வியாழன், 5 ஜூலை, 2018

Flashback : எம்ஜியாரின் பினாமியாக இருந்த சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ மனை மற்றும் அறக்கட்டளை ....

savukkuonline.com : ஐஏஎஸ் படித்து விட்டு, கொள்ளையடிக்கும் பூலான் தேவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பூலான் தேவியின் கொள்ளை குறித்த கட்டுரைதான் இது.
ராமச்சந்திரா மருத்துவமனை.  இந்த மருத்துவமனையின் வரலாறு தெரியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.  ராமசாமி உடையார் என்ற சாராய அதிபர் தொடங்கிய கல்லூரி இது.  இவர் மறைந்த எம்.ஜிஆரின் பினாமி.   இன்று தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வித் தந்தைகளுக்கெல்லாம் முன்னோடி.   முதன் முதலில் தனியார் கல்லூரிகளைத் தொடங்கிய ராமசாமி உடையாரும், ஜேப்பியாரும் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பது ஒரு சுவையான ஒத்திசைவு.
இந்த ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி எம்ஜிஆரின் பணத்தால் தொடங்கப்பட்டாலும், எல்லா அயோக்கியர்களையும் போலவே, இவர் கருணாநிதியோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.  கொள்ளையடிப்பவர்கள், ஊழல் பெருச்சாளிகளுக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன ?
ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு)
நாளடைவில், எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்ததை விட, கருணாநிதியோடு மிகுந்த நெருக்கமானது ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம். இந்த நெருக்கம் எந்த அளவுக்கான நெருக்கம் என்றால், பிப்ரவரி 2009ல், ஈழம் தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி.   அவருக்கு முதுகுத்தண்டே இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் அரசியல் சிக்கல்களை சமாளிக்கவே அவ்வாறு சென்று படுத்துக் கொண்டார் என்பதும், அவருக்கு அறுவை சிகிச்சை எதுவுமே நடைபெறவில்லை என்பதுமே உண்மை. இது போன்ற நாடகங்களையெல்லாம் நடத்த முழுக்க ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய அளவுக்கு ராமச்சந்திரா நிர்வாகமும், கருணாநிதியும் நெருக்கம்.


1990ம் ஆண்டு, திருவான்மியூரில் அருகாமை வீட்டு வசதித் திட்டம் என்று ஒரு திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்குகிறது.  அந்த இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களையும் கையகப்படுத்தி, வீட்டு வசதி வாரியம் மூலமாக விற்பனை செய்வதுதான் திட்டம்.
அப்படி கையகப்படுத்தி விற்பனை செய்து, விற்காமல் அரசு கையிருப்பில் வைத்திருந்த எஞ்சிய நிலங்களைத்தான் நக்கீரன் காமராஜ், ஜாபர் சேட் போன்றோர் ஆட்டையைப் போட்டனர்.
இப்படி குடியிருப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மொத்தமாக 7.44 ஏக்கரை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு கருணாநிதி அரசு 1998ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து ஒரு அரசாணையை வெளியிடுகிறது.  அதே ஆண்டில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசுக்கு எழுதிய கடிதத்தில், அப்போது, 1998ல் இருந்த விலை நிலவரத்தின்படி, ஒரு கிரவுன்டு 7.50 லட்சத்துக்கு ராமச்சந்திராவுக்கு கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது. அதற்கு கருணாநிதி அரசின் வீட்டு வசதித் துறை செயலர், பதில் கடிதம் எழுதுகிறார்.   பெசன்ட் நகர் விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துகையில் ஒரு கிரவுன்டு 6.01 லட்சத்துக்குத்தான் கையகப்படுத்தப்பட்டது.  அதனால் ராமச்சந்திராவுக்கும் அதே விலைக்குத்தான் வழங்க வேண்டும் என்று அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடிதம் எழுதுகிறார்.

அந்த அரசாணை
இந்த விபரத்தை அறிந்து கொண்ட, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர், 30.10.1998 அன்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், 6.01 லட்சம் விலை என்பது, நிலத்தை மேம்படுத்தப்பட்டால் (Land development charges) மட்டுமே கொடுக்க வேண்டிய விலை.  வீட்டு வசதி வாரியம் அந்த இடத்தில் எந்த மேம்படுத்தலும் செய்யவில்லை. ஆகையால், விலையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.   (காசே இல்லாத ஏழையல்லவா உடையார் ? )
22.12.1998 அன்று எந்த காரணத்துக்காக நிலம் ஒதுக்கப்பட்டதோ, அதற்கேற்றவாறு, வீட்டு வசதி வாரியமே நிலத்தின் விலையை நிர்ணயம் செய்யலாம் என்று அரசு, வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறது.  அப்போது ஏதோ நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருந்திருக்கிறார் போலும்.  வணிகப்பகுதி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சந்தை விலையின்படி, வளர்ச்சிக் கட்டணம் நீங்கலாக, ஒரு கிரவுன்டுக்கு 17.70 லட்சம் விலை நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரை செய்து, ஒரு விரிவான கடிதத்தை அரசுக்கு 7 செப்டம்பர் 1999 அன்று எழுதுகிறார்.
அதற்குப் பிறகு இந்தக் கோப்பு என்ன காரணத்தாலோ அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.  மீண்டும் 2005ல், இக்கோப்பு மீண்டும் உயிர் பெறுகிறது.  ஆறு ஆண்டுகள் கழித்து, உயிர்பெறும் இக்கோப்பில் அரசு வீட்டு வசதித் துறை செயலாளர், மீண்டும் வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறார்.  அந்தக் கடிதத்தில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வணிக ரீதியாக எந்தச் செயலையும் செய்யவில்லை.   அவர்கள் வெறுமனே ஆராய்ச்சிப் பணிகள் மட்டுமே செய்கிறார்கள்.  (கருணாநிதிக்கு முதுகுத்தண்டு இருக்கிறதா இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சி) ஆகையால் அவர்களுக்கு 6.01 லட்சத்துக்கே நிலத்தை வழங்கலாம் என்று வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதப்படுகிறது. ஆனால், இதற்கிடையே, சோற்றுக்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், ஒரு கிரவுண்டை 4.38 லட்சத்துக்கே தர வேண்டும் என்று அரசை கெஞ்சிக்கெஞ்சிக் கேட்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய அந்த நிலம்
இதற்கிடையே மத்திய தணிக்கையாளரின் தணிக்கை நடைபெறுகிறது.  அவர்கள் தங்கள் தணிக்கை அறிக்கையில், ஒதுக்கப்பட்ட நிலம் ஏற்கனவே ராமச்சந்திரா கல்லூரியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.  ஆனால், நிலத்துக்கான விலை இது வரை அக்கல்லூரியிலிருந்து பெறப்படாமலேயே உள்ளது.  இதனால், வீட்டு வசதி வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பு எழுதினார்கள்.  இந்த தணிக்கை ஆண்டு 2002-2003.
இதைக் காரணமாக காட்டி, அடுத்து மீண்டும் திமுக ஆட்சி வந்ததும்,  அந்த நிலத்தில் ஒரு கிரவுன்டின் விலை வெறும் 6.01 லட்சம்தான் என்று அரசு உத்தரவிடுகிறது.   உத்தரவிட்டு, 3 மார்ச் 2007 அன்று, நிலத்தை 6.01 லட்சம் என்று கணக்கிட்டு, 1998ம் ஆண்டு முதல் வருடத்துக்கு 9.5% விகித வட்டியில் நிலத்தின் விலையை நிர்ணயம் செய்து, உடனடியாக நிலத்துக்கான தொகையை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது.
ஆனால், திமுக ஆட்சி முடிந்த மே 2011 வரை, இந்த உத்தரவு செயல்படுத்தப்படவேயில்லை.
வழக்கமாக திமுக ஆட்சியில், ராமச்சந்திராவுக்கு சாதகமாக வேலைகள் வேக வேகமாக நடப்பது சகஜமே.  ஆனால் அதிமுக ஆட்சியில் மின்னல் வேகமாக வேலைகள் நடந்துள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
இந்த இடத்தில்தான் கதையின் ஹீரோயினான பான்டிட் குயின் நுழைகிறார். இது ஒரு ஆன்டி ஹீரோயின் கதை.  ஆன்டி ஹீரோயின் கதை என்றதும் ஹீரோயின் ஆன்டியா என்று அதிகப்பிரசங்கித்தனமாக கேட்கக் கூடாது.
கருணாநிதி ஆட்சியில் செய்ய முடியாத வேலையை, ஜெயலலிதா ஆட்சியில் சர்வ சாதாரணமாக செய்து முடித்துள்ளார் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் தாளாளர் வெங்கடாச்சலம். அப்படி அவர் செய்து முடிக்க உதவியவர்தான் இக்கதையின் ஹீரோயின்.
கருணாநிதியின் வசனத்தில் வந்த பிரபலமான திரைப்படம் மனோகரா. இத்திரைப்படத்தில் வரும் வில்லியான வசந்தசேனையை சித்தரிக்க வசனம் எழுதியிருப்பார் கருணாநிதி. “வட்டமிடும் கழுகு, வாய் பிளக்கும் ஓநாய், காலை சுற்றி வளைக்கும் மலைப்பாம்பு” என்று. அந்த வசனம் முழுமையாக யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ…  இந்தக் கதையின் கதாநாயகிக்கு முழுமையாக பொருந்தும்.
போதும்டா உன் பில்டப்.  ஹீரோயின் என்ட்ரி என்று வாசகர்கள் துடிப்பது தெரிகிறது. அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல.  தமிழக அரசில் தலைமைச் செயலாளராக இருந்து, தற்போது தலைமைச் செயலாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள ஷீலா பாலகிருஷ்ணன்தான் அந்த பான்டிட் குயின் மற்றும் வசந்தசேனை.
ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு)
தலைமைச் செயலாளராக இருப்பவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் வழக்கமாக பதவி நீட்டிப்பு அளிப்பார்கள்.  ஆனால் பான்டிட் குயின் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, பதவி நீட்டிப்புக்கு பதிலாக, புதிதாக ஒரு பதவியை உருவாக்கி, அந்தப் பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்து வருகிறார் ஜெயலலிதா.  தலைமைச் செயலாளர் பதவி என்பது, ஒரு மாநிலத்தின் உயர்ந்த பதவி.  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கெல்லாம் தலைவர் அந்தப் பதவி. ஆனால், அந்தப் பதவிக்கு மேலாக ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா.  அந்த ஆலோசகர் பதவியில் அமர்ந்து கொண்டு, ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறார் ஷீலா.
கூழைக் கும்பிடு போடுவதில் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நிகரே கிடையாது. ஓ பன்னீர் செல்வமே பிச்சை வாங்க வேண்டும். அவர் இடுப்பை வளைத்து கூழைக் கும்பிடு போடும் அழகே தனி.  இவர் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் இப்படி கூழைக் கும்பிடு போடுகிறார் என்றில்லை.
திமுக ஆட்சியில் ஒரு சாதாரண அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு எப்படி கூழைக் கும்பிடு போடுகிறார் என்று பாருங்கள்.  திமுக ஆட்சி காலத்தில், அமைச்சர்கள் துரை முருகன் மற்றும், ஆற்காடு வீராச்சாமி ஆகியோருக்கு ஷீலா மிகுந்த நெருக்கமானவர்.  இந்த விஷயங்களையெல்லாம் அறியாமல், இந்த ஷீலா பாலகிருஷ்ணன் சொல்வதையெல்லாம் கேட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்.
ஷீலா மற்றும் பாலகிருஷ்ணன் தம்பதியினருக்கு இரு மகன்கள். அதில் ஒரு மகன் பெயர் நாராயணன் பாலகிருஷ்ணன். மற்றொரு மகன் அமெரிக்காவில் உள்ளான்.
பாலகிருஷ்ணன் மற்றும் அவரது இரு மகன்கள்
சென்னையில் உள்ள மகனான நாராயணன் பாலகிருஷ்ணன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.   மன்னிக்கவும். முடிக்கவில்லை.   எம்பிபிஎஸ் படித்துக் கொண்டே இருந்தார்.  இறுதி ஆண்டில், பல பேப்பர்களில் அரியர்கள்.   இப்படி அரியரோடு இருந்தால் எப்படி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆக முடியும் ?   சாதாரணமான பெற்றோர்களுக்கு பிறந்திருந்தால், படித்துத்தான் பாஸாக முடியும். ஆனால் ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பான்டிட் குயினின் மகனாக பிறந்திருந்தால் எதற்காக படிக்க வேண்டும் ?  இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்…. எதற்காக படிக்க வேண்டும் ?

மருத்துவர் நாராயணன் பாலகிருஷ்ணன்
பெயிலான தன் மகனை முதுகலை படித்து அறுவை சிகிச்சை நிபுணராக்க வேண்டும் என்று விரும்பிய பாலகிருஷ்ணன் மற்றும் ஷீலா தம்பதியினர், நான்கு மாதங்களுக்கு முன்னால் நேரடியாக ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலத்தை சந்திக்கின்றனர்.  சந்தித்து தங்கள் மகன் குறித்த விபரங்களை பேசியதும், இது உங்கள் கல்லூரி.  உங்கள் மகன் மருத்துவராகா விட்டால் வேறு யார் ஆக முடியும் என்று, நிகர் நிலை பல்கலைக்கழகம் ஆதலால், உடனடியாக எம்பிபிஎஸ்ஸில் பாஸ் போட்டு, முதுகலை கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கான சீட்டில் இலவசமாக படிக்க வைக்கிறார் வெங்கடாச்சலம்.

பல்வேறு பரிமாணங்களில் கண் மருத்துவர் நாராயணன் பாலகிருஷ்ணன்
அம்மாவின் கார் மீது மகன்கள்
சில மாதங்கள் கழித்து, நாராயணன் படிப்பை தொடங்கியதும், ஷீலாவை சந்தித்து தன்னுடைய பிரச்சினையை எடுத்துச் சொல்கிறார் வெங்கடாச்சலம். மிக மிக கடுமையான வறுமைச் சூழலில் இருக்கும் தனக்கு சேர வேண்டிய 7.44 ஏக்கர் நிலத்தை திமுக அரசு பத்திரப் பதிவு செய்து தராமல் எப்படி ஏமாற்றி வயிற்றில் அடித்தது என்ற விபரங்களை கூறுகிறார்.  வெகுண்டெழுந்த ஷீலா உடனடியாக இதை நான் முடித்துத் தருகிறேன் என்கிறார்.
உடனடியாக களத்தில் இறங்குகிறார் ஷீலா.  ஷீலா, ஜெயலலிதாவை விட அதிக அதிகாரத்தோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.  தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள மோகன் வர்கீஸ் சுங்கத், ஷீலா பால கிருஷ்ணனை ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேலாக சென்று, அவர் அறையில் பார்த்து, அறிவுரை பெறுகிறார்.   ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இந்த துர்பாக்கிய நிலை, தமிழகத்தில் ஒரு நாளும் எந்த அதிகாரிக்கும் வந்தது கிடையாது.
இப்படி நிழல் முதல்வராகவும், ஜெயலலிதாவின் கண்களும், காதுகளுமாகவும் செயல்படும் ஷீலா சொன்ன பிறகு எதிர் கேள்வி கேட்பதற்கு தமிழகத்தில் யாராவது உள்ளனரா என்ன ?
ஷீலா பாலகிருஷ்ணன் சொன்னதும், உடனடியாக, தமிழக வீட்டு வசதி வாரியக் கூட்டம் 1 ஜுலை 2014 அன்று கூட்டப்படுகிறது. 1998ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெறும் ஆறு லட்ச ரூபாய்க்கு 7.44 ஏக்கரை ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு கிரையம் செய்து, விற்பனைப் பத்திரம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்படுகிறது.
வீட்டு வசதி வாரிய தீர்மானம்
14 ஜுலை 2014 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ அறக்கட்டளையின் பெயருக்கு 7.44 ஏக்கர் நிலத்தை 33 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
விற்பனை பத்திரம்
7.44 ஏக்கரில் மொத்தம் 744 சென்டுகள். ஒரு கிரவுன்ட் ஐந்தரை சென்ட் என்று கணக்கிட்டால், 135.2 கிரவுண்டுகள் வருகின்றன. 33.46 கோடியை 35.2ஆல் வகுத்தால், ஒரு கிரவுன்டின் விலை 24 லட்சத்து, 75 ஆயிரத்து 436 ரூபாய் வருகிறது.
14 ஜூன் 2012 அன்று திருவான்மியூரிலேயே உள்ள கெங்கையம்மன் நகரில் 513 சதுர அடி மனை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.   அந்த 513 சதுர அடி வீட்டு மனைக்கு கொடுக்கப்பட்ட விலை 23 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய்.   இந்த விலையை ஒரு உதாரணத்துக்காக அளவுகோளாக கொண்டால், ஒரு சதுர அடியின் விலை, 2012ம் ஆண்டு உள்ளபடி, ஒரு சதுர அடி 5818 ரூபாய் வருகிறது.  ஒரு சதுர அடி 5818 ரூபாய் என்று வைத்துப் பார்த்தால் கூட, ஒரு கிரவுன்ட் ஒரு கோடியே 39 லட்சத்து 63 ஆயிரத்து 200 ரூபாய் வருகிறது.
அப்படிப் பார்த்தால், 135.2 கிரவுண்டுகளுக்கு எவ்வளவு வாங்கியிருக்க வேண்டும் ? 188 கோடியே 78 லட்சத்து 24 ஆயிரத்து 640 ரூபாய் வாங்கியிருக்க வேண்டும்.  இப்படி சலுகை விலையில் எதற்காக வெங்கடாச்சலத்துக்கு இந்த நிலத்தை ஷீலா பாலகிருஷ்ணன் அவசர அவசரமாக விற்க வேண்டும் ? அரசு விதித்துள்ள மதிப்பின்படியே வைத்துக் கொண்டாலும் இந்த நிலம் குறைந்தபட்சம் 189 கோடிக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
2008ல் ராமச்சந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட அதே பகுதியில் அமைந்துள்ள 4756 சதுர அடி வீட்டு மனை முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் ஜாபர் பெயருக்கு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.   அதற்காக அவர்கள் செலுத்திய தொகை 1 கோடியே 15 லட்சத்து 9 ஆயிரத்து 520 ரூபாய்.  இந்த 2008 கணக்கின் படி எடுத்துக் கொண்டால் கூட ஒரு கிரவுன்டின் விலை 58 லட்சம் ஆகிறது.  அப்படி இருக்கையில் ராமச்சந்திரா கல்லூரிக்கு, 24 லட்சத்துக்கு (1998 முதல் வட்டியுடன் சேர்த்து, வட்டி சேர்க்காவிட்டால் ஒரு கிரவுன்ட் வெறும் 6 லட்சம் மட்டுமே) எதற்காக விற்பனை செய்யப்பட வேண்டும் ?
ஜாபர் சேட் மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட டிதம்
எதற்காக 150 கோடியை தள்ளுபடி செய்து விட்டு, இத்தனை அவசரமாக இந்த நிலத்தை விற்பனை செய்தார் ஷீலா ?
ஷீலா இப்படி மலிவு விலையில் 7.44 ஏக்கர் நிலத்தை வழங்கிய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் எவ்வளவு பெரிய ஏழை தெரியுமா ?
வெங்கடாச்சல உடையார்
கடந்த ஆண்டு வெங்கடாச்சலத்தின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், வெங்கடாச்சலத்தின் வீட்டில் இருந்து கீழ் கண்ட வெளிநாட்டுக் கார்கள் நிற்பதை கண்டறிந்தனர்.
TN 07 BP 3999    BMW (3301)
TN 07 AK 3999   Jaguar Silver Grey (S Type)
TN 06 A 3999    PRADO WHITE LAND CRUISER
TN 28 AX 3999   SKODA
TN 09 AQ 5      BMW Dark Cream colour
TN 07 AM 3999   S 329 Mercedes Benz
KL 03 D 9010     S 600 Mercedez Benz
TN 07 BM 3999   BMW Light Brown
TN 06 B 3999    Mercedes Benz Silver Grey
TN 22 CT 3999   Mahindra XUV
TN 20 S 3999    Toyota Qualis    
இவற்றில் வெளிநாட்டுக் கார்களை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.
இப்படிப்பட்ட ஒரு பரம ஏழைக்குத்தான் மலிவு விலையில் 7.44 ஏக்கரை சுத்த விக்கிரக் கிரயம் செய்து தந்திருக்கிறார் ஷீலா.
இந்த அவசர பேரத்தை தொடக்கம் முதலே நடத்தி முடித்தது ஷீலா மற்றும் பாலகிருஷ்ணன் தம்பதியினர்.    வீட்டு வசதித் துறை செயலர், வீட்டு வசதி வாரியம், அதன் மேலாண் இயக்குநர் ஆகிய அனைவருக்கும் சொல்லப்பட்ட செய்தி, முதல்வர் இதை முடிக்கச் சொன்னார் என்பது மட்டுமே.   இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் நேராகச் சென்று இதை சரிபார்க்கவா முடியும்.  அப்படி எளிதாக அதிகாரிகளை சந்திப்பவரா ஜெயலலிதா ?  இந்த துணிச்சலில்தான் பான்டிட் குயின் இந்த பேரத்தை நடத்தி முடித்துள்ளார்.
அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை செய்ததில், ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கிறார்கள்.    இந்த பேரத்தில் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஒரு வீட்டு மனைக்கு 6 லட்சம் வீதம்,  கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.  வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு ஒரு மனைக்கு 12 லட்சம் வீதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்தத் தொகையை வைத்தியலிங்கம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாரும் பிரித்துக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.  இது தவிர கட்சி நிதியாக தனியாக ஒரு தொகை பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு என்னவென்றால், இந்த விவகாரம் ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடந்துள்ளது என்று ஒரு தரப்பும், இல்லை, பான்டிட் குயின் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இதைச் செய்துள்ளார் என்று இன்னொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை கூறுகிறார்கள்.
ஆனால், ஜெயலலிதா இன்று இருக்கும் நிலையில், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை.   அவரது செயலாளர் வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் சொல்வதே வேதவாக்கு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு கூண்டுக்கிளியாக உள்ளார் அவர்.
வெங்கட்ரமணனும் ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.  அவருக்கு ஐந்தாண்டு பணி நீட்டிப்பு அளித்து பதவியில் அமர்த்தியுள்ளார் ஜெயலலிதா. வெங்கட்ரமணன், ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவர்.  ஆனால் இவர்தான் அதிகாரம் மிக்கவர்.
இந்த வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகிய மூவரும்தான் தமிழகத்தையே ஆட்டிப் படைக்கிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.   இதில் மூன்று பேருமே ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   கிட்டத்தட்ட அரசு நிர்வாகம் ஒரு முதியோர் இல்லம் போல மாறியுள்ளது என்றால் அது மிகைச்சொல் அல்ல.
காவல்துறை வட்டாரங்களில், ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ராமானுஜமே பயப்படுகிறார் என்றே கூறுகின்றனர்.  சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜின் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும், சென்னையில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ஜார்ஜ் மாற்றப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம், இந்த பான்டிட் குயின்தான் என்கிறது காவல்துறை வட்டாரம்.  ஷீலா பாலகிருஷ்ணனும் ஒரு மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது.   ஜார்ஜ் குட்டி மலையாளி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஜார்ஜுக்கு ஆதரவாக, டிஜிபி ராமானுஜத்தையே மிரட்டுகிறார் என்றும், ராமானுஜம் யதார்த்த நிலவரத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.   ஷீலா தவறு செய்கிறார் என்று ராமானுஜம் நாளைக்கே ஒரு அறிக்கை அனுப்பினாலும், அந்த அறிக்கை ஷீலாவின் கண்களைத் தாண்டி ஜெயலலிதாவை அடைய முடியாது.  அப்படி ஒரு அறிக்கையை அனுப்பி விட்டு, ராமானுஜம் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்பது முகத்தில் அறையும் உண்மை.
நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி ஆகிய இரண்டு மட்டுமே ஊடகங்கள் என்று தன்னுடைய அறிக்கைகளையும், தன்னுடைய படங்களையும் பார்த்துப், பார்த்து புளகாங்கிதம் அடையும் ஜெயலலிதாவின் கண்களுக்கு உண்மை நிலவரத்தை கூறிப் புரிய வைக்க, தமிழகம் முழுக்க ஒரு நாதியும் இல்லை என்பதே வேதனையான உண்மை.
ஜெயலலிதா மணலில் முகம் புதைத்துள்ள நெருப்புக் கோழியாக இருக்கும் வரை, ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பான்டிட் குயின்களின் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக