திங்கள், 2 ஜூலை, 2018

ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினி சந்திப்பு! வர்த்தக முயற்சிகள்?

ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினி சந்திப்பு!மின்னம்பலம்: மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று (ஜூலை 2) சந்தித்துப் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தப் பின்னர் அவர் அரசியல் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பை சென்றுள்ள லதா ரஜினிகாந்த், சிவாஜி பார்க் பகுதியிலுள்ள மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவின் இல்லத்துக்கு இன்று சென்று அவரையும் அவரது மனைவி ஷர்மிலாவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தை இன்று சந்தித்து பேசினேன். இந்தச் சந்திப்பின்போது அரசியல், சினிமா மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசினோம்” என்று ராஜ் தாக்ரே பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட வாரியாக ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ரஜினி மக்கள் மன்றம் குறித்த அறிவிப்பை அவரது மகள் எப்படி வெளியிடலாம். அவர் கட்சியில் என்ன பொறுப்பில் உள்ளார் என்று விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவை சந்தித்து அரசியல் பேசியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக