டான வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் 700க்கும் மேலானவர்கள் இறந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் நிக் பீக் தெரிவிக்கிறார்.
அங்கு பெய்து வரும் கனமழையால், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 20,000க்கும் மேலானவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது அவர்களாகவே, உறவினர்கள் வீடு, மலையின் மேல் வெள்ளம் உண்டாகாத பகுதிகள் போன்ற வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


கேரளா முழுவதும் 250க்கும் மேலான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தினரும் மீட்பு மற்றும் உதவிப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 "24க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பி வழிவதால் அவை திறந்துவிடப்பட்டுள்ளன," என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் திறந்து விடப்பட்டுள்ள கேரளாவில் உள்ள இடமலையாறு அணை "நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழையால், அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளது. நீர்நிலைகளின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில அரசால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தாலும் கேரள மாநில அரசு துரிதமாக செயல்படுவதால் சேதாரங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன," என கேரளாவில் இருந்து மூத்த செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

"பருவமழை என்பது இயற்கையானதாக இருந்தாலும், 'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்படும் எர்ணாகுளம் மற்றும் இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மலைபாங்கான மாவட்டங்களில் உண்டாக்கப்பட்டுள்ள கட்டட ஆக்கிரமிப்புகள் ஆகியன வெள்ள சேதத்தை அதிகமாக்கியுள்ளன," என்கிறார். வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் முகாம்களில் தஞ்சமடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 உதாரணமாக, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள 57 முகாம்களில் மட்டும் வெள்ளி காலை முதல் மதியம் வரை சுமார் 6,500 பேர் தஞ்சமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமை Getty Images அணைகள் திறந்துவிடப் படுவதைப் பார்க்க அணைகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மூணாறில் சுற்றுலாப் பயணிகள் சிலர் சிக்கியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு, சென்னையில் உள்ள துணைத் தூதரகம் மூலம் அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர்வதால் வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக