சனி, 14 ஜூலை, 2018

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி ... அலிபாபா ஜாக்கை பின்தள்ளினார்

மின்னம்பலம்: அலிபாபா குழுமத்தின் ஜாக் மாவைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்
பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு ஜூலை 12ஆம் தேதி 1.6 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றின் விலை ரூ.1,099.8 ஆக அதிகரித்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளதாக புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் கூறுகிறது. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் ஜூலை 11ஆம் தேதி பங்கு மதிப்பு அடிப்படையில் அம்பானி இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை சிறப்பான வரவேற்பைப் பெற்றதையடுத்து முதலீட்டாளர்கள் ரிலையன்ஸின் இதர பிரிவுகளிலும் அதிகளவில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். குறிப்பாக பெட்ரோகெமிக்கல் பிரிவில் உற்பத்தியும் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 4 பில்லியன் டாலரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார் அம்பானி. முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டில் இறந்தபிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முகேஷ் அம்பானியும் அவரது சகோதரரான அனில் அம்பானியும் பிரித்துக்கொண்டனர். அதன் பின்னர் சில்லறை விற்பனை, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முகேஷ் அம்பானி கொடிகட்டிப் பறக்கிறார்.
சென்ற ஆண்டில் ஹாங்காங் நாட்டின் ரியாலிட்டி தொழில் துறையைச் சேர்ந்த லி கா ஷிங்கைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரராக அம்பானி உருவெடுத்தது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக