செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

மருத்துவர் கபீல்கான் :கோரக்பூர் 70 குழந்தைகள் இறப்பு: முதல்வர் அரசியல் செய்கிறார்!

கோரக்பூர் குழந்தைகள் இறப்பு: முதல்வர் அரசியல் செய்கிறார்! மின்னம்பலம் : உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் முதல்வர் ஆதித்யநாத் அரசியல் செய்கிறார் என்று மருத்துவர் கபீல்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியது. இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழந்தன.

இதனால், குழந்தைகள் இறந்தபோது பணியில் இருந்த மருத்துவர் கபீல்கான் உள்ளிட்ட ஒன்பது பேரை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கைது செய்ய உத்தரவிட்டது. அதன்பின் எட்டு மாதங்கள் சிறைக்குப் பின் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே, கடந்த 25ஆம் தேதி லக்னோவில் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து முதல்வர் ஆதித்யநாத் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “குழந்தைகள் இறந்த விவகாரம் எனக்குத் தெரிந்தவுடன் உடனடியாக அதிகாரிகளை மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டு எனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டேன். மறுநாள் நான் மருத்துவமனைக்கும் சென்றேன். அங்கு சென்ற பின்புதான் , ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து நான் விசாரணை நடத்தியதில், கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் மருத்துவர்களுக்குள் நடந்த பூசல்தான் காரணம். மருத்துவர்கள் கையாண்ட விதம் தவறாக இருந்தது. குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளை அழற்சி குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தேன். அது மருத்துவர்கள் கையில்தான் இருந்தது. அதை அவர்கள் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டுக்கு நேற்று (ஆகஸ்ட் 27) டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பதில் அளித்து டாக்டர் கபீல்கான், “முதல்வர் ஆதித்யநாத் பேசுவது அனைத்தும் தவறானது. குழந்தைகள் பிரிவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம், கடிதம் எழுதி, தங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையைச் செலுத்தக்கோரிக் கேட்டிருந்தது. அதைச் செலுத்தினால்தான் ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பணத்தைச் செலுத்தவில்லை.
அதேபோல பச்சிளங்குழந்தைகள் யாரும் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படவில்லை. ஏராளமான குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல்தான் இறந்தனர். ஆனால், முதல்வர் ஆதித்யநாத் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார், மக்களைத் திசை திருப்ப பொய்களைச் சொல்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் கபீல்கான் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற குழந்தைகள் பிரிவில் பணியாற்றியவர். தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக