புதன், 1 ஆகஸ்ட், 2018

மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தொடரும்.. உச்சநீதி மன்றம் தீர்ப்பு!

tamiloneindia -Veera Kumar : தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அதே இடஒதுக்கீடு
தொடரும்- உச்சநீதிமன்றம் அதிரடி- வீடியோ டெல்லி: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொது ஜாதி பிரிவை (OC) சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992ல் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும், 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.
அதோடு, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும், கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், கே.எம். விஜயன், ஜி. சிவபால முருகன் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர், சேகர் நாப்தே மற்றும் யோகேஷ் கண்ணா ஆஜராகினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 69% இடஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். கூடுதல் சீட் ஒதுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞர் விஜயன் குரலை உயர்த்தி வாதிட்டதாகவும், நீதிமன்றத்தில் அவ்வாறு வாதிட கூடாது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.
1994ம் ஆண்டு தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி, 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தியது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக