திங்கள், 6 ஆகஸ்ட், 2018

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 82 பேர் உயிரழப்பு ரிக்டர் அளவு கோலில் 7.0 .. பலர் காயம்

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் மீண்டும் கடும் நிலநடுக்கம்; 82 பேர் பலிதினத்தந்தி :இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் மீண்டும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகி உள்ளனர்.
 ஆகஸ்ட் 06, மட்டாரம், இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து 100–க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்நிலநடுக்கம் சுற்றுலா தலம் ஆக விளங்கும் அருகிலுள்ள பாலி தீவிலும் உணரப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தெருக்களில் சிதறி ஓடினர். இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகி உள்ளனர். இது இரண்டாவது முறையாக லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இதனால் மட்டாரம் நகரில் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.
 மருத்துவமனையில் இருந்து நோயாளிகளும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

அங்கிருந்த கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. அந்நாட்டு அதிகாரிகள் நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கடலை ஒட்டி அருகில் இருந்த கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த 29ந்தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதில் 17 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இதே பகுதியில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 9.1 என்ற ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக